வழக்கு எண் 3801/2010.. செல்லிலே தலைவலி கண்டார்!

By குள.சண்முகசுந்தரம்

15 வாய்தாக்களுக்கு மேல் கடந்துவிட்டது. வாய்தாவுக்கு அலைந்து அலைந்து அலுத்துப்போன சாட்சி சிதம்பரம், 'வாசுகி செல்போன் திருடுனத பாக்கவே இல்லை யுவர் ஆனர்' என்று பல்டி அடித்தாலாவது நம்மை விடுவார்களா என்ற நிலைக்கு வந்துவிட்டார். இந்த வழக்குக்காக இதுவரை மாமி தரப்பில் செலவான தொகை எட்டாயிரம். அபேஸ் வாசுகிக்கு.. 15 ஆயிரம்..

தல்லாகுளம் பெருமாள் கோயிலில் இரண்டரை வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. சமயம் கிடைக்கும்போது பெருமாளை தரிசிக்க வரும் இந்திரா மாமி அன்றைக்கும் வந்திருந்தார். வீடு திரும்பும்போது தெருவோரத்துக் கடைகளில் காய், கீரை வாங்கிப் போகலாம் என்பதற்காக அவர் கையில் ஒரு கூடை. பெருமாளை தரிசிக்க சிரமமாய் இருக்கும் என்பதால், கையில் வைத்திருந்த செல்போனை கூடைக்குள் போட்டு, அதை ஒரு ஓரமாய் வைத்துவிட்டு பக்தியில் கண்ணை மூடினார்.

அப்போது, 'இன்னைக்கி போணி நல்லா இருக்கணும் பெருமாளே' என்று வேண்டிக் கொண்டு வாசுகியும் சந்நிதிக்கு வந்தாள். சிக்கியது இந்திரா மாமியின் செல்போன். அன்றைக்கு அதன் மதிப்பு 800 ரூபாய். போனை சுட்டுக்கொண்டு அடுத்த அசைன்மென்டுக்கு கிளம்பிவிட்டாள் வாசுகி. கூடையில் செல்போன் இல்லை என்றதும் அதிர்ந்து போனார் மாமி. 'ஒரு பொம்பள வந்தா... போனை எடுத்தது அவளாத்தான் இருக்கணும்' என்றார் அங்கிருந்த பக்தர் சிதம்பரம். யாரைச் சொல்லி என்ன செய்வது.. போன பொருள் திரும்பி வருமா? அங்கும் இங்கும் அலைபாய்ந்துவிட்டு வெறும் கையோடு வீட்டுக்கு திரும்பினார் மாமி.

இரண்டு நாட்கள் கழித்து எதார்த்தமாக கோயில் பக்கம் வந்த சிதம்பரம், தல்லாகுளம் பேருந்து நிறுத்தத்தில் வாசுகியை பார்த்துவிட்டார். வாசுகியை மடக்கிய அவர், 'நீதானம்மா மாமியோட செல்போனை எடுத்தது' என்று கேட்டதுதான் தாமதம். அரிச்சந்திரனின் மனைவி போல ஆடித் தீர்த்துவிட்டாள் வாசுகி. உடனே, அவசர போலீஸை அழைத்தார் சிதம்பரம். அவர்கள் வந்து வாசுகியை அள்ளிப் போட்டுக்கொண்டு ஸ்டேஷனுக்கு போனார்கள். போலீஸ் அடித்த குலையில் வேனைவிட்டு கீழே இறங்கும்போது, 'நான் தான் மாமியோட செல்போனை எடுத்தேன்' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாள் வாசுகி.

ஏதோ, முக்கியமான வழக்கில் துப்புத் துலக்கிவிட்டது போல, அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கியது போலீஸ். சாட்சிக்கார ராய் சிக்கிய சிதம்பரம் கம்பீரமாய் ஸ்டேஷன் படி ஏறி வந்ததை பார்த்த ஏட்டய்யா, 'இன்னைக்கி சிக்குனது நீயாக்கும்' என்று நமட்டுச் சிரிப்புச் சிரித்தார். அவர் சொன்னதன் அர்த்தம் அன்றைக்கு அவருக்கும் இந்திரா மாமிக்கும் புரியவில்லை.

புதுக் கார்பன் மாற்றி அழுத்தமாக எஃப்.ஐ.ஆர். எழுதினார்கள். அத்தனையும் பார்த்துக் கொண்டு அசராமல் நின்ற வாசுகி, தன் (சொந்த) போனில் வக்கீலுக்கு தகவல் சொல்லிக்கொண்டிருந்தாள். 'திருடுன செல்போனை எங்கடீ கொண்டுபோய் குடுத்தே?' வாசுகியிடம் மரியாதையாய் (?) விசாரித்தார் ஏட்டையா.

"மீனாட்சி பஜார்லதான். ஐநூறு ரூபாய் குடுத்தான்"

"யாருக்கிட்ட குடுத்தே.. வந்து காட்டு" - சி.பி.ஐ. ரேஞ்சுக்கு விசார ணையை விசாலப்படுத்தினார்கள்.

'சுட்ட' போனுக்கு துட்டுக் குடுத்த நபரை அடையாளம் காட்டினாள் வாசுகி.

"நேத்திக்கே அதை வேறு ஒருத்தருக்கு வித்துட்டேன் ஏட்டையா" பவ்யமாக சொன்னார் பஜார் கடைக்காரர்.

"அப்டின்னா ரெண்டு பேருமா சேர்ந்து மாமிக்கு புது போன் வாங்கிக் குடுத்துருங்க" நாட்டாமை ரேஞ்சுக்கு தீர்ப்பானது. கடைக்காரர் யோசிக்க.. 'அவரு சொல்றபடி கேளுய்யா.. இல்லாட்டி திருட்டு கேஸ்ல கோத்து விட்டிருவாங்ய..' பக்கத்துக் கடைக்காரர் பயமுறுத்தினார். வேறு வழி? வாசுகியும் அவரும் ஆளுக்கு பாதி போட்டு அப்போதே 2500 ரூபாய்க்கு புது போனை வாங்கிக் கொடுத்து மூக்கைச் சிந்தினார்கள். "சரி.. சரி.. இந்த நம்பருக்கு 200 ரூபாய்க்கு டாப்அப் பண்ணிவிட்டுரு" என்று கடைக்காரரிடம் கூலாக சொல்லிவிட்டு வண்டியை கிளப்பினார் ஏட்டையா. பழசுக்கு புதுசு வருது என்றதும் இந்திரா மாமிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

"ஏன் மாமி... கோயிலுக்குப் போனா செல்போனை கூடையிலயா வைக்கிறது" உரிமையோடு அலுத்துக்கொண்ட ஏட்டையா, "ரொம்ப கஷ்டப்பட்டு உங்களுக்கு புது போனே வாங்கியாச்சு. 5000 ரூபாய் போனு. இதையாச்சும் பத்திரமா வச்சிக்குங்க" மாமியிடம் போனை கொடுத்தார் ஏட்டையா. பிரித்துப் பார்க்கக்கூட பொறுமை இல்லாத மாமி, "இதுல கேமரால்லாம் இருக்கா சார்?" என்று ஆர்வப்பட்டார்.

கோபத்தை அடக்கிக்கொண்ட ஏட்டையா, "மாமி அந்த போன குடுங்க. கோர்ட்டுல ஒப்படைச்சி அதுக்கப்புறம்தான் வாங்கிக்கணும்" என்றார்.

"சரி, சரி.. காலையிலருந்து அலைஞ்சிருக்கு.. செலவுக்கு ஏதாச்சும் கவனிச்சுட்டுப் போங்க" 'கவுரவமாய்' சொன்னது போலீஸ். தலைக்கு ஐநூறு வீதம் மாமிக்கு அன்றைய செலவு மட்டும் 2500.

மதுரை மாவட்ட நீதிமன்றம் ஜே.எம்.2-ல் வழக்கு விசாரணைக்கு வந்தது. மாமியும், சாட்சிக் கையெழுத்து போட்ட குற்றத்துக்காக சிதம்பரமும் கூண்டில் ஏறி சத்தியம் சொன்னார்கள். வக்கீல் சகிதம் வாசுகியும் வந்திருந்தாள். இரண்டு வாய்தாக்கள் கழிந்தது. மூன்று மாதம் கழித்து மாமியை ஸ்டேஷனுக்கு வரச் சொன்ன போலீஸ், 'கேக்கும்போது கொண்டாந்து ஒப்படைக்கணும்' என்ற நிபந்தனையோடு செல்போனை கொடுத்தது. அன்றைக்கும் மாமிக்கு இரண்டு ஐநூறுகள் செலவு!

நான்கைந்து வாய்தா நகர்ந்து விட்டது. கோர்ட்டுக்கு போகவர இருந்ததில் வாசுகி - சாட்சி சிதம்பரம் இடையே 'முறைப்பு' குறைந்தது. "உங்களுக்கு ஏன் இந்த வேலை. அவசரப்பட்டு போலீஸை கூப்பிட்டுருக்கக்கூடாது. இப்பப் பாருங்க, உங்களுக்கும் தேவை யில்லாத அலைச்சல். குட்டையோ நெட்டையோ நமக்குள்ளயே பேசி முடிச்சிருக்கலாம். இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல.. மாமிக்கிட்ட பேசுங்க ராசி ஆகிக்குவோம்' என்று சொன்னாராம் வாசுகி.

'காலையில பத்து மணிக்கு கோர்ட்டுக்கு போனா மதியம் மூணு மணி வரை காத்துக்கிடக்க முடியல. வாய்தாவுக்கு அலைஞ்சே ஆயுசு குறைஞ்சிடும் போலிருக்கு! பேசாம கேஸை வாபஸ் வாங்கிடுறோம் சார்' நொந்துபோய் சொன்னார் மாமி. விடுமா போலீஸ். 'கேஸு நம்ம பக்கம் ஸ்டிராங்கா இருக்கு மாமி. கட்டாயம் அந்தப் பொம்பளைக்கு தண்டனை கிடைக்கும்' என்று சொல்லியே இன்னமும் வழக்கை இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 15 வாய்தாக்களுக்கு மேல் கடந்துவிட்டது. வாய்தாவுக்கு அலைந்து அலைந்து அலுத்துப்போன சாட்சி சிதம்பரம், 'வாசுகி செல்போன் திருடுனத பாக்கவே இல்லை யுவர் ஆனர்' என்று பல்டி அடித்தாலாவது நம்மை விடுவார்களா என்ற நிலைக்கு வந்துவிட்டார். ''இதுவரை எத்தனை வாய்தாவுக்கு வந்திருப்பீங்க பாஸ்?'' என்று கேட்டால், 'தெரியலையே தலைவா.." என்று நாயகன் வேலுநாயக்கர் ஸ்டைலில் வேதனையை கொட்டுகிறார் சிதம்பரம். போலீஸ் வாங்கிக் கொடுத்த செல்போனும் கீழே விழுந்து வாயைப் பிளந்துவிட்டது. வழக்கு மட்டும் இன்னும் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வழக்குக்காக இதுவரை மாமி தரப்பில் செலவான தொகை எட்டாயிரம். அபேஸ் வாசுகிக்கு.. அதைவிட டபுள். ஏறக்குறைய 15 ஆயிரம் செலவு.

இத்தகைய பரிதாபகரமான சூழலில், திங்களன்று இந்த வழக்கு மதுரை கோர்ட்டில் விசாரணைக்கு வந்து, மீண்டும் வாய்தா வாங்கி இருக்கிறது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்