பார்வையற்ற பட்டதாரிகளை மிரட்டிப் பணியவைப்பது நியாயமா? - விஜயகாந்த் கேள்வி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிவரும் பார்வையற்ற பட்டதாரிகளை மிரட்டிப் பணியவைக்க முயற்சிப்பது நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினையில் அரசு மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக தங்களது 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

அரசு வேலை வாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகிதம் ஒதுக்கப்படும் என்று தேர்தலின்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், போராடிவரும் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கையை நேரிடையாக முதல்வரைச் சந்தித்து கொடுப்பதற்கு அவர்கள் கேட்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

இந்த ஆட்சியின் சமூக நலத்துறை அமைச்சர், அவர்களை சந்தித்தபின், அமைச்சருடனான சந்திப்பில் எங்களுக்கு எந்த உறுதியும் தரவில்லை, நம்பிக்கை அளிப்பதாகவும் இல்லை. நாங்கள் கேட்பதெல்லாம் ஒருமுறை முதலமைச்சரை சந்திக்க வேண்டும் என்பதுதான் என்று பேட்டி கொடுத்தார்கள்.

அடுத்த நாள் பத்திரிகையில் இந்த மாற்றுத் திறனாளிகளை காவல்துறை வாகனங்களில் ஏற்றி, சென்னைக்கு வெளியே சுடுகாட்டுக்கு பக்கத்திலும், மதுராந்தகத்திலும் இறக்கிவிடப்பட்டதாக செய்திவந்துள்ளது. அதோடு தொலைக்காட்சியில் போராடும் மாற்றுத்திறனாளிகளை காவல்துறை கையாளுகிற விதமும் சற்று கடுமையாகவே தெரிகிறது.

இயலாதவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்வதுதான் மனிதாபிமானம் ஆகும். மக்களுக்கு சேவை செய்வதுதானே ஒரு அரசின் கடமை. அதற்கு மாறாக தங்கள் நியாயத்திற்காக போராடுகிறவர்களை மிரட்டி பணியவைக்க நினைப்பது என்ன நியாயம்?

எனவே, மாற்றுத் திறனாளிகள் பிரச்சினையை இந்த அரசு மனிதாபிமானத்தோடு அணுகி, முதல்வர் போராடுகிற மாற்றுத்திறனாளிகளை சந்தித்து, அவர்கள் கேட்பதில் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என்று விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE