வேளச்சேரி பரங்கிமலை ரயில் திட்டம்: நிலம் கையகப்படுத்தலுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி

சென்னை வேளச்சேரி பரங்கி மலை ரயில் திட்டத்துக்கான நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மற்றும் மேல் முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை தற்போது இயக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் சேவையை பரங்கிமலை வரை நீட்டிக்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. வேளச்சேரியிலிருந்து பரங்கிமலை வரை 5 கி.மீ. தொலைவுக்கு பாதை அமைக்கும் பணிகள் நடைபெற வேண்டும். அதில் 3.7 கி.மீ. தொலைவுக்கு பணிகள் முடிந்துவிட்ட நிலையில், 1.3 கி.மீ. தொலைவுக்கு மட்டும் பணிகள் நடைபெறாமல் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக திட்டப் பணிகள் முடி வடைவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும் நில உரிமையாளர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களையும், மேல் முறை யீட்டு மனுக்களையும் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற் கொண்ட நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், எம்.சத்யநாராயணன் ஆகியோரைக் கொண்ட அமர்வு, மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளனர்.

விரிவான ஆய்வுகளுக்குப் பிறகே இந்த நிலம் கையகப் படுத்தும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த ரயில்வே திட்டப் பணிகள் முடிவடைந்தால் பொதுமக்களுக்கு ஏராளமான பயன்கள் கிடைக்கும்.

ஆகவே, பொதுமக்கள் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் தவறேதும் இல்லை என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

நில உரிமையாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை மற்றும் பிற சட்ட ரீதியான உரிமைகள் அனைத்தும் மிக விரைவில் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE