ஆவணங்கள் இல்லாத பிரச்சினை ஆட்டோக்களுக்குப் புதிய தீர்வு

By எஸ்.சசிதரன்

சென்னை நகரில் உரிய ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்க ளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

சென்னை மாநகரில் ஓடும் 71 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இதில், பல ஆயிரம் ஆட்டோக்கள், பெர்மிட் இல்லாமலும், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமலும் இயங்கி வந்தன. புதிய மீட்டர் கட்டணம் அறிவிக்கப்பட்ட நிலையில் இவை வெளிச்சத்துக்கு வந்தன.

இந்நிலையில் உரிய ஆவணங்கள் இன்றி குறிப்பாக பெயர் மாற்றம் செய்யப்படாத 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த பிரச்சினையைத் தீர்க்க போக்குவரத்துத் துறை ஒரு புதிய வழமுறையை கையாளத் தொடங்கியுள்ளது.

இது குறித்து "தி இந்து" நிருபரிடம் போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறியது:

ஆயிரக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள், தங்களது வாகனத்தின் முன்னாள் உரிமையாளர்கள் யார் என்று தெரியாததால் பெயர் மாற்றம் செய்ய முடியாமல் உள்ளனர். மேலும் முன்னாள் உரிமையாளர்கள் பலர், அலுவலக வேலை காரணமாகவோ, உடல்நிலை காரணமாகவோ, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வரமுடியாத நிலை உள்ளது.

இதை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட உரிமையாளரின் வீட்டுக்கு அருகில் உள்ள நோட்டரி பப்ளிக்கிடம், "ஆட்டோவின் முன்னாள் உரிமையாளரும், தற்போதைய உரிமையாளரும் என் முன் ஆஜராகி கையெழுத்திட்டனர்," என்று சான்று பெற்று வந்தால், பெயர் மாற்றத்துக்கு உரிய ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் பல ஆயிரம் ஆட்டோக்களுக்கு முறையான ஆவணம் கிடைக்கும் என்றார்.

இதற்கிடையே போதிய மீட்டர் மெக்கானிக் கடைகள் இல்லை என்று கூறி ஆட்டோ ஓட்டுநர்கள், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE