சிங்காரவேலர் நினைவுச் சின்னத்தை அரசு பாதுகாக்க வேண்டும்- ஆர்.நல்லகண்ணு கோரிக்கை

இந்தியப் பொதுவுடமை இயக்கத்தின் தந்தைகளில் ஒருவரான ம. சிங்காரவேலரின் நினைவுச்சின்னத்தைப் பாதுகாக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆர். நல்லகண்ணு கோரி உள்ளார்.

லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்துக்குள் அமைந்துள்ள சிங்காரவேலரின் நினைவுச்சின்னத்துக்கு வியாழக்கிழமை ஆர். நல்லகண்ணு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவிற்கு முழு சுதந்திரம் வேண்டும் என்று முதன் முதலாக 1922 ம் ஆண்டு பிஹாரில் உள்ள கயாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டில் எடுத்துக் கூறியவர் சிங்காரவேலர். நாட்டில் முதல் மே தினத்தைக் கொண்டாடியவர். சென்னை மாநகராட்சியின் உறுப்பினராக இருந்தபோது பள்ளிகளில் மாணவர்கள் உடல் ரீதியாக தண்டிக்கப்படுவதற்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்தவர். மகாகவி பாரதியார் இறந்தபோது அவரது சடலத்தைத் தூக்கியவர்களில் சிங்காரவேலரும் ஒருவர்.

இவ்வாறு பல மகத்தான சிறப்புகள் மற்றும் பகுத்தறிவு சிந்தனைகளைக் கொண்ட அவரது நினைவுச்சின்னத்தைப் பாதுகாக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிங்காரவேலருடைய 154-வது பிறந்தநாள் விழா வரும் 18-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர்கள் பி.சேதுராமன், எம். அப்பாதுரை மற்றும் தமிழ்நாடு மீனவர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் சசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE