செங்குட்டுவன், நிர்மலா பெரியசாமி, பாத்திமா பாபு அதிமுகவில் இணைந்தனர்
இதுகுறித்து அ.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அந்தமான் மாநில ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் பி.ஆர்.கணேசன் முதல்வரைத் தனியே சந்தித்துத் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார். அப்போது அ.தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் பரிதி இளம்வழுதி உடன் இருந்தார். திருச்சி 2-ன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருச்சி கே.செளந்தரராசன், தூத்துக்குடி காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதாசேக் மற்றும் அவரது கணவர் ஷேக் அப்துல்காதர் ஆகியோரும் முதல்வரை நேரில் சந்தித்து கட்சியில் இணைந்தனர்.
அப்போது தூத்துக்குடி மாவட்டக் அ.தி.மு.க. செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் உடன் இருந்தார். தூத்துக்குடி எட்டயபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் கா.கோவிந்தராஜ பெருமாள் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். அப்போது இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் என்.சின்னத்துரை உடன் இருந்தார். மேலும், தஞ்சாவூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் ஆ.விஜயகுமார், கடலூர் மாவட்ட காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் தலைவர் இரா. ராஜேந்திரன், ஈரோடு தாராபுரத்தைச் சேர்ந்த எஸ்.கே.நாகேந்திரன் ஆகியோர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும், செய்தி வாசிப்பாளர்களுமான நிர்மலா பெரியசாமி, பாத்திமா பாபு ஆகியோரும் அ.தி.மு.க.வில் இணைந்தனர். நிர்மலா பெரியசாமி மற்றும் பாத்திமா பாபுவுக்கு அ.தி.மு.க. தலைமைப் பேச்சாளர்களாக நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.