ஏஎன்-32 விமானம் காணாமல் போன இடத்தின் தென்பகுதியில் 80 முதல் 90 கி.மீ. தொலைவில் விழுந்திருக்கலாம் என இந்த விமானத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் ஆலோசகராக ஈடுபட்டுள்ள விஞ்ஞானி டாக்டர் ஜெயபிரபு கூறியுள்ளார்.
சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் ஆராய்ச்சி ஆலோசகரும், பேராசிரியராகவும் பதவி வகித்து வருபவர் விஞ்ஞானி டாக்டர் டி.ஜெயபிரபு. இவர் காணாமல் போகும் விமானங்களை கண்டறிவதற்காக உலகிலேயே முதன்முறையாக சீஸ்மிக் அதிர்வுகளை கண்டறியும் முறையைக் கண்டுபிடித்தார். இதற்கு ‘காலம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு மலேசியாவின் எம்எச்-370 விமானம் விபத்துக்குள்ளான இடத்தைக் கண்டுபிடித்தார்.
அத்துடன் கடந்த ஆண்டு கடலோர காவல்படையின் டார்னியர் விமானம் விபத்துக் குள்ளானபோது விமானம் விழுந்த இடத்தை ஜெயபிரபு சரியாக கண்டுபிடித்துக் கொடுத்தார். இந்நிலையில், தற்போது காணாமல் போன ஏஎன்-32 விமானத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் கடலோர காவல்படை இவரிடம் ஆலோசனை கேட்டுள்ளது.
‘தி இந்து’வுக்கு டாக்டர் ஜெயபிரபு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:
ஏஎன்-32 விமான விபத்துக்கான காரணம் இதுவரை உறுதியாக கண்டறியப்படவில்லை என்றாலும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம். இந்த விமானத்தில் ஏற்கெனவே 3 முறை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் சம்பவ தினத்தன்று காலை 8.30 மணிக்கு தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. 11.45 மணிக்கு போர்ட்பிளேர் சென்றடைய வேண்டும். 8.45 மணிக்கு விமானம் இயல்பான நிலையில் சென்றுள்ளது. 9.12 மணிக்கு 150 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்றபோது விமானம் மாயமானதாக ரேடார் கருவியில் தகவல் பதிவாகியுள்ளதாக விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது.
அந்த இடத்தில் விமானம் இடது பக்கமாக திரும்பியுள்ளதாக தெரிகிறது. அப்போது விமானி விமான கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் அனுப்பியுள்ளார். அதில் வானிலை மோசமாக உள்ளதாக கூறியுள்ளார். அப்போது தனக்கு மாற்றுப் பாதை அமைத்துத் தரும்படி கூறியுள்ளார். அதன் பிறகுதான் விமானம் மாயமாகியுள்ளது.
பொதுவாக பயணிகள் விமானம் வானில் பறக்கும் போது திடீரென அது செல்லும் பாதையில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் மாற்றுப் பாதையில் அந்த விமானம் இயக்கப்படும். ஆனால், ராணுவ விமானங்கள் பறப்பதற்கு ஒருவழி பாதை மட்டும்தான் ஒதுக்கப்படுகிறது. அந்த சமயத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட விமானத்தின் பைலட் விமானக் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள முடியாது.
மேலும், மாற்றுப் பாதையில் விமானம் திரும்பியதும் அப்பாதையில் அழுத்தம் அதிகமாக இருக்கும். சாதாரணமாக நாம் வாகனங்களில் திடீரென இடது, வலது பக்கம் திரும்பும் போது திடீரென ஒரு அழுத்தம் ஏற்படும். அதுபோல மாயமான விமானம் 150 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்றபோது திடீரென மாற்றுப் பாதைக்கு திரும்பியதும் உடனே ஏதேனும் அழுத்தம் ஏற்பட்டு விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது.
அப்போது விமானம் உயரம் குறைய குறைய அந்த விமானத்தை கடல் உள்வாங்கிக் கொள்ளுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதைத் தவிர வேறு வாய்ப்புகள் இருக்க வாய்ப்பில்லை. விமானம் மாயமான இடத்தில் தெற்கு பகுதியில் 40 முதல் 50 நாட்டிக்கல் மைல் தொலைவில் விழுந்திருக்க வாய்ப்புள்ளது. ஒரு நாட்டிக்கல் மைல் என்பது 1.85 கி.மீ. தூரமாகும். அதன்படி பார்த்தால் சுமார் 80 முதல் 90 கிலோ மீட்டர் தொலைவில் விமானம் விழுந்திருக்கலாம்.
மேலும், விமானம் கடலில் விழும்போது வானில் பறந்த வேகத்தை விட இருமடங்கு வேகத்தில் வந்து விழுந்து கடலுக்குள் 3 ஆயிரத்து 200 அடி முதல், 3 ஆயிரத்து 400 அடி ஆழம் வரை சென்றிருக்கலாம். வங்காள விரிகுடா கடல் பகுதி களிமண் தன்மை அதிகம் உள்ளது. பொதுவாக களிமண்ணில் எந்த பொருள் விழுந்தாலும் அது உள்ளே போய் கொண்டே இருக்கும். எனவே அந்த இடத்தில் விமானம் விழுந்தால் சுமார் 80 சதவீத பாகம் கடலுக்குள் சென்றிருக்க வாய்ப்புள்ளது. மீதியுள்ள 20 சதவீத பாகம் கடல் மேல் பரப்புக்கு மிதந்து வந்தால் அதைக் கண்டுபிடிக்கலாம்.
மேலும், இவ்வாறு களிமண்ணுக்குள் விமானம் சென்றிருந்தால் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் சோனார் கருவியில் இருந்து அனுப்பும் கதிர்வீச்சு விழுந்த விமானத்தின் மீது படாது. இடையில் உள்ள களிமண் அதைத் தடுத்துவிடும். டார்னியர் விமானம் இதுபோல் களிமண்ணில் சிக்கிக் கொண்டதால்தான் அதைத் தேடிக் கண்டுபிடிக்க 35 நாட்கள் ஆனது. வங்காள விரிகுடா கடல் பகுதி என்பது 27 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. அத்துடன், கடலுக்கடியில் உள்ள களிமண்ணின் தன்மை நான்கரை மணி நேரத்துக்கு ஒரு முறை மாறிக் கொண்டே இருக்கும். அதனால், மண்ணின் தன்மைக்கு ஏற்ப விழுந்த விமானம் நகர்ந்து கொண்டே இருக்கும்.
மேலும், விமானம் நிலப் பகுதியில் விழுந்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவு. ஒருவேளை நிலப்பகுதியில் விழும் நிலை ஏற்பட்டால் இந்த விமானம் நிலப்பகுதியில் எளிதாக இறங்கும் திறன் கொண்டது. எனவே நிலத்தில் விழுந்திருக்க வாய்ப்புகள் குறைவு.
இவ்வாறு டாக்டர் ஜெயபிரபு கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago