அட்டப்பாடியில் அணை கட்ட திட்டமிட்டிருக்கும் இடத்தில் ஒரு பக்கம் மலை, மலையாய் கருங்கற்கள், சரளைக்கற்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. இந்த கற்கள் எல்லாம் ‘சாலை போடத்தான்’ என்றும், ‘இல்லையில்லை அணை கட்டவே’ என்றும் இருவேறு கருத்துகள் அட்டப்பாடி பகுதியில் கூறப்படுகின்றன. அதேசமயம், சிறுவாணிக்கு குறுக்காக அணை கட்டுவதை எதிர்ப்பது, ஆதரிப்பது என்று மாறுபட்ட குரல்களும் வேகமெடுப்பதுதான் வேடிக்கை.
கேரள அரசு சிறுவாணி நதிக்கு குறுக்காக சித்தூர் வெங்கக்கடவு என்ற இடத்தில் ரூ.900 கோடி மதிப்பீட்டில் 450 மீட்டர் நீளம் 51 மீட்டர் உயரத்தில் அணை கட்டி ஆண்டுக்கு 4.5 டி.எம்.சி தண்ணீரை கேரளப் பகுதிக்குள் திருப்பிவிட திட்டமிட்டுள்ளது. இங்கு அணை கட்டுவது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் நதிநீர் பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் திட்ட மதிப்பீட்டு வல்லுநர் குழு அனுமதி அளித்துள்ளதால் தமிழகப் பகுதியில், குறிப்பாக கொங்கு மண்டலத்தில் பதற்றம் நிலவுகிறது.
இதுகுறித்து ‘தி இந்து’ நாளிதழில் தொடர்ந்து விரிவான செய்திகளை வெளியிட்டுள்ளோம். இந்த சூழ் நிலையில் ஆய்வு செய்ய அனுமதி கொடுத்த சுவட்டிலேயே அணை கட்டு வதற்கான பணியையும் கேரள அதிகாரிகள் தொடங்கிவிட்டதாகவும், அதற்காக அணைப் பகுதியில் நூற்றுக் கணக்கான லாரிகளில் கருங்கற்கள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை இறக்க ஆரம்பித்துவிட்டதாகவும் செய்தி கள் வந்துகொண்டு இருக்கின்றன. இந்த அணை விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை விரிவாக விளக்கி சட்டப்பேரவையில் தீர்மானமும் போட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
இந்த சூழ்நிலையில் அட்டப்பாடியில் அணை கட்டும் பகுதிக்கு சென்று என்னதான் நடக்கிறது என்று பார்த்தோம். அதன் விவரம்: தமிழக எல்லையான ஆனைகட்டி பகுதியில் இருந்து கூலிக்கடவு 18 கி.மீ. அங்கு இருந்து வலதுபக்கம் திரும்பி கரடுமுரடான சாலையில் 13 கி.மீ. பயணித்தால் சித்தூர் வெங்கக்கடவு. இந்த சித்தூர் பகுதி தொடங்குவதற்கு சுமார் 1 கி.மீ. தொலைவிலேயே சாலையின் இருமருங்கும் மலை, மலையாய் சாலை போடுவதற்காக சிறியதும் பெரியதுமான சரளைக் கற்கள் கொட்டி வைக்கப்பட்டிருப்பதை காணமுடிந்தது. இது தவிர, அணை கட்டும் பகுதி என்று சொல்லப்படக்கூடிய (1970களில் அணை கட்டும் பணிகள் நடந்து நிறுத்தப்பட்ட பகுதியில்) சிறிய, நடுத்தர, பெரிய கற்கள் கொட்டப்பட்டுள்ளன. அணை எழுப்புவதற்காக ஆற்றின் கரையோரத்தில் மலை மற்றும் குன்றுகளின் மீது மரங்களை வெட்டி சமன்படுத்தியுள்ளனர்.
சித்தூர் சிறிய ஊர். அங்கே உள்ள சிலரிடம் நிருபர்களை குறிப்பாக தமிழக செய்தியாளர்களை கண்டாலே கோபம் கொப்பளிக்கும் (இங்கே ஏற்கெனவே 2012-ல் தமிழக செய்தியாளர்கள் புகைப்படம் எடுக்கும்போது பிரச் சினை எழுந்துள்ளது) தன்மையை காண முடிந்தது. எனவே, அங்கே சப்த மில்லாமல் மற்றவர்களுக்கு தெரிந்தும் தெரியாமல் புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்ப வேண்டிய நிலை. வழியில் சிலரிடம் பேசியதில் சித்தூர் வெங்கக்கடவுக்கு கீழ்ப் பகுதி யான சுண்டவலம், கோட்டமலை, மூச்சுக் கடவு, தோட்டப்பாறை, நெல்லிப்பதி, கூலிக்கடவு, அகழி, சோலையூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள பெரிய வர்கள் பலரும் புதிதாக உருவாகும் அணைக்கு எதிராகவே பேசுவதைக் கேட்க முடிந்தது.
‘இதுவரை இந்த சிறுவாணி ஆற்று நீரையே குடிப்பதற்கும், பாசனத் துக்கும் பயன்படுத்தி வந்தோம். சித்தூரில் அணை கட்டினால் எங்கள் வாழ் வாதாரமே பாதிக்கப்படும்’ என்பதையே தெரிவித்தனர். இந்த விஷயத்தில் ஒரே குடும்பத்தில் உள்ளவர்களிடமே மாறுபட்ட கருத்துகள் உள்ளதைக் கேட்க முடிந்தது.
அணை நல்லதுதான்
நெல்லிபதி அடுத்துள்ள தோடா வயல் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்ற இளைஞர் பேசும் போது, ‘சித்தூரில் அணை உருவாவது இங்கு உள்ள விவசாயிகளுக்கு எல்லாம் நல்லதுதான். கேரள அரசாங்கம் எக்காரணம் கொண்டும் இங்கு உள்ள விவசாயத்தையும், விவசாயிகளையும் கைவிடாது. அதற்கு மாற்றுத் திட்டம் கண்டிப்பா வைத்திருக்கும். அதை அணை கட்டும்போது எடுத்து விளக்க மாகவும் சொல்லும். அந்த நம்பிக்கை இங்கு உள்ள மக்களுக்கு இருக்கு. 1978-ம் ஆண்டிலேயே கட்ட வேண்டிய அணைன்னு இதை பெரியவங்க சொல்லிக் கேட்டிருக்கேன். அப்படி அப்பவே இது உருவாகி இருந்திருந்தா இத்தனை பிரச்சினை இருந்திருக்காது. 1 கி.மீ. முதல் 4 கி.மீ. வரை தண்ணீர் பம்ப்செட் வச்சு, இரும்புக் குழாய் வச்சு தோட்டத்துக்கு சொந்த செலவுல தண்ணி பாய்ச்ச வேண்டிய நிலை இருந்திருக்காது. அணை கட்டினா இங்கே நிலத்தடி நீர் ஊறும். அதுவும் தவிர அணையில் இருந்து வாய்க் கால்கள் மூலம் நிச்சயம் பாசன வசதி யையும், குடிநீர் வசதியையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும்’ என தெரிவித்தார்.
சித்தூர் தொடங்கி கூலிக்கடவு, கோட்டத்துறை வரை சிறுவாணி கிளை பரப்பும் பகுதிகள் எல்லாம் கரை யோரங்களில் ஆற்றில் நீர் உறிஞ்சும் மோட்டார் பம்ப் செட்களையும், அதற்கான அறைகளையும், அதை யொட்டி தண்ணீர் கொண்டு செல்ல இரும்புக் குழாய்களையும் காண நேர்ந்தது. இந்த பம்ப் செட் விவசாயி களிடம் பெரும்பாலும் அணை கட்டப் பட்டால் என்ன ஆகுமோ என்ற அச்சம் விரவிக் கிடப்பதையும் கணிக்க முடிந்தது.
அகழியில் இருந்து ஆனைகட்டி சோலையூர் பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் (தமிழக எல்லை) வேறுவித மான கருத்துகள் எதிரொலித்தன. அதாவது சித்தூர், வெங்கக்கடவில் அணை கட்டப்பட்டால் அந்த நீர் உபரியாகி இங்கு ஓடும் கொடுங்கரை பள்ளத்தில் பெருக்கெடுக்கும். வரு டத்தில் ஏழெட்டு மாதங்கள் வறண்டே கிடக்கும் இப்பள்ளம் ஆண்டு முழுக்க சிறுவாணி நீரால் வழிந்தோடும். எனவே அங்கே உள்ளவர்கள் சித் தூரில் அணை வருவதை ஆதரிக் கும் மனநிலையிலேயே இருந்தனர். இதே மனநிலையை தமிழகப் பகுதி யான ஆனைகட்டி, வீரபாண்டி பேரூராட்சி மக்களிடமும் காணமுடிந்தது.
சோதனைச் சாவடிகளில் மாமூல்
இப்பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் கூறியதாவது:
சித்தூரில் அணை கட்டுவதால் வீர பாண்டி பஞ்சாயத்தில் உள்ள கிராமங் கள் துளி கூட பாதிக்காது. ஏனென்றால் அங்கே அணை உருவானால் கொடுங் கரை பள்ளம் தண்ணீர் கூடுதலாக விவசாயத்துக்கு பயன்படும். தவிர, குடிதண்ணீருக்கும் எந்த பிரச்சினையும் இருக்காது. அதற்காக அங்கே அணை கட்டுவதால் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதி விவசாயிகளுக்கும், அங்கு உள்ள மக்களுக்கும் நிச்சயம் பெரிய பாதிப்பு வரும். அதில் சந்தேகமே இல்லை. அதற்காக இங்கு உள்ளவர்கள் சும்மாயிருக்க முடியாது. இங்கிருந்து சில மீட்டர் தூரம்தான் கேரளம்.
அங்கே ஓடும் ஆற்றிலோ, பள்ளத்திலோ ஒரு பிடி மணல் நாம் அள்ள முடியாது. அங்கே உள்ள ஒரு மரத்தை வெட்டிக் கொண்டு வர முடியாது. அந்த அளவுக்கு அங்கே சட்டமும், கெடுபிடிகளும் உள்ளன. ஆனால் தமிழகத்தில் இருந்துதான் மரங்கள், கற்கள், மணல் எல்லாம் செல்கிறது. அங்கு உள்ளவர்கள் இங்கே உள்ளவர்களிடம் ஆற்றில் டிராக் டரில் மணல் அள்ளித்தர சொல்லி வாங்குகிறார்கள். இங்கு உள்ளவர்களும் ஒரு டிராக்டர் லோடு ரூ.4 ஆயிரம் வரை விற்கிறார்கள். தினமும் நூற்றுக் கணக்கான டிராக்டர் லோடுகள் மணல் போகிறது.
அதேபோல்தான் சித்தூர் பகுதியில் ரோடு போடுகிறார்களோ, அணை கட்டுகிறார்களோ தெரியாது. தினமும் 100 முதல் 150 லோடு வரை கருங்கற்கள், சரளைக்கற்கள் கடந்த வாரம் வரை (இப்போது சிறுவாணி அணை பிரச்சினை எழுந்துள்ளதால் சரக்கு வருவதில்லையாம்) சென்றன. இதற்கு தமிழக சோதனைச் சாவடி களுக்கு லோடுக்கு இவ்வளவு என மாமூல் கொடுக்கப்படுகிறது.
தமிழகத்திலிருந்து மணல்
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு மணல், கிரேவல் மண், ஜல்லி போன்ற கனிம வளங்கள் எதுவும் கொண்டு போகக் கூடாது என்று விதிமுறை உள்ளது. அதைப்பற்றி கேட்டால் நேரடியாக மண், மணல், கற்கள் எடுத்துத்தான் அனுப் பக்கூடாது. அதையே இயந்திரத்தில் பண்படுத்தி ஜல்லிக்கற்களாக அனுப் பினால் அது கனிமவளத்துறை நடவடிக்கைக்கு பொருந்தாது என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
வாளையாறு வழியே, தேசிய நெடுஞ்சாலை வழியே இந்த பொருட்கள் கேரளா செல்வதற்கும், ஆனைகட்டி, வேலந்தாவளம் வழியே இந்த பொருட்கள் கேரளா செல்வதற்கும் ஒரு குறிப்பிட்ட அளவீடுகள் உள்ளன. அதை வைத்தாவது நடவடிக்கை எடுக்கலாம். அதை அதிகாரிகள் யாரும் செய்வதில்லை. இந்த வழியே செல்லும் கருங்கற்கள் உள்ளிட்ட அணை கட்ட பயன்படும் பொருட்களை தடுத்தாலே போதும், அங்கே அணை கட்டமுடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஊரைவிட்டு போக வேண்டும்
நெல்லிபதி அடுத்துள்ள தோடா வயல் கிராமத்தை (சித்தூரிலிருந்து 5 கி.மீ.) சேர்ந்த சின்னம்மாள் கூறும்போது, ‘என் தாத்தா பாட்டி காலத்தில் இருந்தே இங்கேதான் வசிக்கிறோம். சொந்தமா என் சகோதரிக்கும் சேர்த்து 7 ஏக்கர் நிலம் இருக்கு. இதில் பாக்கு, வாழை, தென்னை, பயறு வகைகள் விவசாயம் செய்து வர்றோம். இதுக்கு 500 அடி தூரத்தில் உள்ள சிறுவாணி ஆற்றில் இருந்துதான் பம்ப்செட் வச்சு தண்ணி எடுத்துட்டு வர்றோம். இப்படி வருஷம் முழுக்க தண்ணியில்லாமல் இருக்காது. விவசாயமும் நிற்காது. இதுபோல் சுற்றியுள்ள கிராமங்களிலும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் விவசாயம் செஞ்சுட்டு வர்றாங்க. அவங்களுக்கு எல்லாம் சித்தூர் அணை கட்டினா தண்ணி வராது. இதுவரைக்கும் அணை கட்டப் போறதா அதிகாரிகள் யாரும் வரலை. அப்படி வந்தா நாங்க போராட்டம் செய்வோம். கலெக்டர்கிட்ட மனு கொடுப்போம்’ என்றனர்.
சோமசுந்தரம் என்பவர் கூறும்போது, ‘நான் கோயமுத்தூர். அட்டப்பாடிக்கு வந்து 40 வருஷமாச்சு. சிறுவாணி, பவானி கரையில் மட்டும் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல பம்ப்செட் வச்சுத்தான் விவசாயம் செய்யுது. அதற்கு பங்கம் வந்தா சும்மா இருப்பாங்களா? அதையும் மீறி அங்கே அணை கட்டினா நாங்க எல்லாம் ஊரை விட்டுத்தான் போகணும்’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago