காணாமல் போகிறதா கடற்கரை?

கடற்கரை என்பது பொழுதுபோக்கும் இடம் மட்டும் அல்ல,. நிலப்பரப்பைக் காக்கும் மிகப் பெரிய அரண். கடலுக்கும் நிலப்பரப்புக்கும் இடையேயான கடற்கரை மணல் பரப்பு இல்லாமல்போனால் உலகில் நிலப்பரப்பே காணாமல் போகும்.

ெசன்னை மக்களின் தாகம் தீர்க்க கடந்த பிப்ரவரியில் செயல்படத் தொடங்கிய நெம்மேலி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறிய செயல்பாடுகளால் அப்பகுதியின் கடற்கரை அரிக்கப்பட்டு, சுலேரிக்குப்பம் கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2010-ல் 871.24 கோடி ரூபாய் மதிப்பில் 40.05 ஏக்கரில் நெம்மேலியில் தொடங்கப்பட்ட இத்திட்டம், கடந்த பிப்ரவரியில் உற்பத்தியைத் தொடங்கியது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு தென் சென்னையின் தாகம் தணிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறிய வகையில் இது வேதனை திட்டமாகிவிட்டது என்கிறார்கள் சுற்றுச்சூழலியலாளர்கள்.

சமீபத்தில் சுற்றுச்சூழல் செயல் பாட்டாளர்களான நித்தியானந்த் ஜெயராமன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சுலேரிக்குப்பம் கிராமம் மற்றும் நெம்மேலி திட்டத்தின் கழிவு நீர் வெளியேற்றுப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு விதிமீறல்களை அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். ‘‘நாள் ஒன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் கடல் நீர் எடுக்கப்பட்டு அதிலிருந்து 100 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு மீதமுள்ள 165 மில்லியன் லிட்டர் கழிவு நீர் கடலுக்குள் செலுத்தப்படுகிறது. கடல் பரப்பில் 600 மீட்டருக்கு அப்பால் 8 மீட்டர் ஆழத்தில் கழிவு நீர் கடலுக்குள் செலுத்தப்பட்ட வேண்டும். அப்போதுதான் பெரிய அளவில் கடற்கரைக்கும் கரையோர கிராமங்களுக்கும் பாதிப்பு ஏற்படாது. ஆனால், கடந்த பல மாதங்களாக கழிவு நீரை நிலையத்தின் பின்புற சுற்றுச்சுவர் அருகிலேயே வெளியேற்றுகின்றனர். சுத்திகரிப்பு நிலையம் முழு வீச்சில் செயல்படும்போது ஒரு நொடிக்கு 2000 லிட்டர் கழிவு நீர் கடற்கரையில் வேகமாக கொட்டப்படுகிறது. இதனால், அங்கு கடற்கரை மணல் பரப்பு அரித்துச்செல்லப்பட்டுவிட்டது. அடர்த்தியான உப்பு நீர் கடற்கரையை ஊடுருவியதால் கிராமத்தின் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டதுடன், கடல் அரிப்பால் கிராமத்தில் இருந்த இரு சமூக நலக்கூடங்கள், ஒரு ஐஸ்கட்டித் தொழிற்சாலை இடிந்துபோயின. கடலில் குழாய்களை பதிக்க ராட்சத பாறைகளை கடலில் கொட்டியதால் மீனவர்கள் படகில் கடலுக்குள் செல்வதும் சவாலாகிவிட்டது. இந்த பிரச்னைகளை கிளப்பிய பொதுமக்கள் பொய் புகார் சொன்ன போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் நித்தியானந்த் ஜெயராமன்.

குற்றசாட்டுகளை சென்னை குடிநீர் வாரியம் மறுத்துள்ளது. ‘‘நெம்மேலி சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கழிவு நீரை மணல் பரப்பில் கொட்டுவது இல்லை. கடலில் 600 மீட்டர் தொலைவில் குழாய் மூலம்தான் செலுத்துகிறோம். தவிர, அது ஒன்றும் வெளிக்கழிவோ ரசாயனக் கழிவோ அல்ல. அதுவும் கடல் நீர்தான். அதனால், கடலுக்கு பாதிப்பு இல்லை. அக்கிராமத்தின் நிலத்தடி நீர் எங்களால் பாதிக்கப்பட்டது என்பதிலும் உண்மை இல்லை. அந்த ஊர் மக்கள் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சியதால் கடல் நீர் நிலத்தடியில் ஊடுருவிட்டது என்பதே உண்மை. மணல் பரப்பு அரித்துச்சென்றுவிட்டது என்பதும் தவறு. அதன் வளர்ச்சிக்காக நாங்கள் இதுவரை ஒரு கோடி ரூபாய் செலவிட்டுள்ளோம்” என்று அது கூறியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE