மெரினா கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்ற நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

மெரினா கடற்கரை சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்றுமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் மறைந்த சிவாஜி கணேசனை கவுரவிக்கும் வகையில், சென்னை கடற்கரை சாலையில் அவருக்கு தமிழக அரசு சார்பில் முழுஉருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டது. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையும், காமராஜர் சாலையும் சந்திக்கும் இடத்தில் 12.7.2006 அன்று சிவாஜி சிலை நிறுவப்பட்டது.

இந்நிலையில், அந்த சிலையை அங்கிருந்து அகற்றக் கோரி காந்தியவாதியான பி.என்.சீனிவாசன், உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்தார். ‘காந்தியடிகளின் சிலையை மறைக்கும் வகையிலும், கடற்கரை சாலைப் போக்குவரத்துக்கு இடையூறாகவும் சிவாஜி சிலை உள்ளதால் அதை அகற்ற வேண்டும்’ என்று சீனிவாசன் தனது மனுவில் கோரியிருந்தார்.

சீனிவாசனின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் நாகராஜன் இந்த வழக்கை நடத்தி வந்தார்.

இதற்கிடையே சிவாஜி சிலையை அகற்றக் கூடாது எனக் கோரி சிவாஜி சமூக நலப் பேரவைத் தலைவர் கே.சந்திரசேகரன் உள்ளிட்டோர் இந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த காவல் துறையினர், கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலையால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறியிருந்தனர்.

காவல் துறை அறிக்கை அடிப்படையில் சிவாஜி சிலையை உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி வாதிட்டார். இதற்கு சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் எதிர்ப்பு தெரிவித்தார்.

‘சிவாஜிக்கு கடற்கரை சாலையில் சிலை நிறுவுவது என்பது 2006-ம் ஆண்டில் தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவு. ஒரு அரசு எடுக்கும் கொள்கை முடிவை அடுத்து வரும் அரசு மாற்ற முடியாது’ என்று அவர் வாதிட்டார். தமிழக அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜரானார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிஹோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் வியாழக்கிழமை தீர்ப்பளித்தனர். கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்றுவது பற்றி முடிவெடுக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளதாவது:

சாலைகள் என்பது பொதுமக்களின் போக்குவரத்துப் பயன்பாட்டுக்காக மட்டுமே. மாறாக சிலைகள், நினைவுச் சின்னங்கள் போன்றவற்றை சாலைகளில் அமைக்கக் கூடாது. பெரும் தலைவர்கள், சான்றோர்களை உரிய வகையில் கவுரவப்படுத்த வேண்டும்.

ஆனால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலைகளின் நடுவில் சிலைகளை அமைத்துதான் அவர்களை கவுரவப்படுத்த வேண்டும் என்பது சரியல்ல. உண்மையில் அவ்வாறு செய்வது அந்தத் தலைவர்களுக்கு அவமரியாதையைத்தான் ஏற்படுத்தும். சாலை நடுவில் சிலை அமைத்து சிவாஜி கணேசன் போன்ற புகழ்பெற்ற மனிதர்களின் பெயர்களை வழக்குகளுக்காக இழுத்து வரக் கூடாது.

சாலைகளில் சிலைகள் போன்ற நிரந்தர கட்டுமானங்களை அமைக்கக் கூடாது என்ற விதிமுறை அனைவருக்கும் பொருந்தும். சாலையில் சிலை நிறுவ அரசுக்கு மட்டும் சிறப்பு உரிமை எதுவும் வழங்கப்படவில்லை.

இந்த வழக்கைப் பொறுத்தவரை கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலையால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக காவல் துறையினர் கூறியுள்ளனர். ஆகவே, சிவாஜி சிலையை அகற்றுவது தொடர்பாக மாநில அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்