58 கிராம கால்வாய் திட்டப்பணி முடிவது எப்போது? - 17 ஆண்டுகளை கடந்தும் ஆமை வேகத்தில் கட்டுமான பணி

By எஸ்.ஸ்ரீனிவாசகன்

உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த விவசாயிகளின் கனவான 58 கிராம கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டு 17 ஆண்டுகளாகியும் பணிகள் முடிவடையாமல் தாமதமாகி வருகிறது. தங்களின் வாழ்நாளிற்குள்ளாவது இத்திட்டம் நிறைவேற்றப்படுவதை தங்களால் பார்க்க முடியுமா என ஏக்கம் நிறைந்த கண்களுடன் மூத்த விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

வைகை அணை, ராமநாதபுரம் மாவட்டம் வரை பாசன வசதி அளிக்கிறது. மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் அப்பகுதி நிலங்கள் பாசனத்துக்கு தண்ணீர் பெறுகின்றன. இந்த கால்வாய் மூலம் செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமங்களுக்கு பாசன வசதி கிடைத்ததையடுத்து, அப்பகுதியில் விவசாயம் செழித்தது. அதே நேரம் உசிலம்பட்டி வட்டத்தைச் சேர்ந்த கிராமங்கள் கடும் வறட்சியால் தத்தளித்தது. குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் சிரமப்பட்டனர். இந்த காலகட்டத்தில்தான் இப்பகுதியில் பெண் சிசுக்கொலைகள், விவசாயிகள் பலர் வட மாநிலங்களுக்கு முறுக்கு, தோசை விற்பனைக்கு கொத்தடிமைகளாக சென்றதும் நடந்தது.

திருமங்கலம் பிரதான கால்வாயை தங்கள் பகுதிக்கும் நீட்டிக்க வேண்டும் என 1960-ம் ஆண்டில் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். 1980-ம் ஆண்டு முதல் போராட்டங்கள் தீவிரமடைந்தன. இத்திட்டத்தை செயல்படுத்தக் கோரி 58 கிராமங்கள் இணைந்து போராட்டம் நடத்தியதால், திட்டத்தின் பெயர் 58 கிராம பாசன கால்வாய் திட்டம் என வைக்கப்பட்டது.

வைகை அணையிலிருந்து உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. அந்த நீரையாவது தங்கள் பகுதிக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 1986 முதல் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. 100-க்கும் மேற்பட்ட சாலை மறியல்கள், ஆலோசனைக் கூட்டங்கள், குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர், வேளாண், பொதுப்பணித் துறை அமைச்சர்களுடன் சந்திப்பு என பல்வேறு கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டன.


58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படும் வைகை அணை உபரி நீர் வெளியாகும் மதகு.

வைகை அணையிலிருந்து ஏற்கெனவே பாசன வசதி பெற்று வந்தவர்கள், இந்த திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. யாருடைய பாசனத்துக்கும் இடையூறு இல்லாமல், வீணாக கடலில் கலக்கும் நீரையும், வெள்ள அபாயத்தின்போது திறந்துவிடப்படும் உபரி நீரையும் வைத்து 58 கிராம கால்வாய் திட்டத்தை செயல்படுத்தினால் போதும் என அப்பகுதியினர் அரசுக்கும், திட்டத்தை ஏற்காதவர்களுக்கும் விளக்கினர். இதையடுத்து எதிர்ப்புகள் குறைந்தன. பழைய மதுரை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்கள், தமிழக அமைச்சர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின், 58 கிராம கால்வாய் திட்டத்தை செயல்படுத்த அரசு ஒப்புக்கொண்டது.

உசிலம்பட்டியை சுற்றியுள்ள 58 கிராமங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கண்மாய்களை சார்ந்து இருக்கும் 2,285 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டது.

1996-ல் நிர்வாக ஒப்புதல்

இத்திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு 1996-ம் ஆண்டில் ரூ.33.81 கோடியை ஒதுக்கி நிர்வாக ஒப்புதல் அளித்தது. திட்டப்பணிகள் 1999 ஜூலையில் தொடங்கின. வைகை அணையிலிருந்து உபரி நீர் வெளியேறும் மதகு இருக்கும் இடத்தில் கால்வாய் தொடங்குகிறது. அங்கிருந்து வெட்டப்பட்ட கால்வாய் வழியாக தண்ணீரை கொண்டு செல்லும் வகையில் பிரதான கால்வாய் 27.735 கி.மீ. நீளத்திலும், உத்தப்ப நாயக்கனூரிலிருந்து பிரியும் இடது கிளைக்கால்வாய் 11.925 கி.மீ. நீளத்திலும், வலது கிளைக்கால்வாய் 10.24 கி.மீ நீளத்துக்கும் அமைக்கப்பட்டுள்ளது. இடையில் வனத்துறைக்குச் சொந்தமான இடம், மலைப்பகுதிகள் அதிகம் உள்ளன.

தொட்டிப் பாலங்கள்

மலைப் பகுதியில் தண்ணீரை எளிதாக கொண்டு செல்ல 3 தொட்டிப்பாலங்கள் அமைக்கப் படுகின்றன. 6 மீட்டர் உயரம் முதல் 18 மீட்டர் உயரம் வரை 230 தூண்களை க்கொண்டு இந்த தொட்டிப்பாலங்கள் குண்ணுத்துப்பட்டி, மேல அச்சனம் பட்டி பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது. 2.10 மீட்டர் உயரம், 2.50 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படும் தொட்டிகளின் மூலம் வினாடிக்கு 330 கன அடி தண்ணீரை கடத்தும் வகையில் பெரிய தொட்டிப்பாலமாக இது உருவாகி வருகிறது. கண்மாய்களுக்கு நேரடி இணைப்பை ஏற்படுத்தி, தண்ணீரை தேக்குவதுடன் சுமார் 1,000 சதுர கி.மீ. வரை நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தச் செய்வதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம்.

17 ஆண்டுகள் தாமதம்

5 ஆண்டுகளுக்குள் திட்டம் முடிக்கப்பட வேண்டும் என தொடங்கப்பட்ட பணிகள் 17 ஆண்டுகளாகியும் முடிவடையவில்லை. இதனால் செலவு அதிகரித்து 3 முறை கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு தற்போது ரூ.86.55 கோடிக்கு அனுமதி வழங்கப்பட்டது. அரசு பெரிய அளவில் ஆர்வம் காட்டி பணிகளை மேற்கொள்ளாததால் கடந்த 17 ஆண்டுகளாக 58 கிராம பாசன விவசாய சங்கத்தினர் பல்வேறு கட்டமாக தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கடந்தாண்டு கால்வாய் பணிகளை பார்வையிட்டார். இதன் பின்னர் மேலும் ரூ.8 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த பணிகள் மீண்டும் தொடங் கியுள்ளன. வரும் செப்டம்பருக்குள் பணிகளை முடிக்கும் வகையில் வேகப்படுத்தப்படும் என பொதுப் பணி த்துறை பொ றியாளர் தெரிவித்துள்ளார். ஆனாலும் மேல அச்சனம் பட்டியில் 18 மீட்டர் உயரத்தில் இன்னும் 10 தூண் களை இணைத்து தொட்டி ப்பாலம் அமைக்கும் பணி மெதுவாக நடக்கிறது. கிரேன் உள்ளிட்ட நவீன இயந்தி ரங்கள் பயன்படுத்தப்படவில்லை. மற்ற இடங்களில் பணிகள் தொடங்கப்படவில்லை.

தற்போது நடைபெறும் வேகத்தில் பணிகள் நடந்தால் மேலும் 2 ஆண்டுகள்வரை ஆகலாம். இப்பணிகளை விரைந்து முடித்து 2017-ம் ஆண்டுக்குள் திட்டத்தை முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பணிகளை விவசாயிகள் பார்வையிட்டு வருகின்றனர். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு 58 கிராமங்களுக்கு தண்ணீர் கிடைத்தால், இப்பகுதியில் விவசாயம் செழித்து வளரும் என்பது உறுதி.


தெப்பத்துப்பட்டி சாலை அருகே இணைக்கப்படாமல் உள்ள தொட்டிப்பாலம்.

முடிக்க வேண்டிய பணிகள்

மேல அச்சனம்பட்டியில் 146 மீட்டர் நீளத்துக்கு தொட்டிப்பாலம் 2 பக்கமும் இணைக்கப்பட வேண்டும். இதற்கு ரூ.4.50 கோடியும், தெப்பத்துப்பட்டியில் சாலை மீது 90 மீட்டர் நீளத்துக்கு பாலம் கட்டி இணைக்க ரூ.2.50 கோடியும், மாதரை ரயில்வே பாலத்தின் அடியில் கால்வாய் அமைக்க ரூ.50 லட்சமும் தேவை. தற்போது கிடைத்துள்ள நிதியில் இப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

பாசன வசதி பெறும் 58 கிராமங்கள்

லிங்கப்பநாயக்கனூர், கழியோச்சான்பட்டி, கொப்பம்பட்டி, வையம்பட்டி, அரம்பட்டி, கொசவன் கோயில்பட்டி, மூவிலிபட்டி, கொப்பிலிபட்டி, அப்பணம்பட்டி, பாப்பாபட்டி, பேயம்பட்டி, பச்சதேவன்பட்டி, பொடுவார்பட்டி, வெள்ளக்காரபட்டி, மீனுபட்டி, வி.காமாட்சிபுரம், பசுக்காரன்பட்டி, சடச்சிபட்டி, கட்டக்கருப்பன்பட்டி, பொட்டுலுபட்டி, கொங்கம்பட்டி, திம்மநத்தம், டி.புதூர், முண்டிகுண்டு, கல்லூத்துபட்டி, அய்யன்கோவில்பட்டி, புதுக்கோட்டை, உச்சிகண்ணன்பட்டி, வெள்ளைமலைபட்டி, இடையபட்டி, முப்பிடாரிபட்டி, சின்னபாலார்பட்டி, கீரிப்பட்டி, பெரியபாலார்பட்டி, பள்ளியம்பட்டி, மேக்கிலார்பட்டி, கட்டாளிமாயாள்பட்டி, மைனம்பட்டி, வடகாடுபட்டி, அன்னம்பார்பட்டி, உசிலம்பட்டி, கரியம்பட்டி, புதுப்பட்டி, கல்லம்பட்டி, கணக்கன்புதுப்பட்டி, பூதிப்புரம், நாட்டாபட்டி, நடுப்பட்டி, ஆனையூர், கிருஷ்ணாபுரம், கீர்த்திவீரன்பட்டி, பெரிய செம்மேட்டுப்பட்டி, சின்ன செம்மேட்டுப்பட்டி, கொக்குடையார்பட்டி, சீமானூத்து, நல்லிவீரன்பட்டி, மாமரத்துப்பட்டி, உத்தப்பநாயக்கனூர் ஜமீன்.

57 ஆண்டு கால போராட்டம்

மூத்த விவசாயிகள் சி.ஜெயராஜ், ஐ.ராசு, பெருமாள் மற்றும் 58 கிராம பாசன விவசாய சங்க நிர்வாகிகள் சிவப்பிரகாசம், தமிழ்ச்செல்வன், உதயகுமார், ஜெயக்குமார், ஜான்சன் உள்ளிட்டோர் கூறியது: 1960-ம் ஆண்டு முதலே இதுபோன்ற பாசன திட்டம் கேட்டு சுற்றுவட்டார கிராமங்களின் பல மூத்த விவசாயிகள் போராடினர்.

இவர்களில் 60-க்கும் மேற்பட்டோர் வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்களால் இறந்து விட்டனர். 70 வயதை கடந்தவர்கள் பலர் இன்னும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். தொட்டிப்பாலத்தில் தண்ணீர் திறந்து, அதிலிருந்து ஒரு சொட்டு தண்ணீராவது எங்கள் கண்மாய்களில் சேர்வதை எங்கள் வாழ்நாளிற்குள் பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்துடன் காத்திருக்கிறோம். திட்டப்பணி தொடங்கிய பின்னரும் பலமுறை வைகை அணையிலிருந்து வெள்ளம் கடலுக்கு வீணாக சென்றுள்ளது.

அப்போதும் உசிலம்பட்டி வறட்சியாகவே இருந்தது. ஒருமுறை தண்ணீரை கண்மாயில் நிரப்பினால் 5 ஆண்டுகள்வரை நிலத்தடி நீர் கிடைக்கும். உபரிநீர் வரும்போது தண்ணீர் கிடைத்தாலே 58 கிராமங்களுக்கும் பெரும் பயனாகத்தான் அமையும். இந்தாண்டு இறுதிக்குள் திட்டப் பணிகளை முடிக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பயன்பெறும் கண்மாய்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம்: புதுக்கோட்டை கண்மாய், முப்பிடாரிபட்டி, திம்மநத்தம், சடச்சிப்பட்டி, சிறுபட்டி, பூதிப்புரம், கீரிப்பட்டி, கிருஷ்ணாபுரம், ஆனையூர் பெரியகுளம், ஆனையூர் சின்னக்குளம், உசிலம்பட்டி, கருக்கட்டான்பட்டி, போத்தம்பட்டி, குருவிலான்பட்டி, லாகூரணி, வடுகபட்டி, புதுக்குளம், பாப்பான்குளம், சீரலகுண்டு, சின்னக்குளம், பொடுவார்பட்டி, நல்லெச்சான்பட்டி, கல்லூத்து புதுக்குளம், கல்லூத்து சின்னக்குளம், பானமூப்பன்பட்டி, ரெட்டியாபட்டி, அய்யம்பட்டி, உத்தப்பநாயக்கனூர், சங்கரன்பட்டி, முண்டிகுண்டு, லிங்கப்பநாயக்கனூர் கண்மாய்கள். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம்: ரெங்கப்பநாயக்கன்பட்டி கண்மாய், சந்தையூர் கண்மாய், வெங்கடசமுத்திரம் கண்மாய், மானாவாரி குளம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்