பாம்பாற்றின் குறுக்கே மீண்டும் கட்டுமானப் பணி: கேரள அரசு மீது தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு

By எம்.நாகராஜன்

பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு மீண்டும் அணை கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாக, தமிழக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அமராவதி அணையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்று, கேரளா மாநிலம் மூணார், மறையூர் வழியாக வரும் பாம்பாறு. இதன்மூலமாக திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அமராவதி ஆற்றில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலமாக, பல லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

கடந்த 2012 ஜூன் மாதம் பாம்பாற்றுக்கு குறுக்கே கேரளா அணை கட்ட முயன்றதைக் கண்டித்து, தமிழகத்தில் அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன. இதையடுத்து, அணை கட்டுவதை கேரளா கைவிட்டது. மீண்டும், 2014 நவம்பரில் பட்டிச்சேரி பகுதியில் அணை கட்டுமானப் பணிகளை மேற்கொண்டது. இதற்கும் எழுந்த எதிர்ப்பை அடுத்து, கட்டுமானப் பணிகளை கிடப்பில் போட்டது.

தற்போது, மீண்டும் அங்கு பெரிய அளவிலான கட்டுமானப் பணிகளுக்கு தேவையான பொருட்களை குவித்து வருவதாகவும், 2 டி.எம்.சி. அளவு நீரை தேக்கும் கொள்ளளவு கொண்ட அணையை கட்டி வருவதாகவும் தமிழக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அமராவதி பாசனத்தில் உள்ள ராமகுளம் பாசன சபைத் தலைவர் ஆர்.டி.மாரியப்பன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தற்போது ‘இடுக்கி பேக்கேஜ்’ என்ற பெயரில் ரூ.24 கோடி செலவில் மீண்டும் பணிகளை கேரளா அரசு தொடங்கியுள்ளது. ஏற்கெனவே, பட்டிசேரி தடுப்பணையை உடைத்துவிட்டு, அங்குள்ள மலைகளுக்கு நடுவே பிரம்மாண்ட அணையை கட்டுவதற்கான பொருட்களை குவித்து வருகின்றனர்.

சுமார் 2 டி.எம்.சி. நீரை தேக்கும் அளவுக்கு அணை கட்டப்படும் எனக் கூறப்படுகிறது. அதேபோல், அதனை அடுத்த செங்கல்லாறு தடுப்பணையும் 3 அடி உயர்த்தப்பட்டுள்ளது. காவிரி நதி நீர் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் சிலவற்றை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

காவிரி தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பின் படி, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழு இன்னும் அமைக்கப்படவில்லை. இதற்கிடையே புதிய அணை கட்டுமானத் திட்டங்களை தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி இன்றி மேற்கொள்ள முடியாது. ஆனால், கேரள அரசு இவற்றை பொருட்படுத்தாமல் மீண்டும் அணை கட்டுமானப் பணிகளை செய்து வருகிறது.

அமராவதி அணையின் மொத்த கொள்ளளவு 4 டி.எம்.சி. பட்டிசேரியில் அணை கட்டி முடிக்கப்பட்டால் 2 டி.எம்.சி. நீர் தடுக்கப்படும். இதனால், அமராவதி பாசனத்தை நம்பியுள்ள 60 ஆயிரம் ஏக்கர் நிலமும், அதனைச் சார்ந்துள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளும், கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலமாக பயன்பெறும் பல லட்சம் மக்களும் பாதிப்புக்கு உள்ளாவர். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மூடும் நிலையும் ஏற்படும்.

தமிழக அரசும், பொதுப்பணித் துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அணை கட்டும் முயற்சியை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அமராவதி அணை செயற்பொறியாளர் மு.கொழந்தைசாமி ‘தி இந்து’விடம் கூறும்போது, “அணையின் உதவி செயற்பொறியாளர் கா.தருமன் தலைமையிலான தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள், கேரள மாநிலம் காந்தலூர், பட்டிசேரியில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், விதிகளுக்கு மாறாக அணை கட்டுமானப் பணிகளை கேரளா மேற்கொண்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்காக அங்குள்ள கற்களை உடைத்தும், ஜல்லிகளை குவித்தும் அஸ்திவாரம் அமைப்பதற்கான கான்கிரீட் பணிகளை தொடங்கியுள்ளனர். இதுகுறித்து, தமிழக அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்