கிடுகிடுக்கும் நீலகிரி... நிலைநிறுத்த என்ன வழி?

நீலகிரி மக்கள் நவம்பர் மாதம் வந்தாலே நடுங்கித் தவிக்கிறார்கள். இது குளிர் நடுக்கம் மட்டுமல்ல... எங்கே மண் சரிந்து மொத்தமாக மூடிவிடுமோ என்கிற குலை நடுக்கம். திட்டமிடப்படாமல் கட்டப்பட்ட நீலகிரியின் உள்கட்டமைப்பு அப்படி.

2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தன. 44 பேர் உயிர் இழந்தனர். சாலைகள் துண்டிக்கப்பட்டன. நீலகிரியில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் பெரிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியிருப்பதால் மாவட்ட நிர்வாகம் பேரிடர் மேலாண்மையை முடுக்கிவிட்டுள்ளது. ‘‘மக்களும் மாவட்ட நிர்வாகமும் மனம் வைத்தால் கூடுமானவரை நிலச்சரிவுகளைத் தவிர்க்கலாம் அல்லது தற்காத்துக் கொள்ளலாம்.” என்று பல்வேறு யோசனைகளை முன் வைக்கிறார் மத்திய மண், நீர்வளப் பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானியான மணிவண்ணன்.

பேய் மழைப் பெருவெள்ளம்!

‘‘பருவநிலை தாறுமாறாக மாறியதால் மூன்று மாதங்கள் சீராக பெய்ய வேண்டிய மழை, இரண்டரை மாதங்கள் பெய்யாமல் 15 நாட்களில் ஒரேடியாய் கொட்டித்தீர்க்கிறது. நாட்டின் மொத்த சுற்றுச்சூழலும் மாசடைந்ததின் விளைவு இது. எல்லோரும் மனது வைத்தால் மட்டுமே இனி ஓரளவு இதற்கு தீர்வுகாண முடியும்.

மண்ணுக்குள் அணுகுண்டுகள்!

திட்டமிடப்படாத கட்டுமானங்கள், சாலைப் பணிகள் நடக்கின்றன . கட்டிடம் கட்ட இடத் தேர்வு முக்கியம். மலை முகடு, மலைச் சரிவு என பொருத்தம் இல்லாத இடத்தில் பொருத்தம் இல்லாத வகையில் விதிமுறைகளை மீறி அடுக்கு மாடிகளைக் கட்டுகிறார்கள். கட்டிடங்கள் கட்டும் முன்பு மண் பரிசோதனை அவசியம். ஆனால், பெரும்பாலோர் அதை செய்வது இல்லை. அடுத்த அபாயம், செப்டிக் டேங்குகள். இவை மண்ணுக்குள் புதைத்திருக்கும் அணுக்குண்டுகள். நிலத்துக்குள்தானே இருக்கிறது என்று பலரும் அலட்சியமாக ஒற்றைச் செங்கல் சுவர் வைத்து உள்பக்கமாக மட்டும் சிமெண்டை பூசிவிடுவார்கள். ஆனால், காலப்போக்கில் கழிவுநீர் தொட்டியின் சுவற்றை அரித்து, கொஞ்சம் கொஞ்சமாக அந்த கட்டிடத்தின் அடிப்பகுதி மட்டுமில்லாமல், அதைச் சுற்றியுள்ள கட்டிடங்களின் அடிப்பகுதியிலும் ஊடுருவி மண்ணை தளர்ந்துப்போகச் செய்துவிடும். கொஞ்சம் வேகமாக மழை பெய்தாலே நிமிடங்களில் கட்டடங்கள் மண்ணுக்குள் புதைந்துவிடும்.

கண்ணைக் கட்டும் கனரக போக்குவரத்து!

கனரக போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும். மலைச் சரிவுகளின் மேல் அடுக்குகளில் தளர்வான சாலைகளைக் கணக்கெடுத்து அங்கெல்லாம் கனரக போக்குவரத்தை தடை செய்ய வேண்டும். குறிப்பாக, மழைக் காலத்தில் கனரக வாகனங்கள் அந்தச் சாலைகளின் மேல் தொடர்ந்து செல்வதால் அதன் கீழுள்ள அடுத்தடுத்த சரிவுகளின் அழுத்தம் அதிகரித்து மண் சரிவு ஏற்படுகிறது.

பொங்கி வரும் காட்டாறு!

மலைச் சரிவுகளில் ஆங்காங்கே ஆழமான சிறு தடுப்பணைகள், குளங்கள், வனக்குட்டைகளை அமைத்து பராமரிக்க வேண்டும். இவை வனவிலங்குகளின் தாகம் தீர்ப்பதுடன் மழைக் காலங்களில் மலைச் சரிவுகளில் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தை உள்வாங்கிக்கொள்ளும். ஏற்கெனவே இருக்கும் கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். ஆனால், நீலகிரியில் அப்படி கட்டமைப்புகள் செய்யப்படாததால் மழைக்காலத்தின் வெள்ளப் பெருக்கு மலைச் சரிவுகளில் காட்டாறாக பாய்ந்து ஊரை அடித்துச் செல்கிறது. எனவே உடனடியாக ஆரம்பிக்க வேண்டிய பணி இது.

மலைச் சரிவுகளில் சாகுபடி செய்யும்போது ஓர் அடுக்குக்கும் இரண்டாவது அடுக்குக்கும் இடையிலான பக்கவாட்டுப் பகுதிகளில் கெளதமாலா வகை கோரைப்புற்கள், அன்னாசி பயிர்களை வளர்ப்பது மண் அரிப்பை தடுப்பதுடன் இரட்டை வருவாயைக் கொடுக்கும். தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக பீன்ஸ், கொடி வகை மருத்துவ, நறுமணத் தாவரங்களை வளர்ப்பது மண் தளர்வை தடுக்கும். திட்டமிடாமல் கிடைக்கும் இடங்களில் எல்லாம் பயிரிடாமல் மண் பாதுகாப்பு ஆராய்ச்சி மைய ஆலோசனை பெற்று சாகுபடி மேற்கொண்டால் நிலச்சரிவைத் தவிர்க்கலாம்.” என்றார்.

தற்போதைய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்ட இயக்குநர் பிராங்கிளின், ‘‘நிலச்சரிவை சமாளிக்கும் வகையில் அலுவலர்களுக்கும் கிராமவாசிகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி அளித்து வருகிறோம். நிலச்சரிவு ஏற்பட்டால், உடனடியாக செயல்பட அனைத்து துறைகளும் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளன. தேடுதல் பணிக்கான உபகர ணங்கள் தயார் நிலையில் உள்ளன. இம்முறை நிலச்சரிவு ஏற்பட்டால் அலாரம் அடிக்கும் வகையிலான உபகரணங்கள் நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புள்ள இடங்களில் நாட்டிலேயே முதல்முறையாக தற்போது பொருத்தப்பட்டுள்ளன” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE