உதகை: கோடை சீசனுக்காக காட்டேரி பூங்காவில் 1.5 லட்சம் மலர்கள்

குன்னூர் காட்டேரி பூங்காவில், கோடை சீசனுக்காக ஆயத்தப் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

நீலகிரி மாவட்டத்தில், உதகை தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காவை அடுத்து அனைவரையும் அதிகம் கவர்ந்தது காட்டேரி பூங்கா. இயற்கையாக அமைந்த இப்பூங்காவில், ஆண்டுதோறும் வரும் கோடை சீசனில், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர பல்லாயிரக்கணக்கான மலர்கள் நடவு செய்யப்படும். கோடை சீசனின் போது 100 ரகத்தில் 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் மலர்கள் நடவு செய்யப்படும்.

அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் துவங்கும் கோடை சீசனுக்காக, தற்போதே, இப்பூங்காவில் பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளன. கோடை சீசனான மே மாதம் பூத்துக் குலுங்கும் வகையிலான மலர்கள், விதைக்கப்பட்டு வருகின்றன. டெய்சி, கிரைசாந்தம், இண்கா மேரிகோல்டு, அஸ்டர், அந்தூரியம், ஜின்னா, பிரென்ச் மேரி கோல்டு, சால்வியா, பிளாக்ஸ், சூரியகாந்தி, டையான்தஸ், பென்சி, லில்லியம்ஸ் உட்பட 25 ரக மலர்களின் விதைகள், கென்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

மலர்களின் விதைகள் நாற்றங்கால்களில் விதைக்கப்பட்டு, அவை வளர்ந்ததும், அந்த செடிகள் பூங்காவில் உள்ள தோட்டங்களில், பிப்ரவரி மாதம் நடவு செய்யப்படும்.

இந்தாண்டு ரோஜா மற்றும் இதர மலர் செடிகள் மட்டுமல்லாமல், போடாகார்பஸ், சைப்ரஸ், கார்னோஸ்பேரமம், பாட்டீல் பிரஸ், கெமேலியா ஆகிய மர ரக தாவரங்களும் நடவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்தாண்டு காட்டேரி பூங்கா விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. கோடை சீசனுக்காக 200 ரகங்களில் 1.5 லட்சம் மலர்கள் நடவு செய்யப்படவுள்ளது. தற்போது தயார்ப்படுத்தும் பூங்காவில் தோட்டங்களை சமன்படுத்தி, உரமிடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக மேட்டுபாளையத்தி லிருந்து, இயற்கை உரம் வரவழைக்கப்பட்டுள்ளது. தற்போது பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், பிரதான புல்தரை கருகாமல் தடுக்க, புற்களை பூங்கா ஊழியர்கள் வெட்டி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE