சென்னையில் அண்ணா பிறந்த நாள்: தி.மு.க., அ.தி.மு.க. கொண்டாட்டம்

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 105-வது பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் தனித்தனியே நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் படத்துக்கு முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியின்போது அண்ணாவின் 105-வது பிறந்த நாள் விழா சிறப்பு மலரை முதல்வர் ஜெயலலிதா வெளியிட, அதனை மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாநில அமைச்சர்கள், அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருணாநிதி மரியாதை:

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள அண்ணா சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்குள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மலர் மாலை அணிவித்தார். துரைமுருகன் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

விஜயகாந்த்:

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், அண்ணாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கட்சியின் பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோ, தலைமை நிலையச் செயலாளர் ப.பார்த்தசாரதி எம்.எல்.ஏ., இளைஞர் அணிச் செயலாளர் எல்.கே.சுதிஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE