உயர் நீதிமன்றத்தில் 5-வது மாடியிலிருந்து குதிக்க முயன்ற 41 செவிலியர்கள் கைது- ஒன்றரை மணி நேர போராட்டத்தால் பரபரப்பு

உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கட்டிடத்தின் 5-வது மாடியிலிருந்து குதிக்க செவிலியர்கள் சிலர் முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒன்றரை மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்ட 41 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அரசு மருத்துவமனையில் செவிலியர்களை நியமிப்பது தொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டு தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. தமிழ்நாடு மருத்து வப் பணியாளர்கள் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வில் அரசுக்கல்லூரிகளில் பயின்ற செவிலியர் களோடு, தனியார் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களும் கலந்து கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தமிழக அரசின் அரசாணை செல்லாது என்று தீர்ப்பளித்தார். ஆனால், மேல் முறையீட்டு மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, அரசு

மருத்துவமனைகளில் தனியார்கல்வி நிறுவன செவிலியர் களையும் நியமிக்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணை செல்லும் என்று கடந்த ஜனவரி 8-ம் தேதி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி சிவகா சியைச் சேர்ந்த பி.கருப்பசாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

‘அரசாணை வெளியாகும் முன்பே அரசுக் கல்லூரிகளில் பயின்ற 1,861 செவிலியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட் டனர். அதில் கலந்து கொண்ட 969 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ள நிலையில், 892 பேருக்கு மட்டும் அரசாணையை காரணம் காட்டி பணி நியமனம் வழங்காதது சரியல்ல. அந்த அரசாணை எங்களுக்குப் பொருந்தாது’ என்று மனுவில் கூறப்பட் டுள்ளது. இந்த மனு மீது வெள்ளிக் கிழமை விசாரணை நடத்திய நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், எம்.சத்யநாராயணன் ஆகியோர் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய செவிலியர்கள் சிலர் உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சேம்பரின் 5 மாடிக் கட்டிடத்தின் மீதுள்ள தண்ணீர் தொட்டியில் ஏறி அங்கிருந்து குதிக்க முயன்றனர். இதனால் உயர்

நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கீழே இறங்கும்படி பலர் கேட்டுக் கொண்டும் அவர்கள் மறுத்து விட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக கட்டிடத்தின் மேலே நின்று கொண்டிருந்தனர். பின்னர் வேறு வழியின்றி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்

தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ், செவிலியர்களுக்காக இந்த வழக்கை நடத்தி வரும் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் உள்பட ஏராளமான வழக்கறிஞர்களும் போலீஸாரும் கட்டிடத்தில் ஏறி செவிலியர்களை சமாதானப்படுத்தினர்.

அப்போதும் சமாதானம் அடை யாததால், வலுக்கட்டாயமாக அவர் களை கீழே இறக்கினர். அப்போது முரண்டு பிடித்த சில செவிலியர்கள் தாக்கப்பட்டனர். அவர்களை மீட்ட போலீஸார் பாதுகாப்பாக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தற்கொலை முயற்சி உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் 41 பேர் மீது உயர் நீதிமன்ற காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத், ‘‘உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருக்காது என கருதி செவிலியர்கள் இந்த தவறான முடிவுக்கு வந்துள்ளனர். உயர் நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வரவில்லை எனில், உச்ச நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம்.

அதை விட்டுவிட்டு இவ்வாறு தவறான முடிவுகளுக்குச் செல்வதை செவிலியர்கள் தவிர்க்க வேண்டும். தனியார்மயத்துக்கு ஆதரவான கொள்கைகளைப் பின்பற்றும் மாநில அரசின் நடவடிக்கை காரணமாகவே அரசு கல்லூரிகளில் பயின்ற செவிலியர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE