காவல்துறையினர் 20 பேருக்கு பரிசுத் தொகை, பதவி உயர்வு: ஜெயலலிதா அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புத்தூரில் 2 தீவிரவாதிகளைக் கைது செய்த காவல்துறையினர் 19 பேருக்கும் தலா ரூ.5 லட்சமும், ஆய்வாளர் லட்சுமணனுக்கு ரூ.15 லட்சமும் பரிசுத் தொகையை, தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

மேலும், உயிரை துச்சமென கருதி செயலாற்றிய காவல்துறையினர் 20 பேருக்கும் பதவி உயர்வு அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட செய்திக் குறிப்பு:

“கடந்த ஜூலை மாதத்தில் வேலூரில் இந்து முன்னணிப் பிரமுகர் வெள்ளையப்பன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் கொடூரமாகக் கொலை செயப்பட்ட வழக்குகளில் துரித புலன் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க ஏதுவாக, அதற்கென குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை தலைமை இயக்குநர் நரேந்திரபால் சிங், இ.கா.ப. தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க நான் உத்தரவிட்டேன்.

மேற்படி கொலை வழக்குகளிலும், மதுரை திருமங்கலத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் எல்.கே. அத்வானி செல்லவிருந்த பாதையில் வெடிகுண்டு வைத்த வழக்கு மற்றும் பல வழக்குகளிலும் மதுரையைச் சேர்ந்த 'போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக், திருநெல்வேலியைச் சேர்ந்த பன்னா இஸ்மாயில் மற்றும் நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்படி நபர்கள் குறித்து துப்புக் கொடுப்பவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்று காவல் துறையால் அறிவிக்கப்பட்டது.

எனது உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுப் பிரிவுடன் மாநில உளவுத் துறையின் சிறப்புப் பிரிவும் இணைந்து இவ்வழக்குகளைக் கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சி மேற்கொண்டதன் பேரில், கடந்த ஜூன் மாதம் மதுரையில் பால்கார சுரேஷ்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவு எதிரிகளுக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிய வந்தது. மேலும், திருநெல்வேலி மேலப்பாளையத்தில் சுமார் 17.5 கிலோ வெடி மருந்துகளும், அதன் தொடர்ச்சியாக கோயம்புத்தூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டு, எதிரிகள் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

புத்தூரில் கைது நடவடிக்கை

கைது செய்யப்பட்ட நபர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், சிறப்புப் புலனாய்வுப் பிரிவுடன் மாநில உளவுத் துறையின் சிறப்புப் பிரிவும் இணைந்து துப்பு துலக்கியதன் பேரில், சென்னை பெரியமேடு காவல் நிலைய சரகம் சூளை அருகே மேற்படி தலைமறைவு எதிரிகளில் ஒருவரான 'போலீஸ்' பக்ருதீன் 4.10.2013 அன்று மாலை அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

இந்தத் தருணத்தில் கிடைத்த மற்றொரு தகவலின் அடிப்படையில், ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்த இதர தலைமறைவு எதிரிகளான பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோரை கைது செய்ய சிறப்புப் பிரிவு மற்றும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றின் காவல் கண்காணிப்பாளர்கள் டி.எஸ். அன்பு மற்றும் அர. அருளரசு மற்றும் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை புத்தூர் விரைந்தது.

அங்கு 5.10.2013 அன்று அதி காலை சுமார் 4.30 மணியளவில் ஆந்திர மாநில காவல் துறையினருடன் இணைந்து மேற்படி தலைமறைவு எதிரிகள் பதுங்கியிருந்த வீட்டை நமது தனிப் படையினர் சுற்றி வளைத்தனர். இந்த எதிரிகளைப் பிடிக்க எத்தனித்த போது, சிறப்புப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர் லட்சுமணன் 2 எதிரிகளால் வீட்டினுள் இழுக்கப்பட்டு கதவு மூடப்பட்டு கொடூரமான ஆயுதங்களால்

கடுமையாக தாக்கப்பட்டார். இதர காவல் துறை அதிகாரிகள் அவரை மீட்க முற்படுகையில் சன்னல் வழியாக துப்பாக்கியால் ஒரு முறை சுட நேர்ந்தது. அதில் எதிரிகளில் ஒருவரான பன்னா இஸ்மாயிலுக்கு வயிற்றில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது.

நமது காவல் துறையினர் கதவை உடைத்து காயமுற்ற ஆய்வாளர் லட்சுமணன் மீட்கப்பட்டு, சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேற்படி எதிரிகள் பதுங்கியிருந்த வீட்டினுள் எதிரிகளுடன் பிலால் மாலிக்கின் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளும் இருப்பது தெரிய வந்தது. அனைவரையும் பத்திரமாக மீட்க ஆந்திர காவல் துறையினருடன் இணைந்து தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

சுமார் 10 மணி நேர தீவிர முயற்சியின் பலனாக மேற்படி பெண்ணும், மூன்று குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர், மேற்படி இரு எதிரிகள் பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் கைது செய்யப்பட்டனர். மற்றொரு வீட்டில் எதிரிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி ஒன்றும், சுமார் 17 கிலோ வெடிமருந்துகளும், வெடிகுண்டுகள் தயாரிக்க தேவையான பொருட்களும்

கைப்பற்றப்பட்டன. காயமடைந்த எதிரி பன்னா இஸ்மாயில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அனைத்து எதிரிகளும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதில் சம்பந்தப்பட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளும் மற்றும் காவலர்களும் தங்களது உயிரைப் பணயம் வைத்து மிகுந்த கடமை உணர்வுடனும், துணிச்சலுடனும் போராடி பணியாற்றியதன் காரணமாக, நெடுங்காலமாக தலைமறைவாக இருந்து தேடப்பட்டு வந்த எதிரிகள் மூவரும் கைது செய்யப்பட்டதுடன், அவர்களால் நிகழ்த்தப்படவிருந்த பல வன்முறை சம்பவங்கள் மற்றும் சதித் திட்டங்களும் தகர்க்கப்பட்டுள்ளன. தன்னிகரற்ற காவல் துறை தமிழகக் காவல் துறை என்ற பெருமை மீண்டும் நிரூபிக்கப்பட்டு நிலைநாட்டப்பட்டுள்ளது.

19 பேருக்கு தலா ரூ.5 லட்சம்

தலைமறைவான எதிரிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்ட சென்னை, சிறப்புப் பிரிவு ஆய்வாளர் எஸ். லட்சுமணன், தெற்கு மண்டல குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் அன்பு, இ.கா.ப., சென்னை, சிறப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு, சென்னை, சிறப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர், திருவள்ளூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மதுரை சிறப்புப் புலனாய்வுக் குழு துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மதுரை நகர் சிறப்புப் புலனாய்வுக் குழு துணை காவல் கண்காணிப்பாளர் மாரிராஜன், சென்னை சிறப்புப் பிரிவு ஆய்வாளர் ரவீந்திரன், கிருஷ்ணகிரி குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் விஜயராகவன், சேலம் குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் ஆனந்தகுமார், திருவள்ளூர் மாவட்ட திருத்தணி காவல் நிலைய ஆய்வாளர் வீமராஜ், சென்னை சிறப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் வெற்றிவேல், சென்னை சிறப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் மணிகண்டன், சென்னை சிறப்புப் பிரிவு தலைமைக் காவலர் எட்வர்டு பிரைட், சென்னை, தனிப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை தலைமைக் காவலர் பிரபு, சென்னை குற்றப் புலனாய்வுத் துறை தலைமைக் காவலர் ஆனந்தன், திருவள்ளூர் மாவட்ட திருத்தணி காவல் நிலைய தலைமைக் காவலர் இளங்கோ, மதுரை சிறப்புப் புலனாய்வுக் குழு முதல் நிலைக் காவலர் 3சிவனேசன், சிறப்புப் பிரிவு காவலர் ராஜசேகரன், திருவள்ளூர் மாவட்ட திருத்தணி காவல் நிலைய காவலர் சுஜின், திருவள்ளூர் மாவட்ட ஆயுதப் படை காவலர் கலைவாணன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆயுதப் படை காவலர் ராஜகுமார் ஆகிய அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள அனைவருக்கும் இந்த வெற்றியில் பங்கு உண்டு. அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தலைமறைவான எதிரிகளை பிடிப்பதற்காக தீட்டப்பட்ட செயல்முறை திட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கௌரவிக்கும் வகையிலும், தமிழ்நாடு மக்களின் நன்றியுணர்வை பிரதிபலிக்கும் வகையிலும், அதிகாரி முதல் காவலர் வரை அனைவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

ஆய்வாளர் லட்சுமணனுக்கு ரூ.15 லட்சம்

தலைமறைவான எதிரிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு படுகாயம் அடைந்து, சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை, சிறப்புப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் எஸ். லட்சுமணனின் துணிச்சலை மனதாரப் பாராட்டுவதுடன் அவருக்கு ரொக்கப் பரிசாக 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அவருடைய மருத்துவச் செலவு அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவருக்கும் பதவி உயர்வு

இதுவன்றி, மேற்படி குற்றவாளிகளை பிடிப்பதற்கு தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது வீரதீரத்துடன் உயிரை துச்சமென கருதி செயலாற்றிய காவலர் முதல் கூடுதல் கண்காணிப்பாளர் வரையிலான 20 பேருக்கு ஒருபடி பதவி உயர்வு வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

5 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்