உள்ளாட்சி: செத்து மடியும் கால்நடைகள்... பட்டினியில் விவசாயக் கூலிகள்: நமது மவுனம்... தேசிய அவமானம் இல்லையா?

By டி.எல்.சஞ்சீவி குமார்

ஈரோடு மாவட்டத்தில் கர்நாடக மாநில எல்லையோரம் இருக் கிறது பர்கூர் மலைக் கிராமம். சமவெளிகளே தண்ணீர் இல்லாமல் தவிக்கும்போது இந்த மலைக் கிராமத்தை மொத்தமாக காவு வாங்கத் துடிக்கிறது வறட்சி. எங்கேயும் பச்சையைப் பார்க்க முடியவில்லை. ஒரு நாளைக்கு அரைக்குடம் தண்ணீர் கிடைத்தால் அதிசயம். இந்த மலைக் கிராமத்தின் சிறப்பு பர்கூர் நாட்டு ரக மாடுகள். பொத்திப் பொத்திப் பாதுகாத்து வளர்ப்பார்கள். மாட்டுடன் அவர்கள் கொண்ட பந்தம் அலாதியானது.

குடும்பத்தில் ஒருவரைப் போன்று பாவிக்கிறார்கள். இவை மற்ற நாட்டு மாடுகளைவிட இரு மடங்கு அதிகம் உழைக்கும். கடும் வறட்சியைத் தாங்கி வளரும். நான்கு நாட்கள் வரையில்கூட தண்ணீர் குடிக்காமல் தாங்கும். கரடு முரடான மண்ணில் அசராமல் உழவடிக்கும். நான்கு மாடுகளின் பாரத்தை ஒற்றை மாடு சுமக்கும்.

ரேக்ளா பந்தயத்தில் ஓடுவதிலும் பெயர் பெற்றவை இவை. ஆடி மாதம் அந்தியூர் தேர் திருவிழாவில் நடக்கும் பிரசித்திப் பெற்ற குதிரை சந்தையில் இந்த மாடுகள் ஒவ்வொன்றும் 20 ஆயிரம் தொடங்கி 40 ஆயிரம் வரை விலை போகும். நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்குவார்கள்.

ஆனால், இன்று அந்தக் கிராமமே சாவு வீட்டைப்போல இருக்கிறது. இரு மாதங்களாக தண்ணீர் இல்லாமல் மடிந்து வருகின்றன மாடுகள். மலை காய்ந்துக்கிடக்கிறது. தீவனத்துக்கு வழியில்லை. மனிதருக்கே தண்ணீர் இல்லாதச் சூழலில் எத்தனை நாட்கள் தான் மாடுகள் தாங்கும்? வேறு வழி யில்லாமல் வத்தலும் தொத்தலு மாகிப்போன மாடுகளை விற்கத் தொடங்கிவிட்டார்கள்.

இரு மாதங்களில் மட்டும் இரண்டா யிரத்துக்கும் அதிகமான பர்கூர் மாடுகள் அடிமாடுகளாக விற்கப் பட்டிருக்கின்றன. இப்போது அடி மாட்டுக்கு வாங்கக் கூட ஆளில்லை. மாடுகள் செத்து மடிவதற்குள் விற்றால்போதும் என்று அடித்துப் பிடித்து கறிக் கடைகளுக்கு ஆயிரத் துக்கும் இரண்டாயிரத்துக்கும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். டெல்டா மண்ணிலும் கிட்டத்தட்ட நிலைமை இதுதான்.

தூத்துக்குடி மாவட்டம், தீத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி சுப்பையா. வயது 70-க்கு மேலாகிவிட்டது. மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தில் வேலை வழங்காததால் பட்டினியில் வாடுவதாக உயர் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியிருக்கிறார். அந்தக் கிராமத்தில் 500 பேர் இவரைப் போல பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். விளக்கம் அளிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்றம்.

இங்கே என்ன செய்திருக்க வேண்டும் மாநில அரசு? மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்குக் கூடுதலாக 50 நாட் கள் வேலை தர வேண்டும் என்பது மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் அடிப்படை விதிகளில் ஒன்று. அதன்படி அந்த மலைக் கிராமத்தில் 150 நாட்களுக்கு வேலை கொடுத்து அதன் மூலம் நீர் ஆதாரங்களைப் புனரமைத்து விவசாயத்தையும், மக்களின் வாழ்வாதாரமான மாடுகளையும் காப்பாற்றி இருக்க வேண்டாமா?

வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதி களுக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை தர வேண்டும் என்பதும் மேற் கண்ட திட்டத்தின் மற்றொரு அடிப் படை விதி. தமிழகம் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 150 நாட்கள் வேலையையும் கூலியையும் கொடுத்து அந்த முதியவரை பட்டி னியில் இருந்து காப்பாற்றி இருக்க வேண்டாமா?

மேற்கண்ட இரு சம்பவங்கள் உதாரணங்கள் மட்டுமே. ஒட்டுமொத்த தமிழக கிராமங்களின் நிலையும் இதுதான். பானைச் சோற் றுக்கு ஒரு சோறு பதம். அசாதாரண நிலைமை இது. கிட்டத் தட்ட 150 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் பேரிடரைப் போன்ற தொரு வறட்சி இது.

நகரத்தில் இருப்பவர்கள் பலருக்கும் கடைக்கோடி கிராமத்தில் வசிக்கும் சாமானியனின் துயரம் புரிய வாய்ப்புகள் குறைவு. நகரத்தில் வசிக்கும் ஏழைகூட ஏதோ ஒரு வேலை பார்த்து பிழைத்துக்கொள்ள முடிகிறது. கிராமத்தில் நிலைமை அப்படி எல்லாம் இல்லை. ஒன்று, விவசாயிகள் வேலை தர வேண்டும் அல்லது நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை பார்க்க வேண்டும். இன்று இரண்டும் இல்லை. அன்றாட உணவுக்கே வழி இல்லாமல் வறுமையில் உழல்கிறார்கள் கூலித் தொழிலாளர்கள். ஆனால், நாம் இவற்றை எல்லாம் போகிற போக்கில் சாதாரணமாகக் கடந்துச் சென்றுகொண்டிருக்கிறோம்.

யாரையும் குறை சொல்ல வேண்டும் என்பது நோக்கம் அல்ல. இவை எல்லாம்கூட நம்மை பாதிக்காவிட்டால் வேறு எதுதான் நம்மை பாதிக்கும்? நமக்கு நிறைய வேலை இருக்கிறதுதான். குடும்பத்தைக் கவனிக்க வேண்டும். பிள்ளைகளுக்குப் பள்ளிக் கட்டணம் கட்ட வேண்டும். மாதாந்திர தவணை அடைக்க வேண்டும். வட்டிக்காரனுக்கு பதில் சொல்ல வேண்டும். மாதம் ஒருமுறையாவது குடும்பத்தினரை திரைப்படத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

பல்லைக் கடித்துக்கொண்டு மாதக் கடைசியோடு மல்லுக்கட்ட வேண்டும். எல்லாம் இருக்கட்டும். குறைந்தபட்சம் விவசாயிகளின் பிரச்சினைகளை, கடைக்கோடி கிராமத்து விவசாயக் கூலித் தொழிலாளர்களின் பிரச்சினை களைப் பொதுவெளியில் விவாதிக்க லாம்தானே. தலைநகரம் டெல்லியில் முதிய பெண்மணிகள் உட்பட விவ சாயிகள் 15 நாட்களுக்கு மேலாக போராடுகிறார்கள். நம் அப்பத்தாக்கள் அங்கே அப்படி போராடுவது நமக்கு அதிர்ச்சியாக இல்லையா? அவ மானமாக இல்லையா?

இவ்வளவு நடக்கிறது. விவசாயி களை சந்திக்காமல் திரைப்பட நடிகர் களைச் சந்திக்கிறார் மத்திய நிதி அமைச்சர். சாமியார் அழைத்தால் ஓடோடி வரும் பிரதமர், ‘என்ன, ஏது?’ என்று விவசாயிகளிடம் ஒரு வார்த்தை கேட்க மறுக்கிறார். மீண்டும் ஹைட்ரோ கார்பன் விவகாரத்தை வெளியே எடுக்கிறது மத்திய அரசு. தமிழகத்தை நாட்டின் பரிசோதனைக் கூடம் ஆக்காமல் விடமாட்டோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்க்கிறது அது. நாங்கள் பரிசோதனைக் கூட எலிகளாக மாறத் தயாராக இல்லை என்று நமக்கும் சேர்த்து செத்த எலிகளை வாயில் கவ்விக்கொண்டுப் போராடுகிறார்கள் விவசாயிகள்.

சுதந்திரத்துக்குப் பிறகான வர லாற்றில் தமிழகம் முன் எப்போதும் சந்தித்திராத ஆபத்துகள் இவை. வரலாற்றுத் துயரம் இது. ஆனால், இவை எல்லாம் தமிழகத்தின் பெரு வாரியான பொதுவெளியில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியி ருக்கிறது? இளையராஜா - எஸ்.பி.பி. பஞ்சாயத்து எனில் பரபரப்புப் பற்றிக்கொள்கிறது. சினிமா கலைஞர் களின் அந்தரங்கம் எனில் பரபரப்பு இன்னும் இரு மடங்கு அதிக மாகிறது. விவசாயிகளுக்கு பிரச்சினை என்றால் மட்டும் உச்சுக் கொட்டி ஒதுங்கிக்கொள்கிறோம். நம் வயிற்றுக்கும் சேர்த்துதானே அவர்கள் உழைக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் விவசாயத்துக்கு ஆதாரமாக நிற்க வேண்டிய உள் ளாட்சி நிர்வாகம் மொத்தமாக முடங் கிக்கிடக்கிறது. உள்ளாட்சித் தேர்தலை இப்போதைக்கு நடத்த வழியே இல்லை என்று நீதிமன்றத்தில் கைவிரிக்கிறது மாநிலத் தேர்தல் ஆணையம். பாவம், அது என்ன செய்யும்? தமிழக அரசின் குரலைத்தானே எதிரொலிக்க முடியும்.

ஆனால், சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தலைப் பாருங்கள், அங்கே தினகரனுக்கு பிரச்சாரம் செய்ய 152 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். யார் அவர்கள்? முதல்வர், துணை சபாநாயகர், அமைச்சர்கள், நாடாளு மன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள். உண்மையில் இவர்கள் இருக்க வேண்டிய இடங்கள் டெல்லி போராட்டக் களமும் நெடுவாசல் போராட்டக் களமும்தானே!

இவை எல்லாம் நம்மை பாதிக்கா விட்டால் வேறு எதுதான் நம்மை பாதித்துவிடப் போகிறது? இதை எல்லாம் நாம் பேசாமல் போனால் வேறு எதைத்தான் பேசப் போகிறோம்?

பர்கூர் நாட்டுரக மாடுகள் தொடர்பான வீடியோவைக் காண: >வீடியோ

- தொடரும்... | எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்