அதிமுகவை கைப்பற்ற சதி: கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு

By எஸ்.ராஜா செல்லம்

அதிமுக தொண்டர்களிடம் தவறான வரலாற்றை சேர்க்கப் பார்க்கிறார் திவாகரன் - கே.பி.முனுசாமி ஆவேசம்

பொங்கல் விழாவின்போது அதிமுக தொடர்பான திவாகரன் பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கண்டனம் தெரிவித்தார்.

பொங்கல் விழாவின்போது, அதிமுக-வை வழி நடத்தியவர் நடராஜன் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேசியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று அவர் கூறியது:

கல்லூரி நாட்களுக்கு முன்பிருந்தே நான் அதிமுக தொண்டன். நான் ஏற்றுக்கொண்ட கட்சியின் தலைமைக்கு விசுவாசம் மற்றும் உண்மையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். தஞ்சாவூரில் நடராஜன் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழாவில் அவரது உறவினர் திவாகரன் கலந்து கொண்டு பேசினார். அவரின் பேச்சு அதிமுக தொண்டன், நிர்வாகி என அனைத்து தரப்பினரின் உணர்வுகளையும் காயப்படுத்தி உள்ளது. அவர் தனது பேச்சுக்காக அதிமுக-வின் தொண்டர்கள் அனைவரிடமும் வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதிமுக உரு வாக்கப்பட்ட பிறகு முதல்முறை யாக திண்டுக்கல் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலை நாங்கள் தான் முன்னின்று நடத்தினோம் என்று அவர் கூறியுள்ளார்.

அந்த தேர்தலின்போது தொண்டனாக இருந்து நான் பணியாற்றியுள்ளேன். ஆனால், அவருக்கும் அந்த தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்? அந்த தேர்தலில் எம்ஜிஆர் பெற்ற வெற்றி அவரது புகழுக்கு கிடைத்த வெற்றி. அதிமுக என்ற இயக்கத்துக்கு துளியும் தொடர்பில்லாத ஒரு நபர் அந்த வெற்றி தனது உழைப்பால் வந்தது என்ற ரீதியில் பேசுகிறார். இயக்கத்தையே வழி நடத்தியதாகவும் கூறுகிறார். இதை வன்மையாக நான் கண்டிக்கிறேன். அதேபோல, அதிமுக இரண்டாக பிரிந்தபோது கட்சியை இணைத்தவர் என் மாமா நடராஜன் என்று அவர் பேசியுள்ளார். அவர் அப்போது எங்கே, என்ன நிலையில் இருந்தார் என்பதை நாடே அறியும். ஆனால், நானும் அதில் பங்கு பெற்றேன் என்கிறார் அவர்.

கட்சி இரண்டாக உடைந்த பிறகு எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மையார் அவராகவே முன்வந்து ஜெயலலிதாவிடம் இயக்கத்துக்கு தலைமை ஏற்குமாறு கூறி, இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைக்கும் வகையில் கையெழுத்திட்டு தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தார்.

ஆனால், இவர்கள் குடும்பம், இவர்களின் மாமா, மச்சான் இணைந்துதான் இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுத் தந்ததாகக் கூறுவது எவ்வளவு பெரிய தவறு? அதிமுக-வின் வரலாற்று உண்மைக்கு, முரணான பேச்சு இது.

இந்த இயக்கத்துக்காக தங்களை முழுமையாக ஈடுபடுத்தி உழைத்த, ரத்தம் சிந்திய, உயிர் நீத்த பல ஆயிரக்கணக்கான தொண்டர்களின் தியாகத்தின் பலனை இந்த இருவரும் (திவாகரன், நடராஜன்) பெற நினைப்பது எவ்வளவு பெரிய மோசடி. இப்படியொரு கருத்தை கூறிய திவாகரனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பி.எச்.பாண்டியன்

மக்களால் தொடங்கப்பட்ட அதிமுக எனும் மக்கள் இயக்கத்தில் நானும் இணைகிறேன் என்று கூறியவர் எம்ஜிஆர். இதை வரலாற்றில் தேடினால் கிடைக்காது. பி.எச்.பாண்டி யன் போன்றவர்கள் அந்த கால கட்டத்தில் இந்த இயக்கத்துக்காக கடுமையாக உழைத்தவர்கள். இந்நிலையில், திவாகரன் தற்போது அந்த பேரியக்கத்துக்கு உரிமை கொண்டாட முயற்சிக்கிறார்.

அதிமுக-வில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள, அதிகார மையம் ஒன்றை உருவாக்கி அதில் கோலோச்ச இதுபோன்ற தவறான தகவல்களை அவர் பேசி கட்சியினரை ஏமாற்ற நினைக்கிறார். இதுபோன்ற தவறான கருத்துகளை இனி பேசக்கூடாது. இன்றைய முதல் வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஜெய லலிதா பொறுப்பை வழங்கினார். அவர் பல நேரங்களில் அடக்கமாக ஆட்சி நடத்தியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகும் அவருக்கு வாய்ப்பு வந்துள்ளது. அவர் மக்கள் எளிதில் அணுகக்கூடிய முதல்வராக இருந்து வருகிறார்.

இவ்வாறு எளிமையாகவும், ஆக்கப் பூர்வமாகவும் செயல்படும் முதல்வரின் ஆட்சிக்கு தொல்லை தர வேண்டும் என்று திவாகரன் கருத்து கூறுகிறார். கட்சியின் இன்றைய பொதுச் செயலாளருக்கு இது பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக-வில் அதிகார மையம் ஓரிடத்தில்தான் இருக்க வேண்டுமென நாங்கள் நினைக்கிறோம். ஆனால், வேறு சில கட்சிகளைப் போல குடும்ப உறுப்பினர் பலரிடமும் அதிகாரம் இருக்க வேண்டுமென திவாகரன், நடராஜன் ஆகியோர் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

ஆரம்பத்திலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய செயல் இது. கட்சியிலேயே இல்லாத, ஏற்கெனவே ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர் இந்த இயக்கத்தை காப்பாற்றுவேன் என்று கூறுவதை ஏற்க முடியாது. இதை உடனே தடுக்க வேண்டும். இது என் கருத்து அல்ல. கட்சித் தொண்டர்களின் கருத்து இது. அவர்கள் இருவரும் இந்த இயக்கத்தை தங்கள் வீட்டு சொத்தாக மாற்ற நினைக்கிறார்கள்.

ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட இந்த இயக்கம் எந்த விதத்திலும் கலகலத்து விடக் கூடாது. மாசடைந்து விடக் கூடாது. சோகமும், வருத்தமும் இருந்தாலும்கூட தலைமை பொறுப்பில் உள்ளவரை ஏற்று பணியாற்றுவது உண்மையான அதிமுக-வினரின் பணி. திவாகரன் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

இனி இதுபோன்ற அடாவடித் தனமான பேச்சின் மூலம் கட்சி தொண்டர்களை பயமுறுத்துவ தாகவோ, அதிமுக தொண்டர்களை தன் பக்கம் இழுக்க வேறு வித நடவடிக்கையில் ஈடுபடவோ கூடாது. இதை தொண்டனின் எச்சரிக்கையாகவும் கூறுகிறேன். இன்றைய பொதுச் செயலாளரை அவர்கள் சங்கடத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அதை தவிர்ப்பதற்கு உரிய சூழலை தற்போதைய பொதுச் செயலாளர் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்