சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கு திமுக ஆட்சிதான் உதவியது: கருணாநிதி

தமிழகத்தில் சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கு உதவியது தி.மு.க அரசுதான் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில், டெல்லியில் சமீபத்தில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் வாசிக்கப்பட்ட உரை பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்த உரையில் சிறுபான்மையினர் நலன்கள் பற்றி கூறப்பட்டுள்ள பகுதிகளைக் குறிப்பிட்டுள்ள கருணாநிதி, தமிழகத்தில் சிறுபான்மையினர் ஆணையமும், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகமும், தி.மு.க. ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

2001- 2006ம் ஆண்டு அ.தி.முக ஆட்சியில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோருக்கான பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தோடு ஒன்றாக இணைத்து, அதன் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டார்கள். ஆனால் 2006‍ ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் மீண்டும் அந்தக் கழகத்தை தனியே செயல்படும் வகையில் உருவாக்கி சிறுபான்மையினர் தொழில் தொடங்க கடன் உதவிகள் வழங்கப்பட்டன.

சிறுபான்மையினருக்காகத் தனியே ஓர் இயக்குனரகம் ஏற்படுத்தப்பட்டதும் தி.மு.க. ஆட்சியில் தான். இவ்வளவையும் மறைத்துவிட்டு, முதல்வர் தனது உரையில், சிறுபான்மையினர் நலன்களில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் கூறுயிருப்பது எவ்வளவு தவறானது என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்று கருணாநிதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE