அனைவருக்கும் கல்வித் திட்ட நிதியை குறைக்கக் கூடாது: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்காக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் நிதியை குறைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்படி தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை மத்திய அரசு பாதியாக குறைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிகவும் வருத்தமளிக்கும் ஒன்றாகும்.

இந்தியாவில் கல்வி கற்காத குழந்தைகளே இருக்கக்கூடாது என்ற எண்ணத்துடன் ஏற்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின்படி தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி கடந்த 2009-10 ஆண்டில் ரூ.862 கோடியாக இருந்த தமிழகத்திற்கான நிதிஒதுக்கீடு படிப்படியாக அதிகரித்து கடந்த ஆண்டில் ரூ.1988.24 கோடியாக அதிகரித்தது.

நடப்பாண்டில் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.3000 கோடியாக உயர்த்தித் தரும்படி மத்திய அரசை தமிழக அரசு கோரியிருந்தது. ஆனால், அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்ட மத்திய அரசு, கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட சுமார் ரூ. 500 கோடி குறைவாக ரூ. 1500 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறது.

14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்குவதென்றால் ஒவ்வொரு ஆண்டும் புதிய பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்; ஏற்கனவே திறக்கப்பட்டப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப் பட வேண்டும் என்பது தான் இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான பள்ளிகளில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. இவற்றையெல்லாம் செய்து தர அதிக அளவில் நிதி உதவி தேவைப்படும் நிலையில், ஏற்கனவே ஒதுக்கப்பட்டு வந்த நிதியில் 25 விழுக்காட்டை குறைத்திருப்பது எந்த வகையிலும் நியாயமாக இருக்காது.

ஒரு நாடு அறிவார்ந்த பூமியாக உருவெடுக்க வேண்டுமானால், தொடக்கக் கல்வியில் அதிக அளவில் முதலீடு செய்யப்பட வேண்டும் என்பது தான் உலகம் முழுவதும் உள்ள கல்வியாளர்களின் கருத்தாகும். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடக்கக் கல்வி வழங்குவதற்கான திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை குறைப்பது அறிவு மரத்தை அமிலம் ஊற்றி அழிக்கும் செயலுக்கு சமமானதாகும்.

அனைவருக்கும் கல்வி இயக்க நிதி இந்தளவுக்கு குறைக்கப்பட்டால் புதிய பள்ளிகளை தொடங்க முடியாத நிலை எற்படுவதுடன், இருக்கும் பள்ளிகளையும் மூட வேண்டிய அவலம் உருவாகும். கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்காக கடந்த ஆண்டை விட 17 விழுக்காடு அதிகமாக ரூ. 27,258 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் தொகை போதுமானதல்ல என்று எதிர்க்கட்சிகள் கூறியபோது கல்வித் துறையை பொறுத்தவரை பணம் ஒரு பொருட்டல்ல என்றும், தேவையான நேரத்தில், தேவையான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் மத்திய அரசின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அந்த உத்தரவாதத்திற்கு மாறாக தமிழ்நாட்டிற்கான அனைவருக்கும் கல்வி இயக்க நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது ஏற்கக் கூடியதல்ல.

இந்தியாவில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பது உண்மை தான். அதை சமாளிப்பதற்காக மத்திய நிதி அமைச்சகம் நேற்று அறிவித்தது போன்ற சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தலாம். அதைவிடுத்து கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைப்பது நாட்டின் வளர்ச்சியில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

எனவே, அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்காக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் நிதியை குறைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழ்நாட்டில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்தவும், புதிய பள்ளிகளைத் தொடங்கவும் வசதியாக மாநில அரசு கோரியவாறு ரூ. 3000 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்