காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது: பிரதமருக்கு ஜெயலலிதா வலியுறுத்தல்

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், “இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களை செய்துள்ள இலங்கை அரசு, அங்குள்ள தமிழர்களுக்கு ஜனநாயக சுதந்திரத்தையும், சம உரிமையையும் அளிக்க மறுத்து வருகிறது.

இந்தப் பின்னணியில், இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், அது அந்நாட்டு அரசின் அடக்குமுறைகளை அங்கீகரிப்பதாக அமையும்.

அதையும் மீறி, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், அது தமிழகத்தில் உள்ள தமிழர்களின் உணர்வுகளையும் மதிக்காத செயல் என்கிற அடிப்படையில் பிரச்சினை வெடிக்கும். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவர். இதனால், தமிழகத்தில் மேலும் மோசமான சூழல் உண்டாகும்.

காமன்வெல்த்தின் முக்கிய நோக்கங்களைக் கடைப்பிடிக்காததால், இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என்று கனடா பிரதமர் அறிவித்திருக்கிறார்.

இந்தப் பின்னணியைக் கருத்தில்கொண்டு, இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இந்த விவகாரத்தில், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவெடுக்கப்படும் என்று நீங்கள் கூறியதாக பத்திரிகைகள் மூலம் தெரிந்துகொண்டேன்.

இந்தியா சார்பில் நீங்களோ, அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்று தமிழகத்தின் சார்பில் மீண்டும் வலியுறுத்துகிறேன். தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள் என்று நம்புகிறேன்' என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE