சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பின் முழு விவரம்

By செய்திப்பிரிவு

சங்கரராமன் கொலைக்கான மூலக்காரணம் நிரூபிக்கப்படவில்லை என்று தலைமை நீதிபதி முருகன் தெரிவித்தார். காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் மேலாளராக இருந்த சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி சி.எஸ். முருகன் அளித்தார். நீதிமன்றத்தில் அவர் தெரிவித்த தீர்ப்பின் முழு விவரம்:

கொலை செய்யப்பட்ட சங்கர ராமன் மனைவி பத்மா (அரசு சாட்சி 1), அவரது மகன் ஆனந்தசர்மா (அரசு சாட்சி 3) அரசு தரப்பு வழக்குக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர். கொலைக்கு மூலகாரணமான 30.8.2004ம் தேதியிட்ட இறுதிக் கடிதத்தைப் பொறுத்து, தலைமை புலன் விசாரணை அதிகாரி ஒப்புக்கொண்டபடி எந்த புலன் விசாரணையும் செய்யப்படவில்லை. கொலைக்கான மூலக்காரணம் நிரூபிக்கப்படவில்லை.

குற்றத்துக்கான கூட்டுச்சதியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் எதிரிகளில் அப்பு, கதிரவன் ஆகியோர் சதித்திட்டம் தீட்டிய சமயத்தில் அந்த இடத்தில் இல்லை. இது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. குற்ற கூட்டுச்சதி நிரூபிக்கப்படவில்லை.

வழக்கு புகார்தாரரும் சம்பவத்தைப் பார்த்த சாட்சியுமான கணேஷ் (அரசு தரப்பு சாட்சி 4), அரசு தரப்பு வழக்குக்கு எதிராக சாட்சியம் அளித்தார். வழக்கின் அடிப்படை ஆவணமான புகார் நிரூபிக்கப்படவில்லை.

மேலும், துரைக்கண்ணு (அரசு தரப்பு சாட்சி 5), குப்புசாமி (அரசு தரப்பு சாட்சி 6) ஆகியோர் அரசு தரப்புக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர். அதில் துரைக்கண்ணு, குப்புசாமி ஆகியோர் பிறழ் சாட்சியம் அளித்தனர்.

கொலை செய்யப்பட்ட சங்கரராமன் மனைவி பத்மா (அரசு தரப்பு சாட்சி 1) மகள் உமா மைத்ரேயி (அரசு தரப்பு சாட்சி 2) ஆகியோர் கொலையாளிகளை நீதிமன்றத்தில் அடையாளம் காட்ட முன்வரவில்லை.

சம்பவ இடத்தில் சம்பவத்துக்கு முன்பும், பின்பும் கொலையாளிகளைப் பார்த்த சாட்சிகள் அனைவரும் பிறழ் சாட்சிகள்.

சங்கரராமன் வழக்கில் அவரை 6 பேர் கொலை செய்ததாக குறிப்பிட்டிருந்தனர். அதை நிரூபிக்க விசாரிக்கப்பட்ட 20 சாட்சிகளும் அரசு தரப்புக்கு எதிராக சாட்சியம் அளித்தனர்.

எதிரிகளை அடையாள அணி வகுப்பின்போது அடையாளம் காட்டிய எந்த சாட்சிகளும் நீதிமன்றத்தில் அவர்களை அடையாளம் காட்டவில்லை. அவர்கள் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர்.

எதிரிகள் மீதான குற்றத்தை நிரூபிக்க விசாரிக்கப்பட்ட சாட்சிகளில் மிக முக்கியமான 83 சாட்சிகள் பிறழ் சாட்சியங்களாகின. எதிரிகளுக்கு எதிராக எந்த சாட்சியமும் அளிக்கவில்லை.

எதிரிகள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு, நீதித்துறை நடுவர் குற்ற வியல் நடைமுறை சட்டம் 164 பிரிவின்கீழ் வாக்குமூலம் பெற்றார். அவ்வாறு வாக்குமூலம் கொடுத்த மிக முக்கிய 17 சாட்சிகள் பிறழ் சாட்சியங்களாயின. அவர்களது சாட்சியங்கள் ஏதும் ஏற்கப்பட வில்லை.

கொலையாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களை, வழக்கு விசாரணையில் சாட்சிகள் அடையாளம் காட்டவில்லை.

கொலையாளிகள், போலி கொலையாளிகள் ஆகியோருக்கு எதிரிகள் பணம் தந்தது தொடர்பாக விசாரிக்கப்பட்ட 10 சாட்சிகளும் பிறழ் சாட்சியங்களாயின. எதிரிகள்தான் பணம் தந்தனர் என்பது நிரூபிக்கப்படவில்லை.

போலி கொலையாளிகளை சென்னை ஜார்ஜ்டவுன் 15-வது பெருநகர நடுவர் மன்றத்தில் ஆஜர் செய்த வழக்கறிஞர்கள் இருவரும் பிறழ் சாட்சிகளானார்கள். போலி குற்றவாளிகளை எதிரிகள்தான் சரணடைய வைத்தனர் என்பது நிரூபிக்கப்படவில்லை.

அடையாள அணிவகுப்பு நடத்திய கற்றறிந்த நீதித்துறை நடுவர்களின் சாட்சியத்துக்கு ஏற்ற விதத்தில், எந்த சாட்சிகளும் சாட்சியம் அளிக்க முன்வரவில்லை. இதனால் குற்றம் நிரூபிக்கப்படவில்லை.

காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார் புலன் விசாரணையில் தேவையற்ற தலையீடும், சட்டத்துக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளும் செய்துள்ளது தொடர்பாக உச்சநீதிமன்றம் கூறியுள்ள கருத்து, வழக்கு விசாரணையின்போது சாட்சி வாயிலாக நிரூபணமாகியுள்ளது.

காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார் புலன் விசாரணையில் தலையிட்டதுடன், தலைமை புலன் விசாரணை அதிகாரி (சக்திவேல்) தன்னிச்சையாக, பாரபட்சமின்றி சட்டத்துக்கு உட்பட்டு புலன்விசாரணை செய்ய அனுமதிக்கப்படவில்லை.

புலன் விசாரணையின்போது உள்ள சான்றுகளை நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்த புலன்விசாரணை அதிகாரி தவறி விட்டார்.

சில சாட்சிகள் (அரசு சாட்சி 30- கண்ணன்) வேண்டுமென்றே புகுத்தப்பட்டுள்ளனர். சில சாட்சிகள் குற்றவியல் நடைமுறை சட்டம் 164 பிரிவின் கீழ் வாக்குமூலம் தர அச்சுறுத்தப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டோரில் கதிரவன், சின்னா ஆகியோர் சட்டத்துக்கு புறம்பாக காவல்துறை காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

சம்பவத்தின்போது தலைமை காவலராகவும், தற்போது சார்பு ஆய்வாளராக இருக்கும் கண்ணன் (அரசு தரப்பு சாட்சி 154), குற்றவியல் நடைமுறை சட்டம் 164-ன் கீழ் வாக்குமூலம் தரவேண்டி இடைக்கால பணிநீக்கம் செய்துவிட்டு, வாக்குமூலம் தந்த பிறகு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இப்பிரிவின் கீழ் பெறப்பட்ட வாக்குமூலம் அச்சுறுத்தல் பெயரில் பெறப்பட்டது தெரியவந்துள்ளது.இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்கிறேன் என்று தெரிவித்தார்.

253 பக்கங்கள் தீர்ப்பு:

நீதிமன்றத்தில் தீர்ப்பு சாராம்சம் 3 பக்கங்களை நீதிபதி வாசித்தார். தீர்ப்பு மொத்தம் 253 பக்கங்கள் கொண்டது என நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மேல்முறையீடு?

சங்கரராமன் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக புதுவை மாநில அரசு முடிவு செய்யும் என சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.தேவதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

வழக்கில் அனைவரையும் விடுதலை செய்தது திருப்தி தரவில்லை. இவ்வழக்கு தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக அரசுத் தரப்பு கடினமாக பாடுபட்டது. இவ்வழக்கில் அரசுத் தரப்பைச் சேர்ந்த 83 சாட்சியங்கள் பிறழ் சாட்சியம் அளித்தனர். கொலைக்கான அடிப்படை காரணத்தை அரசுத் தரப்பால் நிரூபிக்க முடியவில்லை எனக்கூறி குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிபதி விடுவித்து விட்டார். சங்கரராமன் கொலை வழக்கில் மேல் முறையீடு செய்வது குறித்து புதுவை மாநில அரசு முடிவு செய்ய வேண்டும் என்றார் தேவதாஸ்.

ஜெயேந்திரர் காலில் விழுந்த சுந்தரேசன்

தீர்ப்புக்குப் பிறகு நீதிமன்றத்திலிருந்து வெளியே ஜெயேந்திரர் வந்தார். அப்போது 3-வதாகக் குற்றம்சாட்டப்பட்டு விடுதலையான சுந்தரேசன் அவர் காலில் விழுந்து வணங்கினார். கண்கலங்கியபடி எழுந்தார். அவரை பார்த்து கையை மட்டும் ஜெயேந்திரர் அசைத்தார். அப்போது ‘சங்கரா, சங்கரா’ என அங்கிருந்தோர் அவரைப் பார்த்து கூறினர்.

திருஷ்டி கழிப்பு

நீதிமன்றத்தில் பக்தர்கள் பலர் காத்திருந்தனர். நீதிமன்றம் நுழையும் இடத்தில் தேங்காய் வைத்து நீதிமன்றத்துக்கு திருஷ்டி கழிக்கத் தொடங்கினர். வக்கீல்கள் அதை எதிர்த்தனர். பிறகு பக்தர்கள் தேங்காயை நீதிமன்றம் முன்பு உடைத்தனர். இதன்காரணமாக பக்தர்களுக்கும், அங்கிருந்த சில வழக்கறிஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தீர்ப்புக்கு எதிராக கோஷம்

விடுதலை சிறுத்தைகள் வழக்கறிஞர் பிரிவினர் நீதிமன்ற வாயிலில் தீர்ப்புக்கு எதிராக கோஷம் எழுப்பினர். நீதி கிடைக்கவில்லை. உண்மை குற்றவாளிகளை கண்டறியவேண்டும். தமிழக அரசு இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

பரபரப்பான நீதிமன்றம்

புதுவை நீதிமன்ற வளாகத்தில் தனியார் டிவி சேனல்களைச் சேர்ந்த 12 நேரடி ஒளிபரப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. தீர்ப்பைக் கேட்க பத்திரிக்கையாளர்கள், தமிழக, புதுச்சேரி வழக்கறிஞர்கள் பலர் வந்திருந்தனர். இதனால் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

வழக்கையே மாற்றிய பிரேம்குமார்:

சங்கரராமன் கொலை செய்யப்பட்டபோது காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் பிரேம்குமார். அவர், விசாரணையைத் தொடங்கிய ஐந்தாவது நாளில் சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டார். புதிய கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்ற டேவிட்சன் விசாரணையைத் தொடர்ந்தார். ஆனால் தமிழக அரசு, சங்கரராமன் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டது. ஏற்கெனவே சி.பி.சி.ஐ.டி. கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த பிரேம்குமாரின் கைகளுக்கே மீண்டும் வழக்கு சென்றது. அதன் பின்னர் 26.11.2004-ல் மீண்டும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பிரேம்குமார் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. வசம் இருந்த சங்கரராமன் கொலை வழக்கும் மாவட்ட காவல் துறைக்கே மாற்றப்பட்டது. அதன் பிறகே வழக்கின் வேகம் சூடுபிடிக்கத் தொடங்கியது.

இந்த நிலையில் சங்கரராமனை கொலை செய்ததாக நீதிமன்றத்தில் சரண் அடைந்த தில்பாண்டியன், ஆறுமுகம், சதீஷ், அருண், தேவராஜ் ஆகிய ஐந்து பேரிடம் பிரேம்குமார் நேரடியாக விசாரணை நடத்தி, இவர்கள் போலியான குற்றவாளிகள் என்பதை கண்டுபிடித்து, அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 6 பேரை கைது செய்தார்.

அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து, ஜெயேந்திரர், விஜயேந்திரர் தூண்டுதலின்பேரில் சங்கரராமனை அப்பு, ரவிசுப்பிரமணியம், கதிரவன் ஆகியோர் கூலிப்படையினர் மூலம் கொலை செய்துள்ளனர் என வழக்கையே மாற்றி புதிய வழக்கை பதிவு செய்தார் பிரேம்குமார்.

யாரும் எதிர்பாராத நேரத்தில் 11.11.2004 ல் ஜெயேந்திரரை ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மெகபூப் நகரில் வைத்து கைது செய்தார். சங்கரமடத்தின் 183 வங்கி கணக்குகளையும் முடக்கினார்.

பிரேம்குமார் மரணம்

ரவி சுப்பிரமணியத்தை அப்ரூவ ராக மாற்றியதும் இவர்தான். குற்றப்பத்திரிகை, சாட்சிகளை தயார் செய்து கொண்டிருந்த நிலையில் வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரேம்குமார் 16.11.2010 ல் திடீரென உடல்நலக் குறைவால் இறந்தார்.

காவல் துறையினரே காரணம்! -வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் கருத்து

சங்கரராமன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை ஆனதற்கு காவல் துறையினர் நேர்மையான முறையில் புலன் விசாரணை நடத்தாததே காரணம் என மனித உரிமை ஆர்வலரான வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் கூறியுள்ளார்.

“இந்த வழக்கில் தொடக்கத்திலிருந்தே காவல் துறை விசாரணை அதிகாரிகள் நேர்மையாகவோ, முறையாகவோ புலன் விசாரணை நடத்தவில்லை. அன்றாடம் ஏதேனும் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் காவல் துறையினர் செயல்பட்டார்களே தவிர, கொலைக்கான முக்கியக் குற்றவாளி யார் என்பதை சட்டபூர்வமாக நிரூபணம் செய்வதில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

கொலை சம்பவத்தோடு தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகள் சிலரை மட்டும் வழக்கில் சேர்த்து, எவ்வித பரபரப்பையும் உண்டாக்காமல், அறிவியல்பூர்வமான புலன் விசாரணையை நடத்தியிருந்தால் நிச்சயமாக முக்கியக் குற்றவாளிகள் சிக்கியிருப்பார்கள்.

ஆனால் அதையெல்லாம் செய்யாத காவல் துறையினர், இந்த சம்பவத்தோடு எவ்வித தொடர்பும் இல்லாத ஏராளமான அப்பாவி பெண்களை இந்த வழக்கில் சேர்த்து சித்திரவதை செய்தனர். அந்த அப்பாவி பெண்கள் அனுபவித்த அவமானங்களுக்கெல்லாம் எவ்வித நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை.

இதனால், பட்டப் பகலில் நடந்த ஒரு கொலை சம்பவத்துக்கு எவ்வித நீதியும் கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது” என்று சுதா ராமலிங்கம் கூறினார்.

நீதிபதி முருகன் தீர்ப்பால் விடுதலை; திருச்செந்தூர் முருகனை தரிசித்த ஜெயேந்திரர்

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபடுவதற்காக புதன்கிழமை மாலை வந்தார்.

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சிபுரம் சங்கர மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து, புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முருகன் புதன்கிழமை காலை தீர்ப்பளித்தார்.

இதனை தொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் புதுச்சேரி நீதிமன்றத்தில் இருந்து நேராக திருச்செந்தூருக்கு வந்தார். மாலை 5.15 மணியளவில் திருச்செந்தூரில் உள்ள காஞ்சி சங்கர மடத்துக்கு வந்த அவரை, மடத்தின் நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அவர் ஆசி வழங்கினார். இரவு திருச்செந்தூரில் தங்கியுள்ள சங்கராச்சாரியார் வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார்.

இனிப்பு வழங்கி வரவேற்பு

சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திரர், விஜயேந்திரர் விடுவிக்கப்பட்டதை, அவர்களின் ஆதரவாளர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயில் முன்பு புதன்கிழமை இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். காஞ்சி சங்கர மடத்தில் தீர்ப்பை வரவேற்று எதுவும் செய்யப்படவில்லை.

சங்கர மடத்தில் தினமும் 4 கால சந்திரமௌலீஸ்வரர் பூஜை நடைபெறுவது வழக்கம். நீதிமன்றம் செல்ல இருந்ததையொட்டி, ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் இருவரும் காலை பூஜையுடன் பிற்பகல் நடைபெற இருந்த பூஜைகளையும் சேர்த்து செய்ததாக சங்கர மட வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்