ஆந்திராவுக்கு கடத்தப்படும் ராக்கெட் ஏவுதளம்!

மீண்டும் கோட்டை விடுகிறதா தமிழகம்?

இந்தியாவில் மூன்றாவது ராக்கெட் ஏவு தளம் அமைப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு புவியியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டிலேயே மிகச் சிறந்த இடமாக தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இஸ்ரோ விண்வெளி கமிட்டியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால் திட்டம் கடந்த ஆறு மாதங்களாக இழுபறியில் நிற்கிறது. மேலும், பெரும்பான்மை ஆந்திர அதிகாரிகள் லாபகரமான இத்திட்டத்தை ஆந்திராவுக்குக் கடத்திச் செல்ல தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கெனவே இந்திரா காந்தி காலத்தில் உருவாக்கப்பட்ட ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையம் தமிழகத்தில் செயல்படுத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், அப்போது விண்வெளி திட்டங்கள் குறித்து தமிழகத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் திட்டம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டது. இப்போதும் அப்படி நடந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள் நடுநிலையான விஞ்ஞானிகள்.

இந்திய விண்வெளித் துறையின் கீழ் செயல்படும் “இஸ்ரோ” நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான செயற்கை கோள்கள், ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் ஆகியவற்றை தயாரித்தும் விண்ணில் செலுத்தியும் வருகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் இருக்கும் இரண்டு ராக்கெட் ஏவுதளங்களில் இருந்தே இந்தியாவின் செயற்கைக் கோள்கள் ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தப்படுகின்றன.

ஆண்டுக்கு 60 விண்வெளித் திட்டங்கள்

விண்வெளித் துறையில் இந்தியாவின் வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவும் 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஆண்டு ஒன்றுக்கு 60 விண்வெளித் திட்டங்களை செயல்படுத்த இந்திய விண்வெளித் துறை திட்டமிட்டுள்ளது.

அவ்வளவு திட்டங்களை நிறைவேற்ற ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் இரண்டு ஏவு தளங்கள் போதாது; கூடுதலாக ஒன்று தேவை என்று இஸ்ரோவின் விண்வெளிக் கமிஷன், இந்திய விண்வெளித் துறையிடம் கோரியது. தொடர்ந்து புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்க பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்யவும் அதற்கான கட்டமைப்பு தேவைகளைப் பரிந்துரைக்கவும் இந்திய விண்வெளித்துறை, இஸ்ரோவின் விண்வெளித்துறை பேராசிரியரான நாராயணா தலைமையில் விண்வெளித் துறை நிபுணர்கள் அண்ணாமலை, சேஷகிரி ராவ், சோமநாத், அபேகுமார், கனங்கோ, சுதிர்குமார் ஆகிய ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்தது. அந்தக் குழு கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதிக்குள் இடத்தைத் தேர்வு செய்து மொத்த திட்ட அறிக்கையையும் இந்திய விண்வெளித் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று இதற்கான உத்தரவை கடந்த 2012, டிசம்பர் 20-ம் தேதி இஸ்ரோ தலைவரும் இந்திய விண்வெளித் துறையின் செயலாளருமான ராதாகிருஷ்ணன் பிறப்பித்தார்.

சிறந்த இடம் குலசேகரப்பட்டினம்

தொடர்ந்து தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை ஓரங்களில் பல்வேறு இடங்களை நிபுணர் குழு ஆய்வு செய்தது. இதில் மூன்றாவது ஏவுகளம் அமைக்க புவியியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டிலேயே மிகச் சிறந்த இடம் தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரப்பட்டினம் என்று தெரியவந்தது. ஆனாலும் குலசேகரப்பட்டினத்தில் ஏவு தளம் அமைக்க அதன்பின்பு அலுவலக ரீதியாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதனால் கடந்த பிப்ரவரி மாதத்துக்குள் இறுதி முடிவு எடுக்க உத்தரவிடப்பட்டும் ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆந்திரத்தில் மூன்றாவது ஏவுதளம்?

இதற்கிடையே மூன்றாவது ஏவு தளம் அமைக்கும் திட்டத்தை ஆந்திர மாநிலத்தில் அமைப்பதற்கான பணிகளை சில அதிகாரிகள் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குலசேகரப்பட்டினத்தில் ஏவு தளம் அமைந்தால் ஸ்ரீஹரிகோட்டாவின் முக்கியத்துவம் குறைந்துவிடுமோ என்றும் ஆந்திராவைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் அஞ்சுகின்றனர். அதனால், தற்போது ஸ்ரீஹரிகோட்டாவிலேயே மூன்றாவது ராக்கெட் ஏவு தளத்தை அமைக்கலாம் அல்லது கிருஷ்ணா மாவட்டத்தில் அமைக்கலாம் என்று அதிகாரிகள் சிலர் காய் நகர்த்தி வருகின்றனர்.

ஆனால், விண்வெளிப் பணியாளர்கள் சங்கம் மற்றும் லிக்யூட் ப்ராப்புல்லேஷன் சிஸ்டம்ஸ் மையத்தின் பணியாளர்கள் சங்கம் (எல்.பி.எஸ்.சி.எஸ்.ஏ.) ஆகியவை குலசேகரப்பட்டினத்தில்தான் மூன்றாவது ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசுக்கும் பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியும் குலசேகரப்பட்டினத்தில் ஏவு தளம் அமைக்க வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார். ஆனாலும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

குலசேகரப்பட்டினம் ஏன்?

தமிழகம், ஆந்திரம் என்ற பாகுபாடு இல்லாமல் புவியியல், நாட்டின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி ரீதியாக மட்டுமே குலசேகரப்பட்டினத்தில் ஏன் மூன்றாவது ஏவு தளம் அமைக்க வேண்டும் என்று பார்ப்போம்.

* பொதுவாக தொலை உணர்வு செயற்கைக்கோள்களை ஏந்திச் செல்லும் ராக்கெட்டுகள் கிழக்குக் கடற்கரையை ஒட்டி பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்க வேண்டும். அங்கிருந்து ராக்கெட்டுகளை ஏவும்போது ராக்கெட் செயல் இழந்து வெடித்தாலும்கூட அது நிலப்பரப்பில் விழாமல் கடலில் விழும். தவிர, பூமத்திய ரேகைக்கு அருகில் கிழக்கில் இருந்து ஏவும்போதுதான் செயற்கைக்கோள்கள் பூமிக்கு மேல் வட, தென் துருவத்தில் மேற்கு, கிழக்காக சுற்றும். அப்படி சுற்றும்போதுதான் பூமியில் உளவு பணிகளைப் பார்த்தல், வளங்களை ஆராய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் தென் அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாதான் உலகிலேயே மிகச் சிறந்த, உகந்த, பாதுகாப்பான ஏவு தளம். ஏனெனில் அது பூமத்திய ரேகைக்கு மிக அருகில் 5 டிகிரி நெருக்கக் கோணத்தில் இருக்கிறது.

அதன்படி பார்த்தால் இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் பூமத்தியரேகைக்கு மிக அருகில் இருப்பது கன்னியாகுமரி. ஆனால், கன்னியாகுமரி மக்கள் அடர்த்தி மிக்க இடம்; சுற்றுலாதலம். தவிர வெற்று நிலப்பரப்பு குறைவு. எனவே, அதற்கு அடுத்து பூமத்தியரேகைக்கு அருகே எட்டு டிகிரி நெருக்கத்தில் இருக்கிறது குலசேகரப்பட்டினம். இது ஸ்ரீஹரிகோட்டாவின் 13.43 டிகிரியைவிட மிக நெருக்கம். இங்கிருந்து ராக்கெட்டுகளை ஏவும்போதுதான் அவை அண்டார்டிகாவை நோக்கிச் சென்று செயற்கைக்கோள்கள் வட, தென் துருவம் நோக்கிச் சுற்றும்.

* உலகளாவிய விண்வெளி விதிமுறைகளின்படி ஒரு நாட்டின் ராக்கெட் இன்னொரு நாட்டின் பரப்பு மேலாக பறக்கக் கூடாது. பாதுகாப்புக்காக இந்த விதிமுறை. அதனால், தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகள் இலங்கை, இந்தோனோஷியா நாடுகள் பரப்பின் மேல் செல்வதைத் தவிர்க்க தென்கிழக்காக திசை திருப்பி ஏவி, பின்பு கிழக்கு நோக்கி செலுத்தப்படுகிகிறது. இப்படி ஆயிரக்கணக்கான கி.மீட்டர் தொலைவுக்கு சுற்றிக்கொண்டு செல்வதால் அதிக எரிபொருள் செலவு ஏற்படுகிறது. அதன்படி குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் செலுத்தப்படும்போது அதுவும் இந்த சுற்றுப்பாதையில்தான் செல்லும்; ஆனாலும், ஸ்ரீஹரிகோட்டாவைவிட தொலைவு குறைவு. அதேசமயம், பி.எஸ்.எல்.வி. ராக்கெட் எங்கும் சுற்றாமல் நேரடியாக விண்ணுக்கு செலுத்த முடியும்.

* தற்போதைய பி.எஸ்.எல்.வி. தொலை உணர்வு செயற்கைக்கோள்களை ஏந்திச் செல்லும் ராக்கெட்டுகள் நான்கு எரிபொருள் பேக்கேஜ்களை கொண்டவை. குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் செலுத்தும்போது அது செல்லவேண்டிய தொலைவு குறைவதால் நான்காவது பேக்கேஜ் தேவை இல்லை. இதனால், ராக்கெட்டுடன் 600 கிலோ எடையை கூடுதலாக அனுப்பலாம். இது சாதாரண விஷயம் அல்ல; ஒரு கிலோ எடையை விண்ணில் செலுத்த இன்றைய உலக விண்வெளிச் சந்தையில் கட்டணம் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் டாலர். அப்படி எனில் வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களை ஏவுவதின் மூலம் 600 கிலோவுக்கு ஒரு கோடியே 20 லட்சம் டாலர் முதல் ஒரு கோடியே 80 லட்சம் டாலர் வரை வருமானம் ஈட்டலாம். சொந்த செயற்கைக்கோள் ஏவுவதில் அதே அளவிலான நஷ்டத்தைத் தவிர்க்கலாம்.

* மேற்கண்ட பொருளாதார கணக்கீட்டின்படி ஒரு ராக்கெட் ஏவுதலில் (single launch) மட்டும் சுமார் 100 கோடி ரூபாயை சேமிக்கலாம். தற்போது ஒரு புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்க சுமார் 12,000 கோடி ரூபாய் தேவை எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 12-வது ஐந்தாண்டு திட்டத்தின்படி ஆண்டுக்கு 60 விண்வெளித் திட்டங்கள் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு ஆண்டுகளில் 120 விண்வெளித் திட்டங்களிலேயே குலசேகரப்பட்டினம் ஏவுதளம் அமைக்க செலவிடப்பட்ட மூதலீடான 12,000 கோடி ரூபாயை எடுத்துவிடலாம்.

* மிக, மிக, மிக முக்கியமான விஷயம் நாட்டின் பாதுகாப்பு. போர் மற்றும் தீவிரவாதத் தாக்குதல் போன்ற இக்கட்டான நேரங்களில் எதிரி நாடுகளும் சரி... தீவிரவாதிகளும் சரி... குறி வைக்கும் இடங்களில் முதன்மையானது ராக்கெட் ஏவுதளங்கள். அப்படி இருக்கும்போது நாட்டில் ஒரே இடத்தில் அனைத்து ராக்கெட் ஏவு தளங்களும் இருப்பது பாதுகாப்புக்கு உகந்தது அல்ல. எதிரிகள் ஒரு இடத்தை தாக்கி அழித்துவிட்டாலும் இன்னொரு ஏவு தளம் இருந்தால்தான் சமாளிக்க முடியும்.

* ராக்கெட் ஏவுதளங்களில் விபத்துகள் நடக்கவும் சாத்தியங்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு பிரேசிலின் ஏவுதளம் ஒன்றில் ராக்கெட்டை நிலைநிறுத்தும்போதே ராக்கெட் வெடித்துச் சிதறியது. விபத்தில் ஏவுதளம் முற்றிலும் அழிந்ததுடன் ஏராளமானோர் இறந்தனர். அதனால், அனைத்து ஏவுதளங்களையும் ஒரே இடத்தில் அமைக்காமல் கூடுதல் இடங்களில் அமைப்பது பாதுகாப்பானது.

* பூமத்திய ரேகையின் அருகாமையில் இலங்கை இருப்பதால்தான் சீனா இலங்கையில் ராக்கெட் ஏவுதளம் நிறுவத் திட்டமிட்டுள்ளது. எனவே, இலங்கைக்கு அருகில் இருக்கும் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதுதான் நாட்டின் பாதுகாப்புக்கு உசிதம்.

* குலசேகரப்பட்டினம் இயற்கைப் பேரழிவுகள் நடக்க மிகக் குறைந்த சாத்தியம் உள்ள பகுதி. ஸ்ரீஹரிகோட்டாவைப்போல் இங்கு புயல் அபாயம் கிடையாது.

* க்ரையோஜெனிக், செமி - க்ரையோஜெனிக் வகை திரவ எரிபொருள் ராக்கெட் மற்றும் அதன் பாகங்களைத் தயாரிக்கும் இஸ்ரோவின் மகேந்திரபுரி மையம் குலசேகரப்பட்டினத்துக்கு அருகில் இருக்கிறது. ராக்கெட் ஏவுதல் தொடர்பான மொத்தப் பணிகளையும் மேற்கொள்ளும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் அமைந்துள்ள திருவனந்தபுரம் மற்ற இடங்களை ஒப்பிடுகையில் குலசேகரப்பட்டினத்துக்கு அருகில்தான் இருக்கிறது. இதனால், எரிபொருள் சேமிப்பு உள்ளிட்ட ஏராளமான வசதிகள் கிடைக்கும்.

* குலசேகரப்பட்டினம் அருகே சுமார் 10 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலம் பயன்பாடு இல்லாமல் கிடக்கிறது. ஏவு மையத்துக்கு தேவை சுமார் 1000 ஏக்கர் மட்டுமே. எதிர்காலத்தில் ஏவு தளத்தை விரிவுப்படுத்தவும் இது வசதியாக அமையும். மேலும், விளை நிலங்களையோ சாலைகளையோ கட்டுமானங்களையோ சேதப்படுத்தாமல்... குறிப்பாக யார் வயிற்றிலும் அடிக்காமல் நிலத்தைக் கையகப்படுத்தலாம்.

இதுகுறித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக கனிமொழியிடம் பேசியபோது, ‘‘குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டால் தென் மாவட்டங்கள் மொத்தமும் தொழில், கல்வி, மருத்துவ உள்ளிட்ட கட்டமைப்புகளில் பெரும் வளர்ச்சி பெறும். அதனால்தான் திமுக தலைவர் கருணாநிதியிடம் இந்த விஷயத்தைக் கொண்டுச் சென்றேன். நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பினேன். வரும் கூட்டத் தொடரில் இதற்கான பதிலை தருவதாக சொல்லியிருக்கிறார்கள். மேலும், கட்சி பாகுபாடு பார்க்காமல் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.” என்றார்.

சுற்றுச்சூழல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் பொறியாளர் சுந்தர்ராஜன் இதுகுறித்துக் கூறுகையில், “குலசேகரப்பட்டினத்தில் வரவிருக்கும் ராக்கெட் ஏவுதளம் செயற்கைக்கோள்களை மட்டும் ஏவும்பட்சத்தில் பிரச்சினை இல்லை. மாறாக அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணைகளை இங்கு வைத்து ஏவும் திட்டம் இருந்தால் கடும் எதிர்ப்பு தெரிவிப்போம். மேலும், எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தும் முன்பாக அந்தப் பகுதி மக்களின் கருத்தை கேட்டு ஆதரவு பெற வேண்டியது முக்கியம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்