காவிரி பிரச்சினை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு

By செய்திப்பிரிவு

காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை அளிக்கையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை அமைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. தமிழகத்தில் விரைவில் விவசாய பணிகள் துவங்க இருக்கின்றன.

எனவே, அடுத்த மாதத்தின் இறுதி வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்கும்படி மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

முன்னதாக, காவிரி நீரை தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்கள் பகிர்ந்து கொள்வது தொடர்பான இறுதித் தீர்ப்பை காவிரி நடுவர் மன்றம் 2007–ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிட்டது. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்தத் தீர்ப்பை அமல்படுத்த வசதியாக இதனை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்திஒல் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடுமாறு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

ஆனால், அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளபடி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறை கமிட்டி ஆகியவற்றை அமைப்பதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது. அதனால், இடைக்கால ஏற்பாடாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலர் அலோக் ராவத் தலைமையில் காவரி மேற்பார்வை குழு அமைக்கப்பட்டது.

பலமுறை கூடி பிரச்சினையை விவாதித்துள்ள இந்த மேற்பார்வை குழு கடந்த 9-ம் தேதி டெல்லியில் மீண்டும் கூடியது. அதில், தமிழகத்துக்கு 26 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடும் கோரிக்கை மட்டுமின்றி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை உடனடியான அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் வற்புறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE