உள்ளாட்சி: எங்கே போயின புனரமைக்கப்பட்ட ஏரிகள்?

By டி.எல்.சஞ்சீவி குமார்

சமீபத்தில் தமிழக முதல்வர் குடி மராமத்து திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். கடந்த 2016-17ம் ஆண்டு ரூ.100 கோடி இந்தத் திட்டத் துக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் 2017-18 நிதியாண்டுக்கு இந்தத் திட்டத்துக்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.300 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏரிகளில் நீரை சேமித்து வைத்து, அதன் மூலம் நிலத்தடி நீரை செறிவூட்டி விவ சாயத்தை செம்மைப்படுத்துவதே இதன் நோக்கம் என்கிறது தமிழக அரசு. ‘குடிமராமத்து’ திட்டம் என் பது தமிழரின் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட நீர் மேலாண்மைத் திட்டம்.

தமிழகம் முழுவதும் தொடர் சங்கிலிகளாக இருந்த ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் மக்களே முறை வைத்து பராமரித்து வந்த பாரம்பரிய தொழில் நுட்பமே குடிமராமத்துத் திட்டம். அப்படி ஒரு பாரம்பரிய நீர் மேலாண்மைத் திட்டத்தை கொண்டு வந்தமைக்காக தமிழக அரசை பாராட் டலாம்.

அதேசமயம், இதற்கு முன்னர் இதே ஏரிகளுக்காக செயல்படுத்திய திட்டங்கள் என்ன ஆனது என்கிற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கடமையும் அரசுக்கு உண்டு. கடந்த 20 ஆண்டுகளில் தமிழக ஏரிகள், கண்மாய்களைப் புன ரமைக்க எத்தனையோ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. உலக வங்கி முதல் உள்ளூர் வங்கிகள் வரை கடன் வாங்கி பல்லாயிரம் கோடி ரூபாய்களை ஏரிகளில் கொட்டினார்கள். அவை எல்லாம் கூட போகட்டும். கடந்த 2012-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள 25,503 ஏரிகளை சீரமைக்கும் ஒரு திட்டத்தை செயல்படுத்தியது. இதற்காக 18.9.2012ம் அன்று ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அரசாணை ஒன்றையும் வெளியிட்டது.

பொதுப்பணித்துறையின் கட்டுப் பாட்டில் இருக்கும் 13,699 ஏரிகளில் 6,436 ஏரிகளில் ஏற்கெனவே பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. மீதமுள்ள 7,263 ஏரி களை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். முதல்கட்டமாக பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 3,894 பெரிய பாசன ஊருணிகள் மற்றும் கிராமப் பஞ்சாயத்துக்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் 21,609 சிறு பாசன ஏரிகள் அதன் முழு கொள்ளளவு பெறும் வகையில் புனரமைக்கப்படும்.

மத்திய அரசின் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட நிதி மற்றும் நபார்டு வங்கிக் கடன் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இதில் ஏரிகளை தூர் வாருவதற்கு ரூ.1,259 கோடி ரூபாயும், ஏரிகளை பழுது பார்ப்பதற்கும், கட்டுமானங்களை செய்வதற்கும் ரூ.175 கோடி ஒதுக்கப்படுகிறது. அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும். இதுதான் அந்த அரசாணையின் சுருக்கமான சாராம்சம்.

தமிழகத்தில் 39,202 ஏரிகள் இருக் கின்றன. அவற்றில் 100 ஏக்கருக்கும் அதிகமான ஆயக்கட்டு கொண்ட 18,789 ஏரிகள் பொதுப்பணித் துறையின் கட்டுப் பாட்டில் இருக்கின்றன. 100 ஏக்கருக்கும் குறைவான ஆயக்கட்டு கொண்டவை 20,413 ஏரிகள் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இவற்றின் மொத்த நீர் கொள்ளளவு 390 டி.எம்.சி. இது தமிழகத்தின் மொத்த அணைக் கட்டுகளின் நீர் கொள்ளளவான 243 டி.எம்.சி-யை விட அதிகம்.

இந்த புள்ளிவிவரத்தை ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், தமிழக அரசு அரசாணையில் சொல்லியிருப்பதுபோல 2013-2016 நான்கு ஆண்டு காலகட்டத்தில் மேற்கண்ட பணிகளை முடித்திருக்க வேண்டும். அவ்வாறு பணிகள் முடிக்கப்பட்டிருந்தால் தமிழகத்தில் மொத்தம் இருக்கும் 39,202 ஏரிகளில் 25,503 ஏரிகள் புனரமைக்கப்பட்டு, கடந்த காலங்களில் பெய்த மழை மற்றும் வெள்ளங்களின் காரணமாக இந்நேரம் அவை நிரம்பி வழிய வேண்டும். நிரம்பி வழியாவிட்டாலும் குறைந்தது 200 டி.எம்.சி. தண்ணீராவது இருக்க வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு தமிழகம் முழுவதும் விவசாயம் செழித்திருக்க வேண்டும்.

2016-ம் ஆண்டு நிறைவடைந்து மூன்று மாதங்கள் கூட முடியவில்லை. எங்கே போயின முழுமையாக புனரமைக்கப்பட்ட ஏரிகள்? எங்கே போனது சுமார் 200 டி.எம்.சி தண்ணீர்? மூன்று மாதங்கள்கூட முடியாத நிலையில் வானத்தில் இருந்து மண் கொட்டி ஏரிகள் தூர்ந்துப் போனதா? இல்லை, பூதங்கள் வந்து ஏரிகளின் தண்ணீரை குடித்துப்போயினவா?

- தொடரும்... | எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்