ஆசிரியர் பணி நியமனங்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை: உயர் நீதிமன்றம் நிபந்தனை
தமிழ்நாட்டில் காலி யாகவுள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பு வதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதற்கான அறிவிக்கையை கடந்த மே 22-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
இந்த அறிவிக்கையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் எம்.பழனிமுத்து, எஸ். கருப்பையா ஆகியோர் பொது நல மனுக்களை தாக்கல் செய்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களில் தாழ்த்தப் பட்டவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை வழங்கலாம் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி ஆந்திரம், கேரளம், அசாம், ஒடிசா உள்பட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சலுகை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் இத்தகைய சலுகை வழங்கப்படவில்லை.
ஆகவே, இத்தகைய சலுகை வழங்காமல் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுக்களில் கோரப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன.
அப்போது, ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர். ஆனால் தகுதித் தேர்வின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்வது, அவர்களை பணியில் அமர்த்துவது ஆகிய அனைத்துமே இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை என்று நீதிபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர். வழக்கின் விசாரணை நவம்பர் 18-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.