ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியது. அதில் ஆஸ்திரேலியாவில் அபாயகரமான கடல் நீரோட்டங்களால் (Rip Currents) ஓர் ஆண்டுக்கு சராசரியாக 21 பேர் பலியாவதாக தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வை ஒப்பிட்டு சென்னையின் மெரினா உள்ளிட்ட கிழக்கு கடற்கரைகளை ஆராய்ச்சி செய்த தமிழகத்தின் கடல் ஆராய்ச்சியாளர்கள் ஆஸ்திரேலியாவின் கடல் நீரோட்டங்களைவிட நமது கிழக்கு கடல்கள் வெகு ஆபத்தான நீரோட்டங்களை கொண்டிருப்பதாகவும் அதனாலேயே சராசரியாக ஆண்டுக்கு 200 பேர் வரை பலியாவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா கடற் கரைகளை ஆய்வு செய்த டாக்டர் ராப் பிராண்டர், “ஆஸ்திரேலியாவில் 11,000 கடற்கரைகளும் அதில் 17,500 வகையான அபாயகரமான கடல் நீரோட்டங்களும் உள்ளன. இவை கடற்கரையில் நீந்துபவர்களை சுலபமாக கடலுக்குள் இழுத்துச் சென்றுவிடும். குறிப்பிட்ட தொலைவுக்கு சென்ற பின்பு அவர்களை கடல் அடியிலும் இழுத்து முழ்கடிக்கும்.
இவை ஆற்று நீரோட்டம்போல் கடலினுள் நேராகவும், வளைந்தும் நெளிந்தும், கடற்கரைக்கு இணையாகவும், ஆழ்கடலை நோக்கியும், திடீரென்று ஆழ்கடலுக்கு உள்ளேயும் பாய்ந்துச் செல்கின்றன. இவை மனிதனின் அதிகபட்ச நீந்தும் திறனைவிட வேகமானவை. எனவே, எதிர்நீச்சல் அடித்து கடற்கரைக்குச் செல்ல முயற்சிப்பது ஆபத்தானது. அது விரைவில் களைப்பை உண்டாக்கி கடலுக்குள் மூழ்கடித்துவிடும். இதில் சிக்கிக்கொண்டால் அமைதியாக அதன் ஓட்டத்தில் மிதந்து, சைகை அல்லது குரல் கொடுத்து மற்றவர் உதவியை நாடுவது புத்திசாலித்தனம்” என்கிறார்.
தமிழகத்தைச் சேர்ந்த கடல் உயிரின ஆராய்ச்சியாளரும் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்தி வருபவருமான ஒரிசா பாலு மேற்கண்ட ஆய்வை ஒப்பிட்டு சென்னையின் மெரினா உள்ளிட்ட கிழக்குக் கடற்கரைகளை ஆய்வு செய்தார். அவர் ‘தி இந்து’விடம், “ஆஸ்திரேலியா கடல் நீரோட்டங்களின் அபாயத்தைவிட அதிக அபாயமானவை மெரினா உள்ளிட்ட கிழக்குக் கடற்கரைகள். மெரினா கடற்கரை அந்தமான் தீவுகளை நோக்கி இருக்கிறது. இரு நிலப்பரப்புக்கும் இடையேயான அழுத்தம் காரணமாக 3000 மீட்டர் ஆழத்தில் இருந்து கடற்கரையை நோக்கி குறுக்கும் நெடுக்குமாக 2000-க்கும் மேற்பட்ட நீரோட்டங்கள் பாய்கின்றன.
இவை பல சமயங்களில் கடற்கரை வரை பயணிக்கின்றன. அப்போதுதான் கடற்கரையில் குளிப்பவர்கள் இழுத்துச் செல்லப்படுகின்றனர். கடந்த ஆண்டு அடையாறு கடல் பகுதியில் இருந்த பல நூறு டன் கொண்ட பிரதீபா காவிரி கப்பலை புயலின்போது உருவான ஒரு நீரோட்டமே ஆறு கி.மீ. இழுத்துக்கொண்டு வந்து மெரினாவில் சேர்த்தது.
ஆபத்து நிறைந்த வடகிழக்கு பருவக்காற்று
நமது கிழக்கு கடற்கரையில் மே மாதம் முதல் ஆகஸ்ட் வரை அரபிக்கடலில் இருந்து தென்மேற்கு பருவக்காற்று வீசும். இது அபாயம் இல்லாதது. இதில் உருவாகும் நீரோட்டங்களும் குறைவு. ஆனால், அக்டோபர் தொடங்கி பிப்ரவரி வரை மங்கோலியா, பர்மா பகுதியில் இருந்து வீசும் வடகிழக்கு பருவக் காற்று அபாயம் நிறைந்தது. இதில்தான் அபாயகரமான நீரோட்டங்களும் புயல்களும் உருவாகின்றன. அதனால்தான் கடந்த மாதத்தில் மட்டும் இங்கு நான்கு புயல்கள் உருவாகின.
மெரினா கடற்கரையில் தென்மேற்கு பருவக்காற்று வீசுகையில் கடல் நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்படுபவர்களின் உடல் கூவம், எண்ணூர், பழவேற்காடு பகுதிகளில் கரை ஒதுங்கும். வடகிழக்கு பருவக் காற்று வீசுகையில் இழுத்துச் செல்லப்படுபவர்களின் உடல் அடையாறு, முட்டுக்காடு மற்றும் செங்கல்பட்டு வாயலாறு பகுதியின் பாலாறு கரையோரங்களில் ஒதுங்கும்.
ஆண்டுக்கு 75 பேர் பலி
மெரினா கடற்கரையில் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக 75 பேர் வரை கடலில் மூழ்கி இறக்கிறார்கள். தமிழகத்தின் மொத்தக் கடற்கரைகளிலும் சேர்த்து ஆண்டுக்கு 200 பேர் வரை இறக்கிறார்கள். சுனாமிக்கு பிறகு இது அதிகரித்துள்ளது.
கடலின் நீரோட்டத்தை கண்டுபிடித்து தெற்காசியா தொடங்கி ஐரோப்பிய நாடுகள் வரை பயணித்தவர்கள் பண்டையத் தமிழர்கள். ஆனால், இன்று தமிழக இளைஞர்கள் கடல் விழிப்புணர்வு இல்லாமல் அதே நீரோட்டங்களில் சிக்கி உயிரிழப்பதுதான் வேதனை” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago