தூத்துக்குடி மேயர் உட்பட 17 பேருக்கு அதிமுகவில் வாய்ப்பு மறுப்பு: புதுமுகங்கள் அதிகம் பேர் போட்டி

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாநகராட்சியில் அதிமுகவில் தற்போதைய மேயர் ஏ.பி.ஆர். அந்தோணி கிரேஸுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், 17 கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தற்போதைய கவுன்சிலர்கள் 20 பேருக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார்.

இந்த பட்டியலில் தற்போதைய மேயர் ஏ.பி.ஆர். அந்தோணி கிரேஸ் பெயர் இடம் பெறவில்லை. மாமன்ற உறுப்பினர் பதவிக்காக 10-வது வார்டில் போட்டியிட அந்தோணி கிரேஸ் விருப்ப மனு கொடுத்திருந்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியின் துணை மேயரான பீ.சேவியருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 18-வது வார்டில் அவர் போட்டியிடுகிறார்.

17 பேருக்கு வாய்ப்பில்லை

தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை அதிமுகவுக்கு 37 கவுன்சிலர்கள் உள்ளனர். அவர்களில் 20 பேருக்கு மட்டுமே மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 17 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கோகிலாவுக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேநேரத்தில் மேற்கு மண்டல தலைவர் ஜெயபாரதி மனோகரனுக்கு 38-வது வார்டில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியலில் புதுமுகங்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

செல்லப்பாண்டியன் ஆதரவாளர்கள்

வேட்பாளர் பட்டியலில் முழுக்க முழுக்க அதிமுக மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் ஆதரவாளர்களே அதிகம் இடம் பிடித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

சின்னத்துரை

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவியை குறிவைத்து அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாநில துணை செயலாளர் ந. சின்னத்துரை களம் இறங்கியுள்ளார். 51-வது வார்டில் சின்னத்துரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சி.த.செல்லப்பாண்டியனின் ஆதரவாளரான சின்னத்துரை மாவட்ட ஊராட்சி தலைவராக இரண்டு முறை பதவி வகித்தவர். கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஆனால், அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததை தொடர்ந்து சின்னத்துரை மாற்றப்பட்டதுடன், அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். இருப்பினும் வேறு எந்த கட்சியிலும் சேராமல் தொடர்ந்து அதிமுகவில் இணைய முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

அதன் பலனாக அவர் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆனால், சண்முகநாதன் மாவட்ட செயலாளராக இருந்ததால் அவரால் கட்சியில் எந்த பொறுப்பையும் பெற முடியவில்லை.

அதிக வாய்ப்பு

இந்நிலையில் சண்முகநாதன் நீக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போதைய மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் சிபாரிசின் பேரில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாநில துணை செயலாளராக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தான் அவர் நியமிக்கப்பட்டார்.

தற்போது தூத்துக்குடி மாநகராட்சி வார்டு தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த முறை மாநகராட்சி மேயர் பதவி ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அதிமுகவில் மேயர் வேட்பாளராக சின்னத்துரைக்கே அதிகம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதனை குறி வைத்தே சின்னத்துரையும் காய்களை நகர்த்தி வருகிறார். அவரது முயற்சி பலன் தருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்