தமிழகத்தில் ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவ மழை

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. இந்தாண்டுக்கான தென்மேற்கு பருவ மழை ஓரிரு நாட்களில் முடியவுள்ள நிலையில் வரும் 20ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை பெய்யும். இந்த காலத்தில்தான் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கடலோர ஆந்திரம் ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்யும். தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் மொத்த மழையில், 48% வடகிழக்கு பருவ மழையின் போது கிடைக்கும்.

கடலோர பகுதிகளுக்கு 60% மழையும், மற்ற பகுதிகளுக்கு 40-50% மழையும் கிடைக்கும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை 16% குறைவாக பெய்தது. ஆனால் இந்த ஆண்டு சராசரியான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறினர்.

வடகிழக்கு பருவ மழை பொதுவாக அக்டோபர் 20ம் தேதியிலிருந்து ஒரு வாரம் முன்னதாகவோ பின்னதாகவோ பெய்யும். 1990 முதல் 2006 வரை இரண்டு முறை மட்டுமே நவம்பர் மாதம் பெய்துள்ளது.

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை காலை வரை முடிந்த 24 மணி நேரத்தில் விருத்தாச்சலத்தில் 7 செ.மீ. மழையும், சிதம்பரம், சங்கராபுரம், திருக்கோவிலூர் மற்றும் திருவண்ணாமலையில் தலா 4 செ.மீ. மழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 39 டிகிரியும், குறைந்த பட்சமாக திருப்பத்தூரில் 19 டிகிரி வெப்ப நிலை பதிவாகியது.

சென்னையில் புதன்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் லேசான மழை பெய்யும் என்றும் சனிக்கிழமை மீண்டும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE