தூத்துக்குடி சிவன் கோயில் பகுதியில் மேயர் நடவடிக்கையால் அகற்றப்பட்ட இரும்பு கேட்டுகளை போலீஸார் மீண்டும் அமைத்துள்ளனர்.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோயில்கள் அடுத்தடுத்து உள்ளன. இந்த கோயில்களுக்கு தினசரி ஆயிரக்கணக் கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும், இந்த பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்களும் அமைந்துள்ளன.
4 இடங்களில் கேட்
வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் வாகனங்களை இரு கோயில்களுக்கும் முன் உள்ள தெருக்களில் நிறுத்துவதால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்தது.
எனவே, கோயில்கள் அமைந்துள்ள தெருக்களில் நான்கு இடங்களில் இரும்பு கேட்டுகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் போலீஸாரால் அமைக்கப்பட்டன. நடந்து செல்வோர் மட்டுமே செல்லும் வகையில் இந்த கேட்டுகள் அமைக்கப்பட்டன.
கடும் எதிர்ப்பு
கேட்டுகள் அமைக்கப்பட்டதற்கு வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
வடக்கு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவியர் தெற்கு சம்பந்த மூர்த்தி தெரு, டபிள்யூசி சாலைகளுக்கு செல்வதற்கு சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோயில் முன்புள்ள தெருவை தான் பயன்படுத்தி வந்தனர். இந்த தெரு அடைக்கப்பட்டதால் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இரும்பு கேட்டுகளை அகற்றக் கோரி வியாபாரிகள் உள்ளிட்டோர் போராட்டங்கள் நடத்தினர். பெ.கீதா ஜீவன் எம்எல்ஏ, கேட்டுகளை அகற்றக் கோரி போலீஸாரிடம் மனு அளித்தார்.
கேட்டுகள் அகற்றம்
இந்நிலையில் கடந்த 16-ம் தேதி நள்ளிரவு மேயர் ஏ.பி.ஆர். அந்தோணி கிரேஸ் பணியாளர்களை அழைத்துச் சென்று இரும்பு கேட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுத்தார். இதற்கு ஏ.எஸ்.பி. அருண்சக்திகுமார் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் மேயர், ஏஎஸ்பி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னர் மூன்று கேட்டுகள் அகற்றப்பட்டன.
இரும்பு கேட்டுகளை அத்துமீறி அகற்றியதாக தனியார் ஒப்பந்த பணியாளர்கள் 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், கேட்டுகள் அகற்றப்பட்ட இடங்களில் தடுப்புகளை போட்டு அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாதவாறு போலீஸார் தடுப்பு ஏற்படுத்தினர்.
போஸ்டர் அரசியல்
இந்த பிரச்சினை அரசியல் விவகாரமாகவும் வெடித்தது. இரும்பு கேட்டுகளை அகற்றிய மேயருக்கு நன்றி தெரிவித்து அதிமுகவினரும், கேட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுத்த கீதா ஜீவன் எம்எல்ஏவுக்கு நன்றி என, திமுகவினரும் போஸ்டர் ஒட்டினர். அதேநேரத்தில் இரும்பு கேட்டுகள் அகற்றப்பட்டதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இந்நிலையில் இரும்பு கேட்டுகளை போலீஸார் மீண்டும் அதே இடங்களில் நேற்றுமுன்தினம் இரவு அமைத்தனர். இதனால் இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
மாநகராட்சியில் தீர்மானம்
மேயர் தரப்பில் கேட்டபோது, ‘மாநகராட்சியில் எந்தவித அனுமதியும் பெறாமல் கேட்டுகளை போலீஸார் அமைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவியர், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். கேட்டுகளை அகற்ற வேண்டும் என, பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கை வந்ததால் தான் அவை அகற்றப்பட்டன.
தற்போது கேட்டுகளை போலீஸார் மீண்டும் வைத்துள்ளனர். அவற்றை அகற்ற சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்படும்’ என்று கூறினர்.
மக்கள் பாதுகாப்புக்கே கேட்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் கூறும்போது, ‘பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தான் இரும்பு கேட்டுகள் அமைக்கப்பட்டன. அனைத்து தரப்பு மக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது சம்மதத்துடன் தான் அவை அமைக்கப்பட்டன. போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் தற்போது மீண்டும் கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன’ என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago