காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றுள்ள வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், சிங்கள அரசின் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் குறித்து அம்மாநாட்டில் குரல் கொடுத்திட முன் வருவாரா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாத நிலையில், இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருக்கிறார். இதுகுறித்துச் செய்தியாளர்கள் என்னிடம் கேட்டபோது, அது தவறு என்பதுதான் என்னுடைய கருத்து. தமிழ் மக்களின் உணர்வுகளை இப்படியெல்லாம் மத்திய அரசு புறக்கணிக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு என்று பதில் அளித்திருந்தேன்.
சல்மான் குர்ஷித், காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கச் செல்வதை நியாயப்படுத்திச் சில காரணங்களை வெளியிட்டிருக்கிறார். அவை: 1. ஈழத் தமிழர் பிரச்சினைகள் உள்பட பல்வேறு பிரச்சினைகளை இலங்கை அரசுடன் பேச வேண்டியுள்ளது; 2. ஈழத் தமிழர்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்குவது பற்றியும், இந்திய மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்கிறபோது எதிர்கொள்கிற தாக்குதல்கள் குறித்தும், இந்தியாவின் கருத்துக்களை இலங்கை அரசிடம் எடுத்துச் சொல்கிற வாய்ப்புக் கிடைக்கும்; 3. இலங்கையில் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களில் ஈடுபட்டுள்ளோம்; 4. இலங்கை வடக்கு மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசை, அரசியல் ரீதியிலும் - பொருளாதார ரீதியிலும் வெற்றியடையச் செய்வதில் உறுதி கொண்டுள்ளோம்; 5. தமிழர்களுக்கு அரசியல் சட்டத்தின்படியும், இந்திய - இலங்கை உடன்பாட்டின்படியும் கூடுதல் அதிகாரம் வழங்கு வதை உறுதி செய்யும் கடமையும் இந்தியாவுக்கு உண்டு என்பவையே சல்மான் குர்ஷித் வெளியிட்டிருக்கும் காரணங்கள் ஆகும்.
தன்னுடைய இலங்கைப் பயணத்தை நியாயப்படுத்தி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் வெளியிட்டிருக்கும் காரணங்கள் அனைத்தும் வரலாற்று ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சிங்களப் பேரினவாத அரசால் முறியடிக்கப்பட்டுள்ளவை ஆகும்.
சிங்களமயமாக்கல் கொள்கை
2009 ஆம் ஆண்டு ஈழத்தின் இறுதிக் கட்டப் போர் முற்றுப் பெற்றதற்குப் பிறகு, இலங்கை அரசின் சிங்களமயமாக்கல் கொள்கை வெகு தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இலங்கை அரசின் 2 லட்சம் ராணுவப் படையினரில் சுமார் ஒன்றரை லட்சம் பேர், தமிழர்கள் வாழும் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் முகாமிட்டுள்ளனர். அமைதியை நிலைநாட்டுதல், கண்ணி வெடிகளை அகற்றுதல் என்ற போர்வையில், தமிழர்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் ராணுவ மயமாக்கப்பட்டுள்ளன. 10 லட்சம் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில், தமிழர்களுக்குச் சொந்தமான 6,500 ஏக்கர் நிலங்களை சிங்கள ராணுவம் தன்வயப்படுத்தி உள்ளது. போரின்போது வெளியேறி, பிறகு முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டு முடக்கப்பட்ட தமிழ் மக்களின் சொந்த வீடுகளை, சிங்கள ராணுவ வீரர்கள் ஆக்கிரமித்துப் பயன்படுத்தி வருகின்றனர்.
