சேலம் அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி

By செய்திப்பிரிவு

சேலம் அருகே ஆட்டையாம்பட்டி மேட்டுக்காடு பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மூன்று வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் 5 பேர் இறந்தனர். ஆறு பேர் பலத்த காயம் அடைந்தனர்.

சேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி, மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கெடாகாரர் தங்கவேல். இவர் இரண்டு அடுக்கு மாடி வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். கீழ் தளத்தில் 5 குடும்பங்களும், மேல் தளத்தில் 4 குடும்பங்களும் வசிக்கின்றன.

மேல் தளத்தில் சேலம் லைன் மேடு பகுதியைச் சேர்ந்த அகமது (40) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஆட்டையாம்பட்டி வேலநத்தம் என்ற பகுதியில் இவர் கவரிங் நகைக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ஆயிஷா (38). இவர்களது மகன் சித்திக் (18) பிளஸ்–1 படித்து வந்தார். யாசிஃப் (13), சாகிதா (14) ஆகிய குழந்தைகளும் உள்ளனர்.

அதே தளத்தில் தேவராஜன் (50) என்பவர் மனைவி மல்லிகாவுடன் (45) வசித்து வந்தார். இவர்களுக்கு குமார் (25), சந்தியா (23), திவ்யதர்ஷினி ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். மற்றொரு வீட்டில் குருமூர்த்தி, மீனாட்சி ஆகியோர் வசித்து வந்தனர்.

பலத்த சத்தம்

புதன்கிழமை காலை 6 மணிக்கு தேவராஜன் வீட்டில் இருந்து பலத்த வெடிச் சத்தம் கேட்டது. தொடர்ந்து மேல் தளத்தில் இருந்த 2 வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்தன. இந்த விபத்தில் அருகில் இருந்த வீட்டில் வசித்தவர்களும் சிக்கினர். பயங்கர வெடிச் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு வந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்து குறித்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணியை மேற்கொண்டனர்.

பொக்லைன் வண்டி வரவழைக்கப்பட்டு, கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அகமது, ஆயிஷா, சித்திக், சாகிதா, யாசிப், குமார், சந்தியா, மல்லிகா, மீனாட்சி, குருமூர்த்தி ஆகியோர் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மருத்துவமனை செல்லும் வழியில் சித்திக் இறந்தார். கட்டிடத்துக்குள் தேவராஜன் சிக்கிக் கொண்டிருந்ததை அடுத்து, அவரை மீட்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். இரண்டு மணி நேர போராட்டத்துக்குப் பின், தேவராஜன் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஆயிஷாவும், மல்லிகாவும் இறந்தனர். இந்த விபத்தில் தேவராஜன், ஆயிஷா, சித்திக், மல்லிகா, தீபதர்ஷினி ஆகிய ஐந்து பேர் இறந்தனர். அகமது, சாகிதா, குமார், மீனாட்சி, சந்தியா, யாசிப் ஆகிய ஆறு பேர் பலத்த காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேல் தளத்தில் உள்ள 4 வீடுகளில் ஒரு குடும்பத்தினர் வீட்டைப் பூட்டி விட்டு மும்பை சென்று விட்ட தால், அவர்கள் தப்பினர். சம்பவ இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், கூடுதல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர், ஆட்டையாம்பட்டி ஆய்வாளர் தங்கவேல் மற்றும் காவல் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தேவராஜன் வீட்டில் புதன்கிழமை காலை ஆறு மணிக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை பற்ற வைக்கும்போது, எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்ததில் இந்த பெரும் விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.

தேவராஜன் பழைய இரும்புப் பொருட்களை வாங்கி விற்பவர் என்பதால், வெடிக்கக்கூடிய பொருட்களை வீட்டில் வாங்கி வைத்திருந்தாரா என்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்