வதனப் புத்தகம் (ஃபேஸ் புக்) இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துவிட்ட சமாச்சாரம். நல்லது, கெட்டது, துக்கம், மகிழ்ச்சி, அனைத்தையும் வதனப் புத்தகத்தில் விவாதிக்கிறார்கள். இதைக் கொண்டு உலகத்தையே உள்ளங்கைக்குள் கொண்டு வரத் துடிக்கிறது பதின்பருவம். ஆனால், வதனப் புத்தகம் மூலம் இதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது ஒரு குழு.
அப்படி இவர்கள் செய்த சாதனைதான் என்ன? திண்டிவனம் - மரக்காணம் சாலையில் உள்ள பெருமுக்கல் முக்தியாஜலஈஸ்வரர் கோயிலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்ச்செல்வனைச் சந்தித்தோம்.
“படிப்பு, வேலை, பொழுதுபோக்கு என வாழ்க்கைக்கான வசதிகளைத் தேடும் பயணத்தைத் தாண்டி, என்னைக் கவர்ந்தது முன்னோர்களின் வாழ்க்கை முறை. எமது முன்னோர்களால் அழியாப் புகழுடன் உருவாக்கப்பட்ட சிற்பங்கள், ஓவியங்கள் இவை அனைத்தையும் கோயில்களில் பார்க்கலாம். கோயில்கள் வழிபாட்டிற்கான இடம் மட்டுமல்ல; அது ஒரு சமூகக் கூடம். ஆயிரம் வருடங்கள் கடந்தாலும் அங்கே உயிரோட்டமாய் நிற்கும் சிற்பங்களும் சிலைகளும் எம் முன்னோர்கள் தந்து விட்டுப் போயிருக்கும் அரிய தொழில்நுட்பம். இவை எல்லாம் கவனிக்கப்படாமல் அழிந்து கொண்டிருக்கிறதே என்பதுதான் எனக்குள் எழுந்த கவலை. அந்தக் கவலைதான் என்னை கோயில்களின் காதலனாக்கியது” இப்படி முன்னுரை கொடுத்த தமிழ்ச்செல்வன், தொடர்ந்தும் பேசினார்.
“அதி முக்கியத்துவம் வாய்ந்த கலைநயம் கொண்ட நம் முன்னோர்களின் கலைகளும் உயர்ந்த பண்பும் காக்கப்பட வேண்டும் என்ற ஆவலால் கோயில்களை சீரமைக்கும் பணியில் 1997-ம் ஆண்டிலிருந்து என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். நானும் என் நண்பர்களும் கைகோத்து முதலில் இறங்கியது கும்பகோணம் அருகிலுள்ள திருந்து தேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில். இந்தக் கோயில் சீரமைப்புப் பணியில் ஊர்கூடி நாங்கள் இழுத்த தேருக்கு நல்ல வரவேற்பு!
அதனால், அடுத்ததாக தாயுமானவர் உழவாரப்பணி மன்றத்தோடு இணைந்து இன்னம்பூர் எழுத்தறிநாத சுவாமி கோயிலை கையில் எடுத்தோம். அதன் தொடர்ச்சியாக, திருவிசயமங்கை கோயில், திருவாய்ப்பாடி பாலுகந்தநாதசுவாமி கோயில், திருவையாறு அருகே பெரும்புலியூர் கோயில், அரியலூர் அருகே கோவிந்தப்புத்தூர் கோயில், பழையாறை வடதளி என நாங்கள் சீரமைப்பு செய்த கோயில்களின் எண்ணிக்கை எங்களையும் அறியாமல் உயர்ந்துகொண்டே போனது. நாங்கள் போய் வேலை செய்ததைப் பார்த்துவிட்டு, அந்தந்த ஊர்க்காரர்களும் எங்களோடு இணைந்து கொண்டார்கள். கையில் செலவுக்கு பணம் இல்லாதபோது ஊர் மக்களே வசூல் பண்ணிக் கொடுத்தார்கள். சில இடங்களில், பஞ்சாயத்து நிதியிலிருந்தும் பணம் கொடுத்தார்கள்.
இடையிலே கொஞ்சம் தேக்கம். பணி நிமித்தமாக நான் திருவண்ணாமலைக்கு இடம்பெயந்துவிட்டதால் எனது நண்பர்களைவிட்டு விலகிப் போனேன். ஆனாலும், வாரம் தவறாமல் சனி, ஞாயிறுகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களை தேடிப் போய்க்கொண்டே இருந்தேன். ஒருமுறை, செஞ்சி அருகே தேவனூர் திருநாதீஸ்வரர் கோயிலைக் கண்டேன். நவாப்கள் காலத்து கோயில் அது. அதன் பழமையும் அப்போது அது இருந்த நிலையையும் கண்டு பதறிவிட்டேன். துணைக்கு நண்பர்கள் இல்லாமல் என்ன செய்வது?
இப்படி நான் கலங்கிப் போயிருந்த நேரத்தில்தான் வதனப்புத்தகம் நெஞ்சில் நிழலாடியது. இப்படிச் செய்து பார்த்தால் என்ன.. என்ற திட்டத்துடன், அந்தக் கோயிலை சீரமைப்பு செய்ய ஆர்வமுள்ளவர்கள் என்னோடு கைகோக்கலாம்னு வதனப் புத்தகத்தில் ஒரு செய்தியை பதிவு செய்தேன். எனது முயற்சிக்கு எதிர்பாராத வரவேற்பு!
புதுச்சேரி தமிழ்க்கனல், சரவணன், நாகராஜ், வெங்கட், மோகன், வெங்கடேஷ் தூத்துக்குடியைச் சேர்ந்த செந்தூரப்பாண்டி, திருவண்ணாமலை சசிகலா குடும்பம், காஞ்சிபுரத்திலிருந்து ஒய்வு பெற்ற ராணுவ வீரர் கோவிந்தசாமி கணேசன் ஐயா, கட்டிடக் கலை படித்த தோழி வித்யாலட்சுமி, சிவக்குமார், மாசானமுத்து, விக்னேஷ், இப்படி சென்னை, நெல்லை, பெங்களூர் என அனைத்துப் பகுதிகளிலிருந்தும் புது நண்பர்கள் என்னோடு வதனப் புத்தகத்தின் மூலம் கைகோத்தார்கள்.
ஒவ்வொரு சனியும், ஞாயிறும் திருவிழா கூட்டம் போல் கூடினோம். நாங்களே சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு கிடைத்த இடத்தில் தூங்கிக் கொண்டு 7 மாதம் உழைத்தோம். ஆயிரம் வருடங்கள் பழமையான அந்தக் கோயிலை… ஊர் மக்கள் உள்ளே வரவே பயந்த அந்தக் கோயிலை மீண்டும் கோயிலாக்கிக் கட்டினோம். நாங்கள் பணி செய்ததை பார்த்துவிட்டு, இப்போது இந்து அறநிலையத் துறையினர் அந்தக் கோயிலின் முக்கிய கட்டுமானப் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறார்கள்” தமிழ்ச்செல்வன் நிறுத்த, உடனிருந்த தமிழ்க்கனல் தொடர்ந்தார்.
“அடுத்ததாக, திண்டிவனம் அருகிலுள்ள பெருமுக்கலில் முக்தியாஜலஸ்வரர் ஆலயத்தை கையில் எடுத்திருக்கிறோம். மலைக்கு கீழே உள்ள இந்தக் கோயில் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. தொன்மையான கோயில்களை புணரமைப்பதும், தொன்மையான தமிழர் கலைகளை மீட்டெடுப்பதும் இவைகளை அரிய விரும்புகிறவர்களை கோயில்களுக்கு அழைத்துச்சென்று அறிய வைப்பதும்தான் எஞ்சிய ஆயுளுக்கும் எங்களது பணியாக இருக்கும்” தன்னம்பிக்கை மிளிரச் சொன்னார் தமிழ்க்கனல்.
வதனப் புத்தகங்களை வம்பிழுக்கும் கேந்திரமாக பலரும் பயன்படுத்திவரும் நிலையில், அதை இப்படியும் பயன்படுத்தலாம் என்று சிந்திக்க வைத்திருக்கும் இந்த இளைஞர்களின் முயற்சியை பாராட்டாமல் விட்டால் வரலாறு பழிக்கும்!
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago