கொளத்தூர் மணியை கைது செய்தது அடக்குமுறை: வைகோ
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இன்று நவம்பர் 2 அதிகாலை 02.11.2013 திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்துர் மணியை அவரது இல்லத்தில் காவல்துறையினர் கைது செய்து விடியற்காலை 4 மணிக்கெல்லாம் மேஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி ரிமாண்ட் உத்தரவைப் பெற்று பொழுது விடிவதற்குள்ளா கவே சேலம் மத்திய சிறையில் அடைத்துவிட்டனர்.
ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கைத் தீவில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தி, கொலைபாத ராஜபக்சேவை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு காமன்வெல்த் அமைப்பின் தலைவராக்கும் மன்னிக்க முடியாத அக்கிரமத்தை காங்கிரஸ் தலைமை தாங்கும் இந்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மனித உரிமைகளை குழிதோண்டி புதைத்து, தமிழர்கள் மீது படுகொலையை நடத்தியவரை குற்றக்கூண்டில் நிறுத்துவதற்குப் பதிலாக கீரிடம் சூட்டுகிற ஈனத்தனமான வேலையை இந்திய அரசு செய்தது.
ஈழத்தமிழர் படுகொலையை தடுக்க வீரத்தியாகி முத்துக்குமார் உள்ளிட்ட 19 பேர் மரணத் தீயை அணைத்து மடிந்தனர். தமிழக மக்களின் உள்ளம் எரிமலையாக கனன்று கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழக மக்களின் எதிர்ப்பைக் காட்டுவதற்காக சிலர் ஒரு சிறிய வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வன்முறைச் செயலில் கொளத்தூர் மணிக்கு உடன்பாடு கிடையாது. எனக்கும் உடன்பாடு கிடையாது. இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி சிலரை சென்னைக் காவல்துறை கைது செய்தது.
அவர்கள் சட்டப்படி அந்த வழக்கை எதிர்கொள்வார்கள். இந்தச் சம்பவத்துக்கு எள் அளவும் தொடர்பு இல்லாத கொளத்தூர் மணியை வெள்ளிக்கிழமை நடுநிசிக்கு பின்னர் கைது செய்து, இன்று தீபாவளி விடுமுறை, நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் நீதிமன்றத்தில் பிணையில் எடுக்க முயற்சிப்பதற்கும் வழி இல்லாமல் செய்து ஜெயலலிதா அரசு சிறையில் அடைத்துள்ளது. கொளத்தூர் மணி அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 120 பி பிரிவிலும், 285 பிரிவிலும், பொதுச்சொத்துகள் சேதத் தடுப்புச்சட்டம் 3.1 பிரிவிலும், வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
ஈழத் தமிழர் விடுதலைக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்து போராடி வருகிற தந்தை பெரியாரின் பெருந்தொண்டன் கொளத்தூர் மணி எந்த வன்முறையிலும் ஈடுபடாது, தமிழ் இன விடியலுக்காக தன்னலமின்றி போராடும் லட்சியக் கொள்கை மாமணி ஆவார். கொள்கைக்காகவே பல ஆண்டுகள் பல சிறைகளில் வாடியவர். பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் பித்தலாட்ட அரசியலை அண்ணா திமுக அரசு செய்துவருகிறது.
அடக்குமுறைக்கு நாங்கள் அஞ்சப் போவதில்லை. பொய் வழக்குகளையும், ஏவப்படுகிற அடக்குமுறையையும் கால் தூசாக நினைப்போம். கொளத்தூர் மணி மீது பொய் வழக்கு போட்டு கைது செய்த தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் மறுமலர்ச்சி திமுக சார்பில் பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நவம்பர் 2 ஆம் நாள் தான் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன், இந்திய உளவுத்துறை ஆதரவோடு சிங் கள ராணுவ விமானத்தின் குண்டு வீச்சால் கொல்லப்பட்டார். மாவீரன் தமிழ்ச்செல்வன் சிந்திய ரத்தத் துளிகள் மீது தமிழ் ஈழ விடுதலைக்கு சபதம் ஏற்போம்" என்று வைகோ கூறியுள்ளார்.