சென்னையில் தெரு நாய் பெருக்கம் ஏன்?

By செய்திப்பிரிவு

சென்னையில் தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் நாய்கள் தெருவில் நடக்கும் குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் பெரும் பிரச்சினையாக இருக்கின்றன.

வெளிச்சம் இல்லாத தெருக்களில் செல்லும் ஒருவர் நாய் தொல்லையில்லாமல் கடந்து போக முடியாத நிலை உள்ளது. ரயில் மற்றும் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் நாய்களால் பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. வாகனங்களில் செல்பவர்களை விரட்டிச் செல்வதால் பல சமயங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன.

குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழியும்வரை அவற்றை அகற்றாமல் இருப்பதால் நாய்கள் உயிர்வாழத் தேவையான உணவு அதிலிருந்தே கிடைக்கிறது. இதனால் நாய்களின் எண்ணிக்கை பெருகுகிறது. உணவுப் பொருட்களைத் தேடி வரும் தெரு நாய்கள் அப்பகுதியில் இருப்பவர்களுக்கு தொல்லையாக மாறுகின்றன.

சென்னை மாநகராட்சி 1996க்கு பிறகு பிடித்து செல்லும் நாய்களை கொல்லுவதில்லை. அவை குடும்பக் கட்டுப்பாடு செய்ய புளூ கிராஸ் உள்ளிட்ட மூன்று அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

இது குறித்து கடந்த மாமன்றக் கூட்டத்தில் பேசிய மேயர் சைதை துரைசாமி, “நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு, தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகளை அளித்து பிடித்த இடத்திலேயே திரும்பவும் விட்டுவிட வேண்டும் என்று விதிகள் இருக்கின்றன. இதற்கு மாநகராட்சி எதுவும் செய்ய முடியாது. தன்னார்வ அமைப்புகள் விதிகளை மாற்ற ஏதாவது முயற்சி எடுக்கலாம்” என்றார். நாள் ஒன்றுக்கு 120 நாய்கள் வரை பிடித்து குடும்பக் கட்டுப்பாடு செய்யப்படுகின்றன என்று சென்னை மாநகராட்சி கூறினாலும் தெரு நாய்களின் தொல்லை குறைந்தபாடில்லை.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது: சென்னை மாநகராட்சியிடம் தெரு நாய்களை பிடிக்க 9 பேர் மட்டுமே உள்ளனர். அவர்களும் நிரந்தரப் பணியாளர்கள் இல்லை. இது தவிர மண்டல அளவில் அவ்வப்போது தேவைக்கேற்ப பணியாட்கள் பெறப்படுவர். ஆனால் இந்த வேலை ஆபத்தானது என்பதால் பலர் முன்வருவதில்லை. நாய்களை பிடிக்கும்போது அவை அவர்களை கடித்து விடலாம். ஏற்கெனவே பிடிக்கப்படாத நாயா என்ற சரி பார்த்து பிடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE