“பா.ஜ.க. ஆதரவோடு ஜெ. பிரதமரானால் சந்தோஷம்!” - தா.பாண்டியன் உற்சாகப் பேட்டி

By சமஸ்

என்றைக்கும் கட்சித் தொண்டர்களோ, பொதுமக்களோ வீட்டுக்குள் சாதாரணமாக நுழையும் பாங்கோடு இருப்பது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கே உரிய அடையாளம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா.பாண்டியனின் வீடும் விதிவிலக்கல்ல. இக்கட்டான காலகட்டத்தில் கட்சி இருக்கும் நிலையில், தனிப்பட்ட வகையிலும் விமர்சனங்களை எதிர்கொள்கிறார் தா.பாண்டியன். வீட்டில் கட்சித் தோழர்களுடன் சாதாரணராகப் பேசிக்கொண்டிருந்தவர், பேட்டி என்றதும் உற்சாகமாகத் தயாரானார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி காலச் செயலாளர் என்று உங்களைக் குறிப்பிடலாமா?

மனித குலத்துக்கும் உண்மைக்கும் எவ்வளவு ஆயுளோ அதே ஆயுள் கம்யூனிஸ இயக்கத்துக்கும் உண்டு.

ஒருகாலத்தில் இந்திய கம்யூனிஸ்ட்டுகள் எவ்வளவு பலமாக இருந்தீர்கள் என்பது உங்களுக்கே தெரியும். உங்கள் வீழ்ச்சியை நீங்கள் உணரவில்லையா?

இந்தியாவில் இதுவரை மூன்று முறை ஆளுகிறவர்களால் தடை செய்யப் பட்ட கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. மற்ற காலங்களிலும் பெரும்பாலும் வேட்டையாடப் படுகிறவர்களாகத்தான் எங்கள் கட்சியினர் இருந்திருக்கிறோம். அடக்குமுறைக் கால கட்டங்களிலேயேகூட கம்யூனிஸ்ட் கட்சி சேதப்பட்டது உண்டு; செத்துப்போனதில்லை. இப்போதைய பின்னடைவை நாங்கள் உணராமல் இல்லை. மீளக் கட்டியமைக்கும் வேலைகளில்தான் இப்போது தீவிரமாக இறங்கியிருக்கிறோம்.

ஒடுக்கப்பட்டவர்கள் - முக்கியமாக தலித் மக்கள் - சாதி அடிப்படையில் திரள கம்யூனிஸ இயக்கங்களின் தோல்விதானே காரணம்?

இல்லை... சில தலைவர்களின் பதவி ஆசைதான் காரணம். தலித் இயக்கங்களையே எடுத்துக்கொள் வோம். பிளவுச் சக்திகளாகத்தான் நான் அவர்களைப் பார்க்கிறேன். ஒரு தொழிலாளர் சமூகம் ஒன்றுபட்டு நிற்கும்போது, அங்கே சென்று சாதியைச் சொல்லிப் பிரிப்பவர்கள் எப்படி நல்ல தலைவர்களாக இருக்க முடியும்? தொழிலாளி பார்ப்பனராக இருந்தாலும் தொழிலாளிதான்; தலித் மக்களாக இருந்தாலும் தொழிலாளிதான், இல்லையா?

இந்தியாவில் தலித் மக்களுக்காகக் கொண்டுவரப்பட்ட பல நல்லச் சட்டங்களும் திட்டங்களும் தலித் அல்லாதவர்களால் கொண்டுவரப்பட்டவை. பொது நீரோட்டத்திலிருந்து ஒரு சமூகத் தினரைப் பிரிப்பவர்கள் உண்மையில், எப்படி அவர்களுடைய வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களாக இருக்க முடியும்? ஒவ்வொரு சாதிக் கட்சித் தலைவரும் இங்கே செய்வது என்னவென்றால், மற்ற இனத்தைச் சேர்தவர்களிடமிருந்து அவர்களைப் பிரித்துத் தனிமைப்படுத்துவதுதான். நாங்கள் அதைச் செய்யாமல், போராடுகிறோம். ஒடுக்கப்பட்டவர்களுக்காக மட்டும் அல்ல; அநியாயம் நடக்கும் எந்த இடத்திலும் போராடுகிறோம்.

நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். ஆனால், தீவிர அரசியல் செயல்பாடுகளிலேயே கட்சி இருப்பதுபோலத் தெரியவில்லையே? தமிழகத்தில் இப்போதுகூட அரசியல் ஸ்தம்பித்துப்போன மாதிரி இருக்கிறது... தாது மணல் கொள்ளை போன்ற ஒரு பெரிய முறைகேட்டுக்கு எதிராகக்கூட யாரும் போராடவில்லையே, உங்கள் கட்சி உட்பட?

நீங்கள் சொல்வதில் பாதி உண்மை உண்டு. யாரும் போராடவில்லை... அரசியலே ஸ்தம்பித்த மாதிரி இருக்கிறது. உண்மை. நாங்கள் போராடவில்லை என்பது உண்மை அல்ல. மற்றவர்கள் ஏன் போராடவில்லை என்றால், எல்லாக் கட்சிகளும் கோடீஸ்வரக் கட்சிகளாகிவிட்டன. ஏராளமான சொத்துகளைச் சேர்த்தாயிற்று. அந்தச் சொத்துகளைக் கட்டிப் பாதுகாத்துக்கொள்வதே பெரிய வேலையாக அவர்களுக்கு இருக்கிறது.

இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், கடந்த ஆட்சியில் இயற்கை வளக் கொள்ளைக்கு இடமளித்த கட்சிதான் இப்போது பிரதான எதிர்க்கட்சி. பின்னர், எப்படிப் போராடுவார்கள்? நாங்கள் போராடுகிறோம். யதார்த்தம் என்னவென்றால், நம் மக்களுக்கும் 'மானாட மயிலாட'பார்ப்பதில் உள்ள நாட்டம் எங்களுடைய போராட்டங்களின் மீது இல்லை; ஊடகங்களுக்கும் வரவர போராட்டச் செய்திகளில் பெரிய அக்கறை இல்லை. கம்யூனிஸ்ட்டுகள் போராட்டம் என்றுதான் செய்தி போடுகிறார்களே தவிர என்ன காரணத்துக்காகப் போராடுகிறார்கள் என்று போடுவதில்லை. ஆக, கம்யூனிஸ்ட்டுகளுக்குப் போராட்டம் நடத்துவதுதான் வேலை என்கிற தோற்றம்தான் எஞ்சியிருக்கிறது. பிரச்சினையே எங்கள் நோக்கமும் உழைப்பும் சரியாகப் போய்ச் சேரவில்லை என்பதுதான்.

சரி, அ.தி.மு.க-வின் இரண்டரையாண்டு கால ஆட்சியை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

இந்தியாவிலேயே பல மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றும் ஆட்சியாக இது இருக்கிறது. ரேஷன் கடைகளில் முதலில் இலவச அரிசி கொடுத்தது தமிழ்நாடு. ஏழைப் பெண்கள் திருமண உதவிக்கு நான்கு கிராம் தங்கம் - ரூ. 50 ஆயிரம் பணம் கொடுப்பது தமிழ்நாடு. எந்த ஊரில் ஒரு ரூபாய்க்கு இட்லியும் ஐந்து ரூபாய்க்கு சாம்பார் சாதமும் தருகிறார்கள்? வெளியில் 20 ரூபாய்க்குத் தண்ணீர் விற்கிறது; தமிழக அரசாங்கமோ 10 ரூபாய்க்குத் தருகிறது. இப்படிப் பல நல்ல காரியங்கள் நடக்கின்றன; பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட நீரைக் கொடுப்பது ஒரு மக்கள் நல அரசின் கடமை அல்லவா? ஓர் அரசாங்கம் தண்ணீரை விற்பதை எப்படிச் சாதனையாகக் கொள்ள முடியும்? ஒரு கம்யூனிஸ்ட்டாக நீங்கள் எப்படி இதைப் பாராட்டுகிறீர்கள்?

நீங்கள் கம்யூனிஸ்ட்டுகள் ஆள ஓட்டுப்போடவில்லை. கம்யூனிஸ்ட்டுகள் ஆளாத ஓர் அரசாங்கத்தில், இதுதானே சாதனை என்று சொல்ல முடியும்?

ஜெ. ஆட்சியில் குறையே இல்லை என்கிறீர்கள்?

திட்டங்களை அமலாக்கும் இடத்தில் குறைகள் இருக்கலாம். அது நம் சமூகத்தைப் பிடித்த பீடை. திட்டங்களில் குறை இல்லை என்கிறேன்.

ஆளுங்கட்சியின் தீவிர விசுவாசி ஆகிவிட்டீர்களா? உங்கள் கட்சிக்காரர்களே 'எம்.பி. சீட்டுக் காகக் கட்சியை அ.தி.மு.க-விடம் அடமானம் வைத்து விட்டார் தா.பாண்டியன்' என்கிறார்களே?

கம்யூனிஸ்ட் கட்சி என்பது உலகக் கட்சி. அ.தி.மு.க. என்பது மாநிலக் கட்சி. ஓர் உலகக் கட்சியை மாநிலக் கட்சியிடம் அடகுவைக்க முடியுமா? அப்படிச் சொல்பவர்கள் அடிமுட்டாள்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் வியூகம் என்ன?

தேசிய அளவில் கட்சி என்ன முடிவெடுக்கிறதோ, அதையொட்டிச் செயல்படுவோம். மாநில அளவில் அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கிறோம்.

மோடி அலை உண்மையா? எடுபடுமா?

மோடி ஒரு ரப்பர் பலூன். ஊடகங்கள்தான் அதைப் பறக்க விடுகின்றன. தேர்தலுக்குப் பின் காற்று இறங்கி, ரப்பர் கிழிசலாக அது கீழே விழுந்து கிடப்பதைப் பார்ப்பீர்கள்.

ஜெ-வின் பிரதமர் கனவு?

மூன்றாவது அணியின் சார்பில் ஜெயலலிதா பிரதமரானால், தமிழ்நாட்டுக்கு நல்ல செய்திதானே? நடக்கட்டும்.

நீங்கள் மூன்றாவது அணியை மையமாக வைத்து யோசிக்கிறீர்கள். ஆனால், மோடி பிரதமராக முடியாத சூழலில், பா.ஜ.க. ஆதரவோடு ஜெயலலிதாவைப் பிரதமர் பதவியை நோக்கி நகர்த்தும் வியூகமும் தில்லியில் அடிபடுகிறதே?

சந்தோஷம் என்று போட்டுக்கொள்ளுங்கள். ஜெயலலிதா எப்படிப் பிரதமரானாலும் சந்தோஷம்தான்!

தொடர்புக்கு: writersamas@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்