மு.க.அழகிரியின் கல்யாண மண்டபத்திற்கு கடந்த தி.மு.க. ஆட்சியில் மிகக்குறைந்த வரி விதிக்கப்பட்டிருப்பதாக மதுரை மாநகராட்சி குற்றம் சாட்டியுள்ளது. அடுத்ததாக அவரது மகன் பெயரில் உள்ள தயா வலைத்தளப் பூங்காவுக்கும் சொத்து வரியை உயர்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் மூலம் தி.மு.க.-அ.தி.மு.க. இடையேயான மோதல் தீவிரமடைந்து வருகிறது.
மதுரையில் அ.தி.மு.க.வினருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் மு.க.அழகிரி. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மாவட்டத்தில் பத்துக்குப் பத்து தொகுதிகளில் தி.மு.க. தோல்வி அடைந்தது. அதன் பிறகு தனது அரசியல் அதிரடிகளை அவர் குறைத்துக் கொண்டார்.
மத்திய மந்திரியாக இருந்தும் கூட, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையே தவிர்க்க ஆரம்பித்தார். மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க. விலகிய பின்னர், அவரது அரசியல் செயல்பாடு மேலும் மந்தமானது.
இதற்கிடையில், கட்சியில் அவரது விசுவாசிகளாக இருந்த பலர் அவருக்கு எதிராக ஒன்று சேர்ந்தனர். அவர்கள் தங்களை ஸ்டாலின் அணி என்று சொல்லிக் கொள்ள ஆரம்பித்தார்கள். இதனால், மதுரையில் அழகிரியின் செல்வாக்கு குறைந்தது போன்ற சூழல் உருவானது.
இந் நிலையில், தொண்டர்களுக்கு அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்து சொல்லி தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்தார் மு.க.அழகிரி. புத்தாண்டு தினத்தில் அ.தி.மு.க. அரசையும், மதுரை மாநகராட்சியின் செயல்பாட்டையும் விமர்சித்து பேட்டியும் அளித்தார்.
அவருக்குப் பதிலடி கொடுக்கக் காத்திருந்த அ.தி.மு.க.வினர், மறுநாள் (2-ம் தேதி) மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவை அதற்குப் பயன்படுத்திக் கொண்டனர். அழகிரி மதுரைக்கு வந்த காலத்தில் இருந்து ஆரம்பித்து, அமைச்சராக இருந்த போது அவரது செயல்பாடுகள் வரை அந்த விழாவில் விமர்சிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அழகிரியைச் சாடிய மேயர் ராஜன் செல்லப்பா தன் பேச்சில். “எதிர்க்காற்று அடிக்க அடிக்கத் தான் பட்டம் உயர உயரப் பறக்கும். பந்தை எத்த எத்தத் தான் உயர உயரத் துள்ளும்” என்றார். இச்சூழ்நிலையில், அ.தி.மு.க. கவுன்சிலர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்திற்கு மேயர் ராஜன் செல்லப்பா தலைமை வகித்தார்.
கூட்டத்தில், மொத்தம் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் வழக்கம்போல் தமிழக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பாராட்டு தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் போக அ.தி.மு.க.வின் திட்டங்களை தன் திட்டமாகச் சொன்ன அழகிரியை கண்டித்து இரண்டு தீர்மானங்களும், அவரது சொத்துக்களுக்கு வரி விதிப்பது குறித்து இரண்டு தீர்மானங்களும் இடம் பெற்றிருந்தன. அவை வருமாறு:
மதுரை டி.வி.எஸ். நகரில் 7000 சதுரஅடியில் கட்டப்பட்டுள்ள தயா திருமண மஹாலுக்கு தி.மு.க. ஆட்சியில் மிகக்குறைந்த அளவிலேயே சொத்து வரி நிர்ணயித்துள்ளனர். அவ்வளவு பெரிய மஹாலுக்கு வெறும் ரூ.7000 மட்டும் வரியாக நிர்ணயித்து, மிகப்பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் புகார் அளித்துள்ளனர். எனவே அதிகாரிகள் மூலமும், வரி விதிப்புக் குழு மூலமும் உண்மை நிலையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை மாட்டுத்தாவணி அருகே சென்னை செல்லும் பிரதான சாலையுடன் இணையும், சர்வேயர் காலனி 120 அடி சாலையை கிராம சாலையாகக் கருதி டி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் பெரும் வணிக நிறுவனங்கள் மட்டுமல்லாது அழகிரியின் தயா பார்க் என்ற நிறுவனமும் உள்ளது. வணிக நிறுவனங்கள் அதிகமாக உள்ள இந்த சாலையை ஏ பிரிவு சாலையாக மாற்றி வரி விதிக்க வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அழகிரியைக் குறிவைத்து மாநகராட்சி நிறைவேற்றியுள்ள இந்தத் தீர்மானங்களால், தி.மு.க.-அ.தி.மு.க. மோதல் தீவிரமடைந்துள்ளது. அழகிரியின் பிறந்த நாள் நேரத்தில் இது மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago