குமரியில் டாஸ்மாக் சரக்கு விற்பனை சரிவு; மதுவிலக்குப் போலீஸாரிடம் உதவி கேட்பு

குமரி மாவட்டத்தில், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு டாஸ்மாக் விற்பனை சரிந்துள்ளதால், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரின் உதவியை நாடியுள்ளனர் டாஸ்மாக் நிர்வாகிகள்.

குமரி மாவட்டத்தில், மது விற்பனை சமீப காலமாக வீழ்ச்சி யடைந்து வருகிறது. இதற்கு மாவட்டத்தில், வெளி மாநில மதுவகைகள் தாராளமாக கிடைப்பதுதான் காரணம். இதுதவிர, சட்டவிரோதமாக சில்லறை விற்பனையில் பலர் ஈடுபடுகின்றனர். டாஸ்மாக் கடைகளில், பாட்டிலில் சரக்கை எடுத்து விட்டு, தண்ணீர் கலக்கும் வேலையும் நடக்கிறது.

குடிமகன்களின் வாழ்வாதாரத்தில் கை வைