கருணாநிதிக்கு கருப்பசாமி பாண்டியன் எழுதிய மன்னிப்புக் கடிதம்: கானா கடந்து வந்த அரசியல் பாதை...

By குள.சண்முகசுந்தரம்

‘அரசியலில் நான் மறுபிறவி எடுத்த மகிழ்ச்சியோடு ஊருக்குத் திரும்புகிறேன்’ என்று செவ்வாய்க் கிழமை மீண்டும் அதிமுகவில் இணைந்த கருப்பசாமிபாண்டியன் நெகிழ்ந்து சொன்ன வாசகம் இது.

‘கானா’ என்கிற கருப்பசாமி பாண்டியன், அதிமுகவில் கிளைக் கழகச் செயலாளரில் தொடங்கி ஒன்றுபட்ட நெல்லை மாவட்டச் செயலாளராக உயர்ந்தவர். ஆர்.எம்.வீரப்பன் போன்ற வர்கள் ஜெயலலிதாவை எதிர்த்த போது ‘கானா’, உக்கம் சந்த், கே.கே.எஸ்.எஸ்.ஆர்., ரகுபதி, திரு நாவுக்கரசர் உள்ளிட்டவர்கள் ஜெ-வை ஆதரித்தார்கள். 1983-ல் திருச்செந்தூர் தொகுதி இடைத் தேர்தலில் ஆர்.எம்.வீ. போட்டி யிட்டபோது கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதா அவருக்காக பிரச் சாரம் செய்தார். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் முன் னின்று செய்தவர் ‘கானா’

எம்எல்ஏக்கள் கடத்தல்

எம்.ஜி.ஆர். இறந்த பிறகு மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளரானார் ‘கானா’. ஜானகி அணி, ஜெயலலிதா அணி என அதிமுக இரண்டுபட்டபோது அதி முக எம்எல்ஏ-க்களை ஜெ. பக்கம் பாதுகாத்து வைக்கும் பொறுப்பு கே.கே.எஸ்.ஆர்., சேலம் கண்ணன், உக்கம் சந்த், கருப்ப சாமிபாண்டியன் இவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, அதிமுக எம்எல்ஏக்கள் 30 பேரை ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்று வைத்திருந்தார் உக்கம் சந்த்.

எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னையில் வந்து இறங்கு வார்கள் என்று எதிர்பார்த்த வேளையில், போக்கு காட்டிய ‘கானா’, அவர்களை திருவனந்த புரத்தில் இறக்கி, விருதுநகரில் கே.கே.எஸ்.எஸ்.ஆரின் ஜின்னிங் ஆலைக்கு பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்தார். நெல்லை பட்டாளத்தை அங்கே பாதுகாப்புக்கு நிறுத்தியதுடன் அத்தனை பேரையும் அப்படியே சென்னை கோட்டையில் கொண்டுவந்து இறக்கியதும் அவர்தான்

தோற்றாலும் பதவி

1996 சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் நின்று தோற்ற ‘கானா’வை 4 மாதங்களில் துணைப் பொதுச் செயலாளர் ஆக்கிய ஜெயலலிதா, அதிமுகவின் வெள்ளிவிழா மாநாட்டை நடத்தும் பொறுப்பையும் அவரிடமே ஒப்படைத்தார். 1997 டிசம்பர் 31 தொடங்கி 3 நாட்கள் நெல்லையில் அதிமுக வெள்ளிவிழா மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்திக் காட்டினார் கானா. இந்த மாநாட்டு மேடையில்தான், அத்வானி, வாழப்பாடியார், வைகோ, சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட அனைத்துக் கட்சிச் தலைவர்கள் ஜெயலலிதாவுடன் கைகோர்த்தார்கள்.

இத்தனை செல்வாக்கோடு இருந்தும் 2000-ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சியினரை அரவணைத்துச் செல்லாமல் தன்னிச்சையாகச் செயல்படுகிறார் என்பது, நீக்கத்துக்கான காரணமாகச் சொல்லப்பட்டது. அதிமுக துரத்தியதால் திமுக பக்கம் திரும்பினார். ஆனால், காலங்காலமாய் இவரை எதிர்த்தே அரசியல் செய்து பழகிவிட்ட நெல்லை திமுக விஐபி-க்கள் இவரை ரசிக்கவில்லை. 2006-ல் நெல்லை மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் சபாநாயகர் ஆனதால் மாவட்டப் பொறுப்பாளர் பதவியில் அமர்த்தப்பட்ட கானா, அடுத்து வந்த கட்சித் தேர்தலில் ஸ்டாலினிடம் தனக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி மாவட்டச் செயலாளர் பதவியை கைப்பற்றினார்.

இந்நிலையில், தமிழரசி என்பவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக ‘கானா’வுக்கு எதிராக புகார் கிளம்பியது. இந்த விவகாரத்தில் கானாவின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட கட்சித் தலைமை, மாலைராஜா உள்ளிட்டவர்களை கட்டம் கட்டியது.

இந்நிலையில் நெல்லை மாவட்டமானது நெல்லை மத்தி, மேற்கு, கிழக்கு என மூன்றானது. இந்தப் பிரிவினையை ஏற்காத கானா, 18 தொகுதிகளை ஆளும் அந்தஸ்தில் இருந்துவிட்டு 2 தொகுதிகளைச் சுற்றி வந்து பணி செய்ய எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கினார். இருப்பினும் மேற்கு மாவட்டத்துக்கு தனது மகன் சங்கரை செயலாளராக்க முயற்சித்தார். அதுவும் நடக்காததால் கடும் அதிருப்தி அடைந்த கானாவை உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராக்கியது திமுக.

அடையாளங்களை அகற்றினார்

இதில் சமாதானமடையாதவர், தனது வீட்டில் இருந்த திமுக அடையாளங்களை அகற்றினார். இடையில், திமுக தலைவராக வரும் தகுதி ஸ்டாலினுக்கு மட்டும் தான் இருக்கிறது என்று அவர் உதிர்த்த வார்த்தைகளும் அவருக்கு எதிராக திருப்பப் பட்டன. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஜாமீனில் விடுதலை ஆனபோது, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடியதாக இவருக்கு எதிராக தலைமைக்கு புகார்கள் தட்டிவிடப்பட்டன.

உருக்கமான கடிதம்

இதையடுத்து, திமுகவில் இருந் தும் கட்டம் கட்டப்பட்டார் கானா. அதன்பிறகு ஒன்றரை ஆண்டுகள் ஒதுங்கியே இருந்தவர், மீண்டும் அதிமுக-வுக்கு தூது அனுப்பினார். அங்கிருந்து பதிலேதும் இல்லாத நிலையில் கடந்த 11-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதிக்கு உருக்கமான மன்னிப்புக் கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில், ‘‘அறிந்தும் அறியாமலும் சில தவறுகளுக்கு நான் காரணமாகிவிட்டேன். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக எனக்கு தாய், தந்தையாய் வாழ்வதற்கு வழிகாட்டியாக இருக்கும் தங்களிடம் அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்கிற ரீதியில் போகிறது அந்தக் கடிதம்.

இந்நிலையில், ‘தி இந்து’விடம் பேசிய கருப்பசாமி பாண்டியன், “திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி என 3 கோஷ்டிகள் இருக்கு. கட்சிக்கு வெளியே அழகிரி கோஷ்டின்னு ஒண்ணு ஆட்டம் காட்டிட்டு இருக்கு. கூடிய சீக்கிரமே திமுக மூன்றாக உடையும். பெண்ணிடம் நான் தகாத முறையில் நடந்ததாக சொல்லப்பட்ட விஷயத்தில் சதிகாரர்களைச் சகித்துக்கொண்ட திமுக, என்னை ஒதுக்கியது. இது போன்ற வருத்தங்களால் தாய்க் கழகம் திரும்பிவிட்டேன். கட்சித் தலைமை என்ன சொல்கிறதோ அதை செய்து முடிக்கும் தளபதியாக களத்தில் இருப்பேன்” என்றார்.

அண்மையில் திமுக தலைமைக்கு எழுதிய கடிதம் பற்றி கேட்டபோது, “அந்தக் கடிதத்தை நான்தான் எழுதினேன். எனது மூத்த மகனை அழைத்து 50 நிமிடம் பேசிய ஸ்டாலின், ‘உங்கப்பா திமுக-வில் இல்லாதது எனக்கு கை ஒடிந்ததுபோல் இருக்கிறது. கட்சிக்குள் அவர் இருந்திருந்தால் தென் மாவட்டங்களில் இன்னும் ஆறேழு தொகுதிகள் திமுக-வுக்குக் கிடைத்திருக்கும். இனியும் அவர் வெளியில் இருக்க வேண்டாம். என்னை நம்பி அவரை கட்சியில் இணையச் சொல். அவருக்கு உரிய வாய்ப்புக்களை கொடுப்போம்’ என்று சொல்லி இருக்கிறார்.

இப்படிச் சொன்ன பிறகுதான் நான் அந்தக் கடிதத்தை எழுதி னேன். ஆனால், கடிதத்தை வாங்கிய பிறகு, என்னை கட்சியில் சேர்க்க கருணாநிதிக்கும் கனிமொழிக்கும் விருப்பமில்லை என்று சொல்லிவிட்டதாகக் கேள் விப்பட்டேன். அதற்காக வருத்தப் படவில்லை; விதியே என்று இருந்துவிட்டேன். திடீரென அம்மா அழைப்பதாக தகவல் வந்தது; ஓடி வந்துவிட்டேன்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்