நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளை யம், குமாரபாளையத்தில் ஏராளமான சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. அந்த சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் நேரடியாக காவிரி ஆற்றில் கலந்து விடப்படுகிறது. அதனால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், அதை பயன்படுத்தும் மக்களும் பல்வேறு சரும பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். தவிர, மீன் உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்களும் செத்து மடியும் நிலையும் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
இதைக்கட்டுப்படுத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அவ்வப்போது பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அனுமதி பெறாத சாயப்பட்டறைகளுக்கு ‘சீல்’ வைத்தல் போன்ற நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். எனினும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை.
இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என சாயப்பட்டறை உரிமையாளர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்பலனாக கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தில் 110 விதியின் கீழ் ரூ.700 கோடி மதிப்பில் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் ஈரோடு, சேலம் மாவட்டத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
அதன்படி மொத்த நிதியில் 50 சதவீதம் மத்திய, மாநில அரசும், 25 சதவீதம் சாயப்பட்டறை உரிமையாளர் சங்க உறுப்பினர்களும், 25 சதவீதம் மானியமாகவும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் மேற்கொள்ளப்பட்டது. எனினும், திட்டம் அறிவித்து 3 ஆண்டுகளானபோதும், அத்திட்டம் முழுமை பெறாமல் உள்ளது. அதனால், மேற்குறிப்பிட்ட பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர் காவிரி ஆற்றில் கலப்பது தொடர் கதையாக உள்ளது. அதனால், பொது சுத்திகரிப்பு நிலையம் திட்டம் நிறைவேறுவது எப்போது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து குமாரபாளையம் சிறு சாயப்பட்டறை உரிமையாளர் கள் முன்னேற்ற நலச்சங்க தலைவர் ஜி.கே.பிரபாகரன் கூறியதாவது:
குமாரபாளையத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக நத்தமேடு என்ற பகுதியில் 35 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணியை தமிழ்நாடு நீர் முதலீட்டுக் கழகத்தினர் மேற்கொள்வர். அத்துறையினர் சம்பந்தப்பட்ட இடம் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு உகந்த இடமா என ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன் அறிக்கையை மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்குவர். அந்தப் பணிகள் முடிவு பெறும் தருவாயில் உள்ளது. ஓராண்டுக்குள் பணி முற்றிலும் நிறைவு பெற்று பொது சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டுக்கு வரும். பள்ளிபாளையத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது, என்றார்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ஆர்.ரவிச்சந்திரன் கூறுகையில், ‘‘பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது’’,என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago