சென்னையில் இயக்கப்பட்டுவரும் புறநகர் ரயில்களில் சிறுவர்கள் சிலர் பந்தயம் கட்டி புட் போர்டில் (படியில்) பயணித்து வருகிறார்கள். அவர்களை கண்டிக்கும் பயணிகள் மீது கல் வீசி தாக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கடற்கரை – வேளச்சேரி மார்க்க புறநகர் ரயில்களில் சிறுவர்கள் ‘புட் போர்டு’ அடிப்பது தொடர் கதையாகி வருகிறது. 13 முதல் 17 வயது வரையிலான சிறுவர்கள் ரயில்களில் பந்தயம்
கட்டி ‘புட் போர்டு’ அடிக்கும் புது கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளனர். இந்த சிறுவர்கள், பள்ளிக்கூடத்திற்கு கூட செல்லாமல் காலை முதல் மாலை வரை ரயில்களில் சுற்றுவதாக ரயில்களில் வியாபாரம் செய்பவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்ட பிறகு, அதன் கூடவே அந்த சிறுவர்கள் ஓடுகிறார்கள். வேகம் அதிகமாக அதிகமாக ஓட முடியாதவர்கள் ஒவ்வொருவராக ரயிலில் ஏறிவிடுகின்றனர். மிகவும் வேகமாக ஓடி கடைசியாக ரயில் ஏறுபவர்தான் பந்தயத்தில் வெற்றி பெற்றவராம். உயிருக்கே ஆபத்தான இந்த செயலை அந்த சிறுவர்கள், பந்தயம் கட்டி செய்வதாக சொல்லப்படுகிறது.
தாம்பரம் மார்க்கத்தில் ரயில்வே காவல்துறையின் கண்காணிப்பு அதிகம் என்பதால் பெரும்பாலும் சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தையே இத்தகைய சிறுவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். வெற்றிபெற்றவர்களுக்கு 5 ரூபாய் முதல் ஐம்பது ரூபாய் வரை பந்தயம் கட்டுவதாக கூறப்படுகிறது. பணம் இல்லாத நேரத்தில் ஜாலிக்காக ‘புட் போர்டு’ அடிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள்.
இது குறித்து கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் தினசரி பயணிக்கும் சந்தோஷ் கூறுகையில், “தரமணியில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறேன். தினமும் சிந்தாதிரிப்பேட்டை அல்லது திருமயிலை ரயில் நிலையத்திற்கு வரும் 8 அல்லது 10 சிறுவர்களைக் கொண்ட குழு, ரயிலில் ‘புட் போர்டு’ அடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு காலை ரயிலிலும் இன்னொரு காலை நடைமேடையிலும் வைத்து தேய்த்துக்கொண்டே பயணிக்கிறார்கள்” என்றார்.
ரயிலில் பாப் கார்ன் வியாபாரம் செய்து வரும் கலைச்செல்வன் கூறுகையில், “ரயிலில் ‘புட் போர்டு’ அடிக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒருமுறை இவர்கள் இதுபோல செய்தபோது, கண் பார்வையற்றவர் ஒருவரை இடித்து கீழே தள்ளிவிட்டனர். இந்த சிறுவர்களை கண்டித்தால் கல்லால் அடிப்பது, தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு ஓடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்” என்றார்.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட முதுநிலை பாதுகாப்பு கமிஷனரான காந்தியிடம் கேட்டபோது, “சிறுவர்கள் பந்தயம் கட்டி ‘புட் போர்டு’ அடிக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இத்தகைய சிறுவர்களைப் பிடிக்க சிறப்பு பாதுகாப்புப் படை அமைத்துள்ளோம். அவர்கள் ரயில்களை கண்காணிப்பார்கள்” என்று கூறினார்.
சென்னையில் ரயில் ‘புட் போர்டு’ அடித்ததால் விபத்தில் சிக்கி கடந்த ஆண்டு மட்டும் 837 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago