திருச்சியில் ராகுல் காந்தி பங்கேற்ற பொதுக்கூட்டத்துக்கு திரண்ட கூட்டத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி புத்துணர்வுடன் புதிய அரசியல் பாதையில் பயணிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனித்து விடப்பட்ட காங்கிரஸ் கட்சி சந்தித்த தோல்வி, கட்சியிலிருந்து ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் பிரிந்து தனிக்கட்சி தொடங்கியது உள்ளிட்ட சோதனையான நிகழ்வுகளுக்கு பிறகு கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில், திருச்சி ஜி-கார்னர் மைதானத்தில் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தானே முன்னின்று மேற்கொண்டார். மைதானம் முழுவதும் நிரம்பி வழிந்த கூட்டத்தைப் பார்த்து ராகுல் காந்தியும் மகிழ்ச்சியான மனநிலையிலேயே காணப்பட்டார்.
காவிரி பிரச்சினை
ராகுல் காந்தி தனது பேச்சில், தமிழகத்தில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம், மதுக் கொள்கை ஆகியவற்றை கடுமையாக விமர்சித்தார். இருப்பினும், தமிழகம் சந்தித்து வரும் காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை ஆகியவை குறித்து எந்த கருத்தையும் அவர் தெரிவிக்காதது விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து விவசாயிகளைச் சந்தித்துப் பேசிய ராகுலிடம் ஏராள மான கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன. கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது காவிரி பிரச்சினையையும், விவசாயிகளின் பிரச்சினையையும் கண்டுகொள்ளாத காங்கிரஸ் கட்சி, அரசியல் காரணங்களுக்காகவே விவசாயிகளை ராகுல் சந்தித்து வருவதாக பல தரப்புகளிலிருந்து எழும் விமர்சனங்களையும் புறந்தள்ளிவிட முடியாது.
இதனிடையே ராகுல் காந்தியின் வருகை தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகத்தை அளித்தாலும், தலைவர்கள்-தொண்டர்கள் இடையேயான உறவை பலப்படுத்துதல், மக்கள் சந்திப்பு இயக்கங்களை தொடர்ந்து நடத்துதல், கோஷ்டிப் பூசல்களை மறந்து ஒற்றுமையுடன் செயல்படுதல் ஆகியவை மட்டுமே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனக்கான அரசியல் பாதையை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
'ஜி-கார்னர் சென்டிமென்ட்'
2010-ல் திமுக ஆட்சியை எதிர்த்து மிகப்பெரிய பொதுக்கூட்டம், 2014-ல் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் கூட்டம் ஆகியவற்றை ஜி-கார்னர் மைதானத்தில் நடத்திய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 2011 சட்டப்பேரவைத் தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் பெரும் வெற்றி பெற்றார்.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பாஜக சார்பில் நரேந்திர மோடி பங்கேற்ற இளம் தாமரை மாநாடும் இங்குதான் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மோடி பிரதமராக பொறுப்பேற்றார்.
இந்த வெற்றி சென்டிமென்ட் காங்கிரஸ் கட்சிக்கும் பலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழ் மாநில காங்கிரஸ் உதயமான பிறகு ஜி.கே.வாசன் இந்த மைதானத்தில்தான் முதல் பொதுக்கூட்டத்தை நடத்தி, கட்சியின் பெயர், கொடி உள்ளிட்டவைகளை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago