இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் வலுவான தீர்மானம் கொண்டுவர வேண்டும்: மே பதினேழு இயக்கம் வலியுறுத்தல்

அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் ஈழத் தமிழர்களுக்கான எந்தத் தீர்வும் இல்லை. எனவே, தமிழ் அமைப்புகள் இணைந்து சர்வதேச அறிஞர்களின் உதவியோடு உருவாக்கியுள்ள தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என உலக நாடுகளிடம் வலியுறுத்தப் போவதாக மே பதினேழு இயக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன், உமர் ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

இலங்கை பிரச்சினை தொடர்பாக ஐ.நா.வில் கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. ஆனால், அதில் ஈழத்தமிழர்களுக்கு எந்தத் தீர்வும் இல்லை.

தற்போது பல்வேறு தமிழ் அமைப்புகள் இணைந்து சர்வதேச அறிஞர்களின் உதவியோடு ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளை வைத்து ஒரு தீர்மானத்தை வடிவமைத்துள்ளனர். இதற்கு தமிழகத்தில் 18 தமிழ் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்தத் தீர்மானத்தை ஐ.நா.வில் நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை பதிவு செய்ய வேண்டும், அங்கு தொடர்ந்து நடக்கும் ராணுவ அடக்குமுறைகளை நிறுத்த வேண்டும், பெண்களுக்கு கருத்தடை செய்வதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக இந்தத் தீர்மானம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை ஐ.நா.விடம் நேரடியாக கொடுக்க முடியாது. எனவே, ஐ.நா.வில் உள்ள தமிழ்ப் பிரதிநிதிகள் மூலம் உலக நாடுகளிடம் கொடுத்து வலியுறுத்த உள்ளோம். அதன் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக வலுவான தீர்மானத்தைக் கொண்டுவர முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE