வாக்காளர் பட்டியலில் மாணவர்களைச் சேர்க்க புதிய திட்டம் : பிரவீண் குமார்

தமிழகத்தில் 18 வயது நிரம்பியவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைச் சேர்க்க வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், கல்லூரி மாணவர்களை ஈர்க்கும் நோக்கில், தமிழகத்தில் 1059 கல்லூரிகளில் மாணவ தூதர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 1-ந் தேதியன்று 18 வயதை எட்டும் நபர்கள், தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கும் விதமாக, அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக விண்ணப்பங்களை விநியோகிக்கும் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கும். இந்த ஆண்டும் அக்டோபர் 1-ம் தேதி முதல் பணிகள் தொடங்கப்படவுள்ளன.

இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடந்தது. அதன்பிறகு, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் வரைவு வாக்காளர் பட்டியல், வரும் 1-ம் தேதி வெளியிடப்படும். அன்றைய தினம் முதல் மாத இறுதி வரை, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். இதுதவிர, ஏற்கெனவே இடம்பெற்றுள்ள வாக்காளர்கள், பெயர்களை நீக்கவும், முகவரி மாற்றத்துக்காகவும் விண்ணப்பிக்கலாம்.

அக்டோபர் 2 மற்றும் 5 தேதிகளில், கிராமசபைக் கூட்டங்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கக் கட்டிடங்களில், வாக்காளர் பட்டியல் பாகத்தை படித்து பெயர்கள் சரிபார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகவரி மாற்றம் செய்ய விரும்புவோர், தொகுதிக்கு வெளியே இருந்தால், பெயர் சேர்ப்புக்குப் புதிய விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட ஒன்பது கட்சிகளின் வாக்குச்சாவடி மைய முகவர்கள், இம்முகாமின்போது தினமும் 10 விண்ணப்பங்கள் வீதம் 300 மனுக்களை, தனது ஒப்புகைச் சான்றுடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவுள்ள நபர்களுக்கு, தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ம் தேதியன்று வாக்குச்சாவடிகளில் புகைப்பட வாக்காளர் அட்டை வழங்கப்படும். இறுதி வாக்காளப் பட்டியல், ஜனவரி 6-ம் தேதி வெளியிடப்படும்.

ஆன்லைனில்...

புதிய வாக்காளர்கள், இணையதளம் (www.elections.tn.gov.in)வழியாகவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். புகைப்படங்களை “ஆன்லைனில் அப்லோடு” செய்யலாம். இந்த விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் சென்று ஆய்வு செய்வர்.

ஆன்லைனில் இதுவரை 19 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. இதை மேலும் 50 சதவீதம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதவிர, கல்லூரி மாணவர்களை ஈர்க்கும் வகையில் 1059 கல்லூரிகளிலும், தலா ஒரு மாணவ தூதர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மாணவ, மாணவியரை வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க ஊக்குவிப்பர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE