‘மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி அல்ல.. குவாரி!’ - இந்தப் பதிவை படிக்கும்போது ஓசூர், பர்கூர் பகுதிகளில் பணத்துக்காக தன் சதையை தானே அறுத்துத் தின்பதுபோல மலைகளை உடைத்து இயற்கையை சிதைத்துக்கொண்டு இருக்கும் கிரானைட் குவாரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
கடல் மட்டத்தில் இருந்து 3500 - 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது ஓசூர். மிதமான வெப்பம், கடுமையான குளிர், கணிசமான மழைப்பொழிவு, திரும்பிய பக்கமெல்லாம் ஏரிகள். 25 வருடங்களுக்கு முன்பு இப்படித்தான் இருந்தது ஓசூர். மே மாதத்தில்கூட இங்கே மின் விசிறியின் அவசியம் இருக்காது. இதமான தட்பவெட்பம் நிலவியதாலேயே ஓசூரை ‘லிட்டில் இங்கிலாந்து’ என ஆங்கிலேயர்கள் கொண்டாடினார்கள். ஆனால் இப்போது, எல்லாமே தலைகீழாக மாறிக் கிடக்கிறது. முன்பு, மரங்களை அழித்தவர்கள் இப்போது மலைகளை அசுரத்தனமாக அறுத்தெடுப்பதால் அக்டோபரிலும் சுடுகிறது ஓசூர்.
1974-ல் சிப்காட் நிறுவனம் ராணிப்பேட்டைக்கு அடுத்து ஓசூரிலும் விரிவுபடுத்தப்பட்டது. இதையடுத்து, குண்டூசி முதல் குட்டி விமானம் வரை தயாரிக்கும் சிறு, பெரு தொழிற்சாலைகள் ஓசூரைச் சுற்றி முளைத்தன. அவைகளால் இயற்கைக்கு பெரிய அளவில் சவால் விடாமல் தன் தரத்தை உயர்த்திக்கொண்டது ஓசூர். கிரானைட் மாஃபியாக்கள் மலைகளை குடைய ஆரம்பித்த பிறகுதான் இயற்கை இங்கே அழ ஆரம்பித்தது.
ஜிகினி கம்பெனிகள்
வடமேற்கில் ஆந்திரா, தென்மேற்கில் கர்நாடகா - இவை இரண்டும் சந்திக்கும் தமிழகத்தின் எல்லையில் அமைந்திருக்கிறது கிருஷ்ணகிரி மாவட்டம். பிரிக்கப்படாத சேலம் மாவட்டத்தில் கிருஷ்ணகிரியும் இருந்தது. கிருஷ்ணகிரியின் அபரிமிதமான மா விளைச்சல்தான் சேலத்துக்கு ‘மாங்கனி மாநகரம்’ என்ற பெயரை பெற்றுத் தந்தது.
இந்த மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லி உடைக்கும் குவாரிகள் செயல்பாட்டில் உள்ளன. கிரானைட் குவாரிகள் பெருக ஆரம்பித்தது கடந்த 20 ஆண்டுகளுக்குள்தான். 1991-ல் பர்கூரில் ஜெயலலிதா வெற்றிபெற்று முதல்வரானதும் தொகுதியை மேம்படுத்த ‘சிட்கோ’வை அமைத்தார். அந்த சமயத்தில், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாகச் சொல்லி, கர்நாடக மாநிலம் ஜிகினியில் செயல்பட்டு வந்த கிரானைட் பாலீஷிங் கம்பெனிகளை அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டது நீதிமன்றம். இதையடுத்து அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் பார்வை பர்கூர் ‘சிட்கோ’ மீது திரும்பியது.
காற்றில் பறந்த உறுதிமொழிகள்
‘சுற்றுச்சூழலை மாசுபடுத்த மாட்டோம், விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க மாட்டோம், உள்ளூர்வாசிகளுக்கு வேலை தருவோம்’ - இப்படியெல்லாம் தமிழக அரசுக்கு உத்தரவாத பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு பர்கூரை ஆக்கிரமித்துக்கொண்ட கிரானைட் பாலீஷிங் கம்பெனிகள், இதில் எதையும் பின்பற்றவில்லை.
ஓசூரை உள்ளடக்கிய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது 198 கிரானைட் குவாரிகள் உள்ளன. இதில் 97 செயல்படாதவை. 107 ஜல்லி (ப்ளூ மெட்டல்) குவாரிகள் உள்ளன. இதில் 31 செயல்படாதவை. 2 சுண்ணாம்புக் கல் குவாரிகள் உள்ளன. இது அரசாங்க பதிவேடுகளின் கணக்கு. இவைகளைத் தவிர, முறையான அனுமதி பெறாத குவாரிகளும் ஏராளம் உண்டு. கிரானைட் பாறைகளை தகடுகளாக அறுத்து மெருகூட்டும் பாலீஷிங் கம்பெனிகளும் ஐந்நூற்றுக்கும் மேல் உள்ளன. குவாரிகள் ஒரு பக்கம் இயற்கைக்கு வெடி வைக்க.. இன்னொரு பக்கம் இந்த பாலீஷிங் கம்பெனிகள் சுற்றுச்சூழலை சீரழிக்கின்றன.
கவலையில் கல்யாணக் குகை
பர்கூரை அடுத்து இருக்கிறது நேரிடமானப்பள்ளி. இங்கு உள்ள மலையில் ‘பென்ட்லி போலு’ என்று சொல்லப்படும் கல்யாணக் குகை உள்ளது. இதனுள்ளே தொல்குடி மக்களால் வரையப்பட்ட அரிய பாறை ஓவியங்கள் உள்ளன. போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய இந்த பொக்கிஷங்களையும் குவாரிகளால் ஆபத்து சூழ்ந்து வருகிறது.
இதுகுறித்து பேசிய நேரிட மானப்பள்ளி கிராம தலைவர் என்.முனுசாமி, “குவாரியில வெடி வைத்தால் எங்கள் ஊர் பள்ளிக்கூட குழந்தைகள் எல்லாம் பயத்தில் அலறிக் கொண்டு வெளியே ஓடி வருகிறார்கள். அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி வெடிகளை பயன்படுத்துவதால் கல்யாணக் குகைகள் மாத்திரமல்ல.. வீடுகளிலும் வெடிப்பு விழுகிறது. எங்கள் ஊர் பள்ளிக்கூட சுவரும் இதற்கு தப்பவில்லை. குவாரி நடத்துகிறவர் ஆளுங் கட்சி பிரமுகர் என்பதால் ஆட்சியரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை’’ என்றார்.
மா விளைச்சலும் பாதிப்பு
பாலீஷிங் கம்பெனிகளில் இருந்து பறக்கும் கிரானைட் துகள்கள் மா இலைகளில் திட்டுபோல் படிவதால் மொட்டுக்கள் விடுவது பாதிக்கப்படுகிறது. அப்படியே பூத்தாலும் அவைகளிலும் துகள்கள் படிந்து விளைச்சலைத் தடுக்கின்றன. இதனால், தென்னை உள்ளிட்ட பிற விவசாயங்களும் பாதிக்கப்படுகின்றன.
தமிழ்நாடு பசுமைப் பாதுகாப்பு மக்கள் இயக்கத்தின் தலைவர் பாலாறு ஏ.சி.வெங்கடேசன் கூறும் போது, “மாவட்டம் முழு வதும் மானாவாரி விவ சாய பூமி. இங்கே குவாரிகளாலும் பாலீஷிங் கம் பெனிகளாலும் விவ சாயம் அழிவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. விவசாயத்துக்கு மட்டுமின்றி மக்களின் சுகாதாரத்துக்கும் கேடு விளை விக்கிறார்கள். எனவே, மண்ணுக்கும், மரத்துக்கும் மக்களுக்கும் கேடு உண்டாக்கும் குவாரிகளுக்கும் பாலீஷிங் கம்பெனிகளுக்கும் உடனடியாக தடை விதிக்க வேண்டும்’’என்றார்.
பாலீஷிங் கம்பெனிகளுக்கு ராட்சத குழாய்கள் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் இங்கு உள்ள விவசாய நிலங்களுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இத்தனை பாதிப்புகள் இருந்தும் இப்பகுதி விவசாயிகளிடம் எதனால் இந்தப் பாதிப்பு என்பதற்கான விழிப்புணர்வு இல்லை. அதனால் கிரானைட் குவாரிகள் மற்றும் பாலீஷிங் கம்பெனிகளுக்கு எதிராக மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
இதுகுறித்து பேசும் இந்திய நதிகள் இணைப்பு இயக்கத் தின் நிறுவனர் ஐ.ஏ.எஸ்.சர்தார், “சுற்றுச்சூழலை மாசு படுத்துவதாகச் சொல்லி கர்நாடகாவில் தடை செய்யப்பட்ட பாலீஷிங் கம்பெனிகளை இங்கே எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. இனியும் குவாரிகளை செயல்பட அனுமதித்தால் கிருஷ்ணகிரி பாலைவனம் ஆவதை யாராலும் தடுக்கமுடியாது’’ என்றார்.
ஊத்தங்கரை - கிருஷ்ணகிரி சாலையில் பர்கூர் வரை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களும் தொல்லியல் சின்னங்களும் உள்ளன. இங்கெல்லாம் வெடி வைத்து மலைகளை தகர்த்துக்கொண்டு இருக்கும் கிரானைட் கம்பெனிகள், ஓசூர் பகுதியையும் விட்டுவைக்கவில்லை. கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரியில் இருந்து ஓசூர் வரை சாலையின் இரண்டு பக்கமும் குவாரிகளும் கிரானைட் பாலீஷிங் கம்பெனிகளும் ததும்பிக் கிடக்கின்றன.
இந்தச் சாலையின் பல இடங்களில் ‘இது யானைகள் நடமாடும் பகுதி’ என அறிவிப்புப் பலகைகள் எச்சரிக்கின்றன. இப்படி எச்சரித்துவிட்டு, காப்புக் காடுகளை கடந்து சென்று குவாரிகள் நடத்தவும் அனுமதி தந்திருக்கிறார்கள். சானமாவு காப்புக்காடு பகுதியில் அமைந்துள்ள ஜல்லி குவாரிக்காக 3 கிலோமீட்டர் தூரத்துக்கு காட்டுக்குள்ளேயே சாலை அமைத்திருக்கிறார்கள்.
யானைகளின் வாழ்விடங்களிலும் வழித் தடங்களிலும் குவாரிகளின் வெடிச் சத்தம் அதிகமாகிவிட்டதால் மக்கள் வசிக்கும் பகுதி களுக்கும் யானைகள் வரத் தொடங்கிவிட்டன. பர்கூர் பகுதியில் போச்சம்பள்ளி, மத்தூர், சாமல்பட்டி, பர்கூர் செந்தாரப்பள்ளி, ஜெக தேவி, அஞ்சூர், நாகமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது 25-க் கும் மேற்பட்ட கிரானைட் குவாரிகள் உள்ளன. தமிழகத்து முன்னனி சினிமா நடிகர், நடிகைகளும் இங்கு உள்ள குவாரிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் முதலீடு செய்திருக்கிறார்கள். இவை அனைத்திலுமே விதிமுறைகளை மீறி மலைகளை உடைத்து காசாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஜெகதேவியில் அறுக்கப்பட்ட மலை.
ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தில் நவாப்கள் காலத்தில் 12 மலைகளில் எதிரிகள் வருகையை கண்காணிக்கும் ‘பாரா மஹால்’கள் இருந்தன. இவற்றில் 4 மஹால்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளன. கிரானைட் குவாரிகள் இந்த மஹால்களை தாங்கி நிற்கும் மலைகளுக்கு அடியிலும் வெடி வைத்து பாறைகளை உடைத்துக்கொண்டு இருக்கின்றன.
இதுபற்றி பேசும் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, ‘‘ஊத் தங்கரை - கிருஷ்ண கிரி சாலையில் பர்கூர் வரை உள்ள பகுதி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மண்டலம். இங்கெல்லாம், கிரானைட் குவாரிகளை அனுமதித்து பண்டைய வரலாற்றுத் தடயங்களை அழித்தவர்கள், இப்போது தொழில் நகரமான ஓசூரையும் அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கெல்லாம் எப்படி அனுமதி கொடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
குவாரிகளில் பல நேரங்களில் விபத்துகள் நடந்து உயிர் பலிகளும் ஆவது உண்டு. அதுபோன்ற நேரங்களில் வெளியில் தெரியாதபடி, இறந்தவர் உடலை சொந்த மாநிலத்துக்கு அனுப்பிவைத்துவிட்டு எல்லாவற்றையும் பணத்தால் சாதித்துவிடுகிறார்கள். இயற்கை அரண்களான மலைகளை அழிப்பதன் மூலம் மரம், செடி, கொடி, விலங்குகள், பறவைகள், பிற பல்லுயிர்கள் அத்தனையும் அழிந்து இயற்கை சமநிலை அற்ற நிலை ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பதை யாரும் உணரவில்லை’’ என்கிறார்.
தொல்லியலின் சொர்க்கம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தை தொல்லியலின் சொர்க்கம் என்கிறார் ஜெர்மன் அறிஞர் ஹரால்டு சொந்தமிர் (Harald Sonthemier). இந்திய தொல்லியல் துறையின் பிதாமகன் என்று சொல்லப்படும் ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் (Robert Bruce Foote) கால்நடையாகவே நடந்து சென்று, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரட்னபள்ளி உள்ளிட்ட இடங்களில் தொல் மானிடர்கள் வாழ்ந்த இடங்களை கண்டுபிடித்திருக்கிறார். தமிழகத்தில் சுமார் 2000 பாறை ஓவியங்கள் இருப்பதாக இப்போதைய கணக்கீடு. இவற்றில் முக்கால்வாசிக்கு மேல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளன. இவைகளையும் கிரானைட் குவாரிகளின் ஆக்டோபஸ் கரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அள்ளி விழுங்கிக்கொண்டு இருக்கின்றன.
சூளகிரி அருகே மல்லச்சத்திரம் - சென்னசத்திரம் மலை பகுதியில் பெருங்கற்கால திட்டைகள் ஏராளம் இருந்தன. 2000 வருடங்களாக பாதுகாக்கப்பட்ட இந்தப் பகுதிகளை கடந்த 10 ஆண்டுகளில் கபளீகரம் செய்துவிட்டன குவாரிகள். சென்னசத்திரத்தில் இருந்த கற்கால திட்டைகளும், மேகலசின்னம்பள்ளியில் இருந்த பாறை ஓவியங்களும் குவாரிகளுக்கு முழுவதுமாக இரையாகிவிட்டன.
தொல்லியல் ஆர்வலர் சுகவனம் முருகன் கூறும் போது, “மாவட்டத்தில் உள்ள பாறை ஓவியங் களும், மனித மூதா தையர்கள் வாழ்ந்த இடங்களும் தொல் லியல் ஆய்வுக்கு உட்பட்டவை. இந்த தொல்லியல் சின்னங் களை கால கணிப்பை செய்து அவற்றை முறையாக ஆவணப்படுத்தாமல் அழித்து வருவது மிகப்பெரிய அவலம். இதனால் வன உயிரினங்களின் அரிய வாழ்விடங்களும் அழிந்து சுற்றுச்சூழல் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இது மனித குலத்துக்கு நல்லதல்ல’’ என்றார்.
தனியார் குவாரிகள் இரவு பகலாக கற்களை வெட்டி நகர்த்திக்கொண்டிருக்க, டாமின் குவாரியில் வெட்டி எடுக்கப்பட்ட சுமார் 3000 கற்கள் விலை போகாமல் தேங்கிக் கிடக்கின்றன. இதனால், டாமின் குவாரியின் செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் பர்கூரில் உள்ள டாமினுக்குச் சொந்தமான கிரானைட் பாலீஷிங் யூனிட்டையும் பெயரளவுக்கே செயல்பாட்டில் வைத்திருக்கிறார்கள். டாமின் நிறுவனங்கள் இப்படி முடக்கப்பட்டு கிடப்பதிலும் கூட்டுச் சதி இருக்கலாம் என்கிறார்கள்.
வரி ஏய்ப்பு
ஒரு கன மீட்டர் கிரானைட் கல்லை வெட்டி எடுக்க அரசுக்கு 2,200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு கல்லுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்திவிட்டு அந்த ஆவணத்தையே வைத்துக்கொண்டு 10 கற்களை ஏற்றி கடத்துவதை பெரும்பாலான குவாரிகள் வழக்கமாக வைத்திருக்கின்றன. தாராள ‘கவனிப்பு’களால் இவை கண்டும் காணாமல் விடப்படுகின்றன.
பாலீஷ் செய்யப்பட்ட கிரானைட் தகடுகள் சதுர அடி 65 ரூபாயில் இருந்து 600 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இது தமிழகத்துக்குள் விற்பனை செய்யப்பட்டால் 2 சதவீதமும் வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டால் 14.5 சதவீதமும் ‘வாட்’ வரி செலுத்த வேண்டும். ஒரு லாரி லோடில் 5 லட்சம் ரூபாய்க்கு கிரானைட் தகடுகள் ஏற்றப்படுகின்றன. அப்படிப் பார்த்தால் ஒரு லோடுக்கு தமிழகமாக இருந்தால் 10 ஆயிரம் ரூபாயும் வெளிமாநிலமாக இருந்தால் 72,500 ரூபாயும் ‘வாட்’ வரி செலுத்த வேண்டும்.
இதை சமாளிப்பதற்காக, கர்நாடகாவில் செயல்படுவதாகச் சொல்லி போலி நிறுவனங்கள் பெயரில் ரசீது புத்தகங்களை அச்சடித்து வைத் திருக்கிறார்கள். இவற்றைக்கொண்டு, கிருஷ்ண கிரி பகுதியில் பாலீஷ் செய்யப்படும் கிரானைட் தகடுகள் பெங்களூரூ (போலி) கம்பெனியில் பாலீஷ் செய்யப்பட்டு அங்கிருந்து ஏற்றிவரப்படு வதாக கணக்குக் காட்டிவிடுகிறார்கள்.
கர்நாடகா - தமிழ்நாடு எல்லையான ஓசூரில் சோதனைச் சாவடி உள்ளது. இங்குதான் கர்நாடகா வில் இருந்து வரும் கிரானைட் லோடுகளின் ரசீது களை சரிபார்த்து, அந்த ரசீதில் சோதனைச் சாவடியின் முத்திரை குத்தி அனுப்புவார்கள். இந்த சாவடியில் பணியில் உள்ள சிலருக்கும் கிரானைட் புள்ளிகளுக்கும் டீல் இருக்கிறது. இதனால் பெங்களூரூ போலி கம்பெனிகள் பெயரில் அச்சடிக்கப்பட்ட ரசீது புத்தகங்களில் முன்கூட்டியே முத்திரை குத்திக் கொடுத்துவிடுகிறார்கள் சோதனைச் சாவடியில் இருப்பவர்கள். இதற்கு ‘அன்பளிப்பாக’ ஒரு ரசீதுக்கு 1200 ரூபாயில் இருந்து 2000 ரூபாய் வரை தரப்படுகிறது.
இந்த ரசீதை வைத்துக்கொண்டு, அரசுக்குச் செலுத்த வேண்டிய ‘வாட்’ வரியைக் கட்டாம லேயே கிரானைட் தகடுகளை கடத்திவிடுகிறார்கள். இப்படி லோடுகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் தலா 500 ரூபாய் செலவில் அத்தனை சோதனைச் சாவடிகளையும் அட்டகாசமாய் கடந்துவிடும். பாலீஷிங் கம்பெனிகள் அதிகம் உள்ள பர்கூர் பகுதியில் இருந்து மட்டுமே தினமும் சுமார் ரூ.10 கோடிக்கு கிரானைட் தகடுகள் வெளியூர்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றப்படுகின்றன. அப்படிப் பார்த்தால் பர்கூரில் மட்டுமே சராசரியாக தினமும் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்படுகிறது.
தடுக்கப்பட்ட ஆவணப்படம்
கிரானைட் பாலீஷிங் கம்பெனிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை நீர்நிலைகளிலும் கொட்டுவதால் மழைக்காலத்தில் தண்ணீரை உள்ளிழுத்துக்கொள்ள முடியாமல் நீர்நிலைகள் மலடாகிவிடுகின்றன. இந்த அவலம் குறித்து லயோலா கல்லூரி மாணவர் சாமுவேல் என்பவர் ஆவணப்படம் ஒன்றை எடுத்தார். அதை கிராம மக்கள் மத்தியில் திரையிட இருந்த சமயத்தில் சில கிரானைட் முதலாளிகள் போலீஸ் துணையுடன் அதைத் தடுத்துவிட்டார்கள். கிரானைட் கழிவுகளின் பாதிப்புகளுக்கு உள்ளான பகுதிகளில் இதுவரை இந்த படத்தை திரையிட முடியவில்லை.
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
கிரானைட் கற்களை விதிகளை மீறி வெட்டிக் கடத்தியதாக 2014-15ல் 704 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1107 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 4 கோடியே 3 லட்சத்து 9 ஆயிரத்து 378 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 2015-16ல் 928 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 2077 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 6 கோடியே 91 லட்சத்து 2 ஆயிரத்து 877 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் கடந்த டிசம்பர் வரை 413 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 721 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2 கோடியே 18 லட்சத்து 34 ஆயிரத்து 243 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்
குவாரிகளின் அத்துமீறல்கள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கம் மற்றும் கனிமவள துறையின் துணை இயக்குநர் எல்.சுரேஷிடம் கேட்டபோது, “குவாரிகளில் இவ்வளவு ஆழத்துக்குத்தான் கற்களை வெட்டி எடுக்க வேண்டும் என்பது கணக்கில்லை. ஆனால், முறையாக உரிமம் பெற்ற இடத்துக்குள் மட்டுமே கற்களை வெட்டி எடுக்க வேண்டும். இதை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாங்கள் எடுத்த திடமான நடவடிக்கைகளால்தான், ஏலம் போகாமல் இருந்த 62 குவாரிகள் இந்த ஆண்டு 42 கோடிக்கு ஏலம் போயிருக்கிறது.
நேரிடமானப்பள்ளியில் ஆளுங்கட்சி பிரமுகரான ‘துரைஸ்’ ராஜேந்திரன் என்பவர் ஜல்லி குவாரி நடத்துகிறார். அவருக்கு முன் மற்றவர்கள் அங்கே குவாரி நடத்தியபோதெல்லாம் பிரச்சினையை கிளப்பாதவர்கள், இப்போது பிரச்சினை செய்வதில் உள்நோக்கம் இருக்கிறது. இருப்பினும் நீங்கள் சொன்ன பாதிப்புகள் குறித்து நேரில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன்.
திருட்டுத்தனமாக போலி ரசீதுகள் மூலமாக கிரானைட் ‘ஸ்லாப்’களை வெளியூர்களுக்கு அனுப்புவதாக நீங்கள் சொல்வது அதிர்ச்சித் தகவலாக உள்ளது. அதுகுறித்தும் விசாரிக்கிறோம். குவாரிகள் செயல்பாடுகள் குறித்து தனிப்பட்ட முறையில் புகார்கள் இருந்தால் என்னிடம் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட பொறியாளர் செந்தூர்பாண்டியன் கூறும்போது, “மாவட்டத்தில் 20 இடங்களில்தான் பெரிய அளவிலான கிரானைட் பாலீஷிங் கம்பெனிகள் உள்ளன. அவைகளில் மாசுக்கட்டுப்பாட்டு விதிகள் முறையாக பின்பற்றப்படுகின்றன. கழிவுகளை நிலங்களிலும் சாலை ஓரங்களிலும் கொட்டுவதுதான் பெரிய பிரச்சினையாக உள்ளது. கிரானைட் கழிவுகளை டாமின் மூலமாக செங்கல்கள் மற்றும் இயற்கை உரங்கள் தயாரிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இது கைகூடினால் கிரானைட் கழிவு பிரச்சினையும் ஓய்ந்துவிடும்’’ என்கிறார்.
மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கிரானைட் பாலீஷிங் யூனிட்கள் இருப்பதை கனிமவளத் துறையினரே ஒப்புக்கொள்ளும்போது, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இப்படிச் சொல்வது வியப்பாகவே உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago