இன்ஸ்பெக்டர் மாடசாமியிடம் முதல்வர் நேரில் விசாரிக்க வேண்டும்: இட மாறுதலுக்கு எதிராகக் குமுறும் மதுரை போலீஸ்!
கடந்த நவம்பர் 1ம் தேதி திருப்பரங்குன்றம் மலையில் வெடிகுண்டுப் புதையலை கண்டுபிடித்தவர் இன்ஸ்பெக்டர் மாடசாமி.
விசாரணையில், மதுரைப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட எட்டு வெடிகுண்டு சம்பவங்களுக்கும் இதற்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அத்தனை வழக்குகளையும் விசாரிப்பதற்காக மாடசாமி தலைமையில் மதுரை மாநகர், புறநகர், விருதுநகர் மாவட்ட போலீஸாரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்களின் விசாரணையில், குண்டு வைத்த தீவிரவாதிகளைப் பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் சிக்கியதோடு, தீவிரவாதிகளைக் கண்காணிக்கும் போலீஸ் பிரிவுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த பேர விவகாரங்களும் அம்பலத்துக்கு வந்தன. போலீஸ்காரர் ஒரு வரின் வங்கிக் கணக்கில் தீவிரவாதிகள் 25 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்திய விவகாரமும் தனிப்படை கையில் ஆதாரத்துடன் சிக்கியது. இதுகுறித்து கடந்த 23.10.13 தேதியிட்ட 'தி இந்து'வில் செய்தி வெளியாகி இருந்தது.
அன்றைய தினமே இன்ஸ்பெக்டர் மாடசாமி அதிரடியாக நெல்லைக்கு மாற்றப்பட்டார். இதுதான் இப்போது, மதுரை போலீஸார் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மதுரை போலீஸ் வட்டாரத்திலிருந்து ஆதங்கத்துடன் பேசியவர்கள், 'வெடிகுண்டு வழக்குகளை மாடசாமி விசாரிக்க ஆரம்பித்ததுமே அவரை மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள். இருந்தாலும் விசாரணையில் தீவிரம் காட்டிய மாடசாமியின் தனிப்படை, அல்-முன்தஹீம் ஃபோர்ஸ் ஆட்களையும் கண்டுபிடித்துவிட்டது.
பரமக்குடி முருகன், அரவிந்த் ரெட்டி கொலைகளில் பொய்யான குற்றவாளிகள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையை கடந்த ஜூனிலேயே சொல்லிவிட்டார் மாடசாமி. அவரது விசாரணை போலீஸிலேயே சிலருக்கு சிக்கலை உண்டாக்கியது. அதனால், அவரை 18.8.13ல் நெல்லைக்கு மாறுதல் செய்ய வைத்தனர். ஆனாலும், அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகச் சொல்லி இட மாறுதல் நிறுத்திவைக்கப்பட்டது. இப்போது, யாரையோ காப்பாற்றுவதற்காக மாடசாமியை பலிகடா ஆக்கி இருக்கிறார்கள்.
முதல்வருக்கு தாங்கள் கொடுத்த அறிக்கை பொய்யாகக் கூடாது என்பதற்காக நேர்மையாக விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் ஒருவரை பழிதீர்க்கிறார்கள். மாடசாமியின் கையில் இருக்கும் முக்கிய ஆதாரங்களைப் புதைக்க சதி நடக்கிறது. எனவே மாடசாமியை முதல்வரே நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும். அப்படி அழைத்தால் அதிபயங்கர உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். வெடிகுண்டுச் சம்பவங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்" என்று சொன்னார்கள்.