திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் ஹோட்டல்களுக்கு ரூ.10 விலையில் விற்கப்படும் நோய்வாய்ப்பட்ட கோழிகளால், அசைவப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 8 ஆயிரம் கோழிப்பண்ணைகள் உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், உடுமலை, பொங்கலூர் பகுதிகளில் அதிக அளவில் கோழிப்பண்ணைகள் உள்ளன.
இந்தப் பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலை கோழிவளர்ப்புக்கு உகந்தது என்பதால், அதிக அளவில் கோழிப்பண்ணைகள் அமைக்கப் பட்டுள்ளன. அண்மையில் பல்லடம் அருகே நோய்வாய்ப்பட்டு இறந்த கோழிகளை ரூ.10-க்கு விற்பதாகக் கூறி 3 பேரை உணவு பாதுகாப்புத் துறையினர் பிடித்தனர்.
பல்லடம் அருகே அய்யம்பாளையம், ஆறாக்குளம் பகுதியில் வெயிலுக்கு இறந்த கோழிகளையும், நோய்வாய்ப்பட்டு இறக்கும் கோழிகளையும் ரூ.10-க்கு விற்பதாக பிடிபட்ட ராஜு(35) அளித்த தகவலின்பேரில், உணவுக் கடைக்காரர்கள் தனபால்(27), தங்கம்(40) ஆகியோரும் சிக்கினர். அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்லடத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆ.அண்ணாதுரை கூறியதாவது: பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் வெயில் காரணமாகவோ, நோய்வாய்ப்பட்டோ அல்லது நோய்த் தொற்றுக்கு ஆளாகியோ இறந்தால், அவற்றை முறையாக அப்புறப்படுத்தாமல், அவற்றை விற்கும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அவற்றை வாங்கிச் சாப்பிடும் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
கறிக்காக மட்டுமே 40 நாட்களில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளில் நஞ்சு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கும் சூழலில், நோய்வாய்ப்பட்டு இறக்கும் கோழிகளை உண்பதால் ஏற்படும் ஆபத்துகள் அச்சத்தை ஏற்படுத்தக் கூடியவை என்றார்.
இதேபோல, பல்லடத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, “நோய்வாய்பட்டு இறந்த கோழிகளை எரிக்க பல்லடம் அருகேயுள்ள வெங்கிட்டாபுரத்தில் கோழி எரி உலை, ரூ. 5 லட்சம் மதிப்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. ஆனால் அது திறக்கப்படாமல், பயன்பாடின்றிக் கிடக்கிறது.
இறந்த கோழிகளை மொத்த வியாபாரிகள் சிலர் வாங்குகின்றனர். அவர்களது ஆட்கள் இருசக்கர வாகனங்களில் பண்ணைகளுக்குச் சென்று, இறந்த கோழிகளை வாங்கி வருகின்றனர். அவற்றின் பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டும் அப்புறப்படுத்திவிட்டு, கறியாக மாற்றி கடைகளுக்கு அனுப்புகின்றனர்.
பல்லடம், அருள்புரம், லட்சுமி மில் உள்ளிட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டால் மட்டுமே, இதைக்கட்டுப்படுத்த முடியும்.
சாலையோர ஹோட்டல்கள், டாஸ்மாக் பார்கள் மற்றும் மதுக் கடை அருகேயுள்ள கடைகள் மற்றும் ஹோட்டல்களில் இதுபோன்ற நோய்வாய்ப்பட்ட கோழிகள் விற்கப்படுகின்றன. ஏற்கெனவே, இறந்த கோழிகளை ஹோட்டல்களுக்கு விற்றதாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், நோய்வாய்ப்பட்ட கோழிகள் விற்பனை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்றனர்.
பண்ணை உரிமையாளர் ஒருவர் கூறும்போது, “சில பண்ணைகளில் நோய்வாய்ப்பட்ட கோழிகளை சிலர் விற்பனை செய்திருக்கலாம். அதற்காக அனைவரும் அவற்றை விற்கின்றனர் என்று கூறுவது தவறு. நோய்வாய்ப்பட்டு இறந்த கோழிகளை விற்பனை செய்வது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட பண்ணை உரிமையாளர்கள், அடுத்த 6 மாதங்களுக்கு கோழிக்குஞ்சுகளை வளர்க்க அனுமதி தருவதில்லை” என்றார்.
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கே.தமிழ்செல்வன் கூறும்போது, “பல்லடம் பகுதியில் இறந்த கோழிகளை தொடர்ந்து விற்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 3 பேரைப் பிடித்தோம். அவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்தப் பகுதியில் தொடர்ந்து தீவிர ஆய்வு மேற்கொண்டுவருகிறோம். பொதுமக்கள் யாரேனும் தகவல் அளித்தால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
உடல் உறுப்புகள் செயலிழக்கும்…
இதுகுறித்து மருத்துவர்கள் தரப்பில் கூறும்போது, “கறிக்காக மட்டுமே வளர்க்கப்படும் கோழிகளின் உடலில் அதிக அளவில் ரசாயனம் செலுத்தப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு பிராய்லர் கோழிகளை அதிக அளவில் தரக்கூடாது என்று வலியுறுத்தி வருகிறோம். நோய்வாய்பட்டு இறக்கும் கோழிகளை நாம் உண்ணக்கூடாது. அதனால் வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள் உள்ளிட்டவை ஏற்படும். தொடர்ந்து உண்டால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, செயலிழக்கும் அபாயம் ஏற்படும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
23 hours ago
தமிழகம்
1 day ago
தமிழகம்
1 day ago