கேளம்பாக்கம் அடுத்த சிறுசேரி தொழிற்பேட்டையில் தகவல் தொழில்நுட்பப் பொறியாளர் உமா மகேஸ்வரி (23) கொலை வழக்கில் தடயங்களைச் சேகரிக்க ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
பிப்ரவரி 13-ம் தேதி பிற்பகல் 2 மணி ஷிப்டுக்கு பணிக்குச் சென்றவர், இரவு 10 மணிக்கு பணி முடிந்த பின்பும் வீடு திரும்பவில்லை. தகவலின்பேரில் அவரது தந்தை பாலசுப்பிரமணியன் 14-ம் தேதி கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் கழுத்தில் வெட்டு காயங்களுடன், தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள புதருக்குள் அழுகிய நிலையில் அவரது உடல் சனிக்கிழமை மீட்கப்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
சஸ்பெண்ட்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2013-ல், 200 பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளும் 130 பணி செய்யும் பெண்கள் மற்றும் திருமணமான பெண்களும் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மீட்கப்பட்டவர்கள் பெரும் பாலும் காதல் மற்றும் தகாத உறவு காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
உமாமகேஸ் வரி காணாமல் போன வழக்கையும் இதே கண்ணோட்டத்தில் போலீ ஸார் அணுகியுள்ளதும் தெரியவந் துள்ளது. இந்த வழக்கை அலட்சி யமாக கையாண்டதாகக் கூறி கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் சுப்பையாவை காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்தியமூர்த்தி சனிக்கிழமை சஸ்பெண்ட் செய்து உத்தர விட்டார். தாழம்பூர் காவல்நிலைய ஆய்வாளர் ராஜேந்திரபிரசாத், கேளம்பாக்கம் காவல்நிலையப் பொறுப்பு ஆய்வாளராக நியமிக்கப் பட்டுள்ளார்
ஆளில்லா விமானம்
சிறுசேரி தொழில்பேட்டை பகுதியில் மண்டிக் கிடக்கும் புதர் பகுதியில் எளிதில் நுழைய முடியாத காரணத்தால், அப்பகுதியில் ஏதேனும் தடயம் கிடைக்கிறதா என்று கண்டறிவதற்காக ஆளில்லா விமானத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் உமா மகேஸ்வரியின் செல்போன் உள்பட தடயங்கள் சேகரிக்கும் பணிகளும் தீவிரப்படுத் தப்பட்டுள்ளது. கொலையாளி களைப் பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பலாத்காரம் இல்லை
கொலைச் சம்பவம் குறித்து மாவட்ட எஸ்பி செ.விஜயகுமார் கூறுகையில், “பிரேத பரிசோதனையில் அவர் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பதும், இது கழுத்து பகுதியில் கத்தியால் குத்தி திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்பதும் தெளிவாக தெரியவந்துள்ளது” என்றார்.
பாதுகாப்பு ஆலோசனை:
உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுசேரி தொழிற்பேட்டையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என போலீஸார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
உமா மகேஸ்வரியின் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து சிறுசேரியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீஸ், ஸ்டெரியா, காக்னிசான்ட், ஹெக்ஸ்வேர், எச்சிஎல் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகளுடன், ஐஜி மஞ்சுநாதா சனிக்கிழமை இரவு கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். பின்னர், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பாதுகாப்புக்காகச் சிசிடிவி கேமராக்களை, நிறுவனங்களில் கட்டாயம் பொறுத்த வேண்டும்.
மேலும் பணியாளர்கள் வந்து செல்லும் வழியில் கூடுதல் பாதுகாப்புக்காகக் காவலர்களை நியமித்து, காவல்துறை உதவியோடு கண்காணிக்கப்பட வேண்டும். பெண் பணியாளர்களை நிறுவனங்களின் வாகனங்களிலேயே அழைத்துச்சென்று வர ஏற்பாடு செய்ய வேண்டும். தனியாக வெளியில் செல்லப் பெண் பணியாளர்களை அனுமதிக்கக்கூடாது. இரவு நேரங்களில் இருட்டாக உள்ள பகுதிகளில் ஒளிமிகுந்த விளக்குகளைப் பொறுத்த வேண்டும் என்று, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஐஜி மஞ்சுநாதா உத்தரவிட்டுள்ளார்.
அடுத்தடுத்த கொலையால் பீதி
வண்டலூர் அருகே ரத்தினமங்கலத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சர்மிளா (38), கட்டுமானத் தொழிலாளி. வீட்டுக்கு அருகில் உள்ள கல் குவாரி குட்டையில் சர்மிளா, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு துணி துவைக்கச் சென்றார்.
நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரைத்தேடி செல்வமும் உறவினர்களும் சென்றபோது அங்கிருந்த புதரில் கழுத்து, கை மற்றும் காலில் வெட்டுக் காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். புகாரின்பேரில் தாழம்பூர் போலீஸார் வந்து உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இருதினங்களுக்கு முன்பு வேங்டமங்கலத்தில் ஓய்வுபெற்ற மாநகர பஸ் ஓட்டுநர் அம்பிகாராஜ் (65) அவரது மனைவி கண்முன்னே வெட்டிக்கொல்லப்பட்டார். 3 நாட்களில் அடுத்தடுத்து 3 கொலைகள் நடந்திருப்பது கேளம்பாக்கம் சுற்றுவட்டார மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago