குடி போதையில் கார் ஓட்டி கொடூரம்: போலீஸ் உள்பட 3 பேர் பலி
தீபாவளி பண்டிகை தினமான சனிக்கிழமையன்று சென்னையில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. சனிக்கிழமை அதிகாலையில் சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் சிலர் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அடையாறை நோக்கி வேகமாக சென்ற ஒரு கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, பஸ் நிறுத்தத்துக்குள் புகுந்தது. அங்கு நின்றவர்கள் மீது மோதிய கார், அதன் பின்னரும் நிற்காமல், அடுத்தடுத்து நின்ற இரண்டு கார்கள் மீதும் மோதி நின்றது.
பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த போலீஸ்காரர் சேகர் (43), மயிலாப்பூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த திலகவதி (33), திருவல்லிக்கேணி அயோத்தி நகர் அர்ஜுனன் (19) ஆகியோர் அந்த இடத்திலேய உயிரிழந்தனர். மேலும், பஸ் நிறுத்தத்தில் இருந்த மணிகண்டன் (20), துரை (60), பிரவீன்குமார் (23) மற்றும் காரில் வந்த அன்புச்சூரியன் (21), அவரது அக்கா லட்சுமி, கிருஷ் (22) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து வந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான காரை அன்புச்சூரியன் ஓட்டி வந்திருக்கிறார். அடையாறு காந்தி நகரில் உள்ள சுசிலா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மூன்று பேரும் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பி வந்துள்ளனர்.
காரை ஓட்டிய அன்புச்சூரியன், குடிபோதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். விபத்தைப் பார்த்து ஆத்திரமடைந்த அப்பகுதி மீனவ மக்கள், காரை அடித்து உடைத்தனர்.
விபத்தில் பலியான போலீஸ்காரர் சேகர், மெரினா காவல் நிலையத்தில் பணியாற்றினார். இவரது சொந்த ஊர் மயிலாடுதுறை. எழும்பூர் நரியங்காடு போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.
பலியான திலகவதியின் கணவர் சிவக்குமார், சமீபத்தில் நடந்த விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்தார். இவர்களுக்கு சினேகா (15) என்ற மகளும், பிஸ்வா (11) என்ற மகனும் உள்ளனர்.