போரினால் விதவைகள் ஆக்கப்பட்ட 84 ஆயிரம் பேரில், 54 ஆயிரம் பேர் இலங்கை வடக்கு மாகாணத்தில் மட்டும் வாழ்கின்றனர். 12 ஆயிரம் அனாதைக் குழந்தைகள், உடல் ஊனமுற்றோர் 2 ஆயிரம் பேர், கதியற்று வாழவழியற்று வாடி வருகின்றனர். பெரும்பான்மையினராகத் தமிழர்கள் வாழ்ந்து வரும் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் 78 சதவிகிதமாக இருந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை இன்று 48 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. 10 லட்சம் தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் குடியேறி, புலம்பெயர்ந்தவர்களாகிவிட்டனர். இந்த இரண்டு மாகாணங்களிலும் தற்போது சுமார் 18 லட்சம் தமிழர்கள்தான் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களையும் அகற்றி, முழுவதும் சிங்களமயமாக்கும் முயற்சிகளே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வரும் பகுதிகளின் பூகோள அமைப்பே - மக்கள் தொகைக் குறைப்பு, எல்லைகள் மாற்றம் ஆகியவற்றின் காரணமாக - மூல அடையாளங்களை முழுவதுமாய் இழந்து வருகின்றது. தமிழர் பகுதிகளில் உள்ள இந்துக் கோயில்கள், இஸ்லாமியப் பள்ளி வாசல்கள் உடைத்துத் தகர்க்கப்பட்டு, அவை அனைத்தும் புத்தமத வழிபாட்டு இடங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
தமிழ்ப் பெண்களுக்குக் கட்டாயக் கருத்தடை
சிங்கள அரசின் இத்தகைய எதேச்சாதிகார, பாசிச நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களை பயங்கரவாதிகளாகக் குற்றம் சாட்டி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மூலம் கைது செய்து, விசாரணையின்றி ஒன்றரை ஆண்டு சிறையில் வைத்திருக்க முடியும். இந்த அச்சுறுத்தல்களின் காரணமாக, தமிழர்கள் தமது சொந்த நாட்டை விட்டு வெளியேறி, வேறு நாடுகளுக்குச் சென்று வாழ்வாதாரம் தேடவே முயற்சிக்கின்றனர். மேலும், ஒரு பெருங்கொடுமையாக 18 வயதிற்குட்பட்ட தமிழ்ப் பெண்களைக் கட்டாயக் கருத்தடை செய்து, இலங்கை அரசு இன வளர்ச்சித் தடுப்புச் செயலில் இரக்கமின்றி ஈடுபடுகிறது.
மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி
பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதிவழி தேடும் அணுகுமுறையே அற்றுப்போய், இலங்கையில் இத்தகைய கடுமையான நிலைமைகள், பதற்றமான சூழ்நிலைகள் உருவானதற்குப் பிறகு, சல்மான் போன்றவர்கள் பிரச்சினைகளைப் பேச முற்படுவதால் என்ன உருப்படியான பலன் விளைந்துவிடப் போகிறது என்று தெரியவில்லை. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே இதுதான் முதல்முறையாக நடைபெறப் போகும் பேச்சுவார்த்தையா? போருக்குப் பின்னர் எண்ணற்ற முறைகள், டெல்லியிலும் கொழும்பிலும் அதிகாரிகள் மட்டத்திலும், அமைச்சர்கள் மட்டத்திலும், பிரதமர்களிடையேயும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றனவே! என்ன முடிவு ஏற்பட்டது? மனித உரிமை மீறல்கள் குறைந்து விட்டனவா? தமிழர் பகுதிகளில் ஆக்கிரமித்துள்ள இராணுவம் திரும்பப் பெறப்பட்டு விட்டதா? இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்குச் சொந்தமான வீடுகளும், நிலங்களும் தமிழர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்பட்டு விட்டனவா?
இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளினால் ஈழத் தமிழர்களுக்குக் கூடுதல் அதிகாரங்கள் கிடைத்து விட்டனவா? 13 பிளஸ் அதாவது 13வது திருத்தத் திற்கு அதிகமாகவே அதிகாரங்கள் அளிப்பேன் என்று ராஜபக்சே வாக்குறுதி அளித்தாரே! அதை நிறைவேற்றினாரா? நிலம் மற்றும் காவல்துறை தொடர்பான அதிகாரங்கள் இல்லாமல், பெரும்பான்மைத் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு ஒன்று அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே! அதைப் பற்றிக் கிஞ்சிற்றேனும் கருத்தில் கொண்டாரா ராஜபக்சே? ஆட்சி அதிகாரம் ஏதும் இல்லாமல், தமிழர்களின் ஆட்சி, சிங்கள அரசின் கடும் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் சிக்கிக் கொண்டு, மக்கள் நலனை முறையாகப் பேண முடியாமல், வீழ்ச்சி அடைந்து தமிழ் மக்களின் வெறுப்புக்கு இலக்காகி விட வேண்டுமென்பதுதானே ராஜபக்சேயின் விருப்பம்?
சிங்களர்களும், இலங்கைக் கடலோரக் காவல்படையினரும் இணைந்து, தமிழ் மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதல்கள், ஏற்படுத்தும் சேதாரங்கள், துப்பாக்கிச் சூடு நிகழ்வுகள், நீதிமன்றத்தில் நிறுத்திச் சிறைக்கு அனுப்பும் நடவடிக்கைகள்; போருக்கு முன்பு இருந்ததைவிட, போருக்குப் பின்னர் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகின்றனவே அல்லாமல், சிறிதும் குறைந்தபாடில்லையே!
இலங்கை வடக்கு மாகாணத்தில் தமிழர் நலனுக்காக இந்தியா பல்வேறு திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக சல்மான் குர்ஷித் சொல்லி இருக்கிறார். அந்தத் திட்டங்களின் பலன் பெரும்பாலும் சிங்களவர்களுக்கே செல்கிறது. குறைந்தது நான்கு பேருக்கும் அதிகமாக இருக்கும் குடும்பத்தினருக்கு மட்டுமே வீடு ஒதுக்கப்படும் என்று ஒரு சட்டம் இயற்றி, புதிதாகக் கட்டப்படும் வீடுகளில் பெரும்பாலானவை சிங்களவர் களுக்கே ஒதுக்கப்பட்டு வருகின்றன என்ற செய்தி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதே!
ஐ.நா. அவைப் பொதுச்செயலாளர் பான் கீ மூனால் அமைக்கப்பெற்ற, இந்தோனேஷியாவைச் சேர்ந்த தரூஸ்மான் தலைமையிலான மூவர் குழு 2011 ஏப்ரல் மாதம் அளித்த அறிக்கையில், ராஜபக்சே அரசின் போர்க் குற்றங்கள் வெளி உலகுக்குத் தெரிந்து விடாமல், தடயங்கள் அனைத்தையும் அழிக்கும் முயற்சிகளைப் பற்றித் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கை வெளிவந்த பிறகாவது, இலங்கை அரசு விழிப்புணர்ச்சியைப் பெற்றதா?
ஐ.நா. அவையின் மனித உரிமைக் குழுவின் சார்பில் சர்வதேசக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் கண்டறியப்பட்டு, போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. அதன் பிறகாவது இலங்கை அரசு தனது மனசாட்சியின்படி நடந்து கொண்டதா?
இலங்கை அரசே, கற்ற பாடங்கள் மற்றும் சமாதான நடவடிக்கைகள் குழு ஒன்றை அமைத்து, அந்தக் குழுவும் பல்வேறு வகையான பரிந்துரைகளைச் செய்து அறிக்கை அளித்தது. அந்தப் பரிந்துரைகளை ஏற்றுச் செயல்படுத்துவது பற்றி ராஜபக்சே அரசு சிந்தித்துப் பார்த்ததுண்டா?
கடந்த செப்டம்பர் மாதம் ஒருவார காலம் இலங்கையிலே சுற்றுப்பயணம் செய்த ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் ஆணையாளர் திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள், சுற்றுப் பயணத்தை முடித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, 'இலங்கையின் பாதுகாப்புப் படைகளால் மனித உரிமை ஆர்வலர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ளது. இலங்கை சர்வாதிகாரப் பாதையில் செல்வதற்கான அறிகுறிகள் அதிகரித்துள்ளன. போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். காணாமற்போனவர்கள் குறித்த இலங்கை அரசின் விசாரணைக்குழு ஏமாற்றம் தருகிறது' என்று சர்வதேச சமூகத்தின் முன் வெளிப்படையாகவே சொன்னதற்குப் பிறகாவது, இலங்கை அரசு தன்னைத் திருத்திக் கொள்ள முயற்சி செய்ததா?
இலங்கையின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கே இரண்டு மாதங்களுக்கு முன் பேசும்போது, 'யாழ்ப்பாணத்தில் எல்லா இடங்களிலும் சிங்கள இராணுவக் குடியிருப்பு கள் அமைக்கப்பட்டு வருவதால், இன்னும் ஐந்து ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் வாழ்வதற்குக்கூட இடம் இல்லாமல் போகலாம் என்று குற்றம் சாற்றியதற்குப் பிறகாவது, இலங்கை அரசு தனது குறைகளைப் போக்கும் நடவடிக்கை எதையும் மேற்கொண்டதா?
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியும், போர்க்குற்றம், பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டுகளின் பேரில் யாரும் கைது செய்யப்படவில்லை. பத்திரிகையாளர்கள் தொடர்ந்து மிரட்டப்படுகின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ளதை எண்ணி இலங்கைச் சிங்கள அரசு வெட்கித் தலைகுனிந்திருக்க வேண்டாமா?
இலங்கையில் நீதிநெறிமுறைகளுக்கு அப்பால் நடந்துள்ள மனிதப் படுகொலைகள், சிறுபான்மை யினர் மீதான தாக்குதல்கள் போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டேன்' என்று கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அறிவித்ததையும்; 'இலங்கையில் நடைபெற்று வந்த மனிதஉரிமை நிலைமைகளை உன்னிப்பாகக் கவனித்து வந்ததாலேயே அவற்றைக் கண்டித்திடும் வகையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கமாட்டேன் என்று மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்திரா ராம்கூலம் அறிவித்ததையும் எண்ணி இலங்கைச் சிங்கள அரசு வாட்டமடைந்து வருந்தியிருக்க வேண்டாமா?
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா மற்றும் அனைத்து உறுப்பு நாடுகளும் புறக்கணிக்க வேண்டும். இதன்மூலம் அங்கு சிறுபான்மை இனமாக வாழும் தமிழர்களுக்கும் அவர்கள் மீது நடத்தப்பட்ட மனிதத் தன்மையற்ற செயல்களுக்கும் நீதி கிடைக்கும்' என்று தென்னாப்பிரிக்க அமைதிப் பிரச்சாரகரும், நோபல் பரிசு பெற்றவருமான ஆர்ச் பிஷப் டெஸ்மாண்ட் டுட்டு சொல்லியிருப்பதைச் சிங்கள அரசு சிறிதேனும் சிந்தித்துப் பார்த்ததா?
மாநாட்டில் குரல் கொடுப்பாரா குர்ஷித்?
உலக நாடுகளும், சர்வதேச சமூகமும், ஐ.நா. அவை போன்ற உலக நாடுகளின் அமைப்புகளும் இலங்கைச் சிங்கள அரசின் மனக்கதவைத் திறந்து, நீதியையும் நியாயத்தையும் உணர்ந்து நடந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும். இலங்கையிலே நடைபெற்ற தமிழ் இனப் படுகொலை, மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், சர்வதேச சட்டமீறல்கள் ஆகியவை குறித்து சுதந்திரமானதும் நம்பகமானது மான விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக் கப்பட வேண்டும் என்பதும்; ஈழத் தமிழர்கள், அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை அவர்களே தேர்ந்தெடுப்பதற்கு ஏதுவாக, ஐ.நா. அவையின் மேற்பார்வையில், ஈழத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதும்; இவையே ஈழத் தமிழர்களுக்கு, பன்னெடுங்காலமாக உருவாக்கப்பட்டு வரும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வாக அமைந்திடும் என்பதும்தான்; திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் - டெசோ அமைப்பின் சார்பிலும் முன்வைக்கப்படும் கோரிக்கை ஆகும்.
எனினும் இப்போதைக்கு, இலங்கை சென்றிருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், அவரே சுட்டிக்காட்டியுள்ளபடி இலங்கை அரசோடு பேச்சுவார்த்தைகள் நடத்தி; தமிழர் பகுதிகளிலிருந்து ராணுவத்தை முழுமையாக விலக்கிக் கொள்ளவும்; 13-வது திருத்தத்தின்படி அனைத்து உரிமைகளையும் தமிழர்களுக்கு வழங்கிடவும்; வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள புதிய அரசுக்கு நிதி, போலீஸ், நிலம் தொடர்பான அனைத்து அதிகாரங்களும் கிடைத்திடவும்; தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் ஓய்ந்திடவும்; ஆக்கப்பூர்வமான ஏற்பாடுகளைச் செய்வதோடு; சிங்கள அரசின் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், ராணுவத்தினர் நடத்தியுள்ள பாலியல் கொடுமைகள் குறித்து காமன்வெல்த் மாநாட்டில் குரல் கொடுத்திடவும் முன் வருவாரா? என்பதே தமிழ் மக்களிடையே கேள்விக்குறியாக எழுந்துள்ளது. இந்தப்பிரச்சினைகளைப் பற்றி விவாதித்து, அடுத்து செய்ய வேண்டியது குறித்து முடிவெடுக்கவே, நாளை 'டெசோ' அமைப்பின் கூட்டம்” என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
53 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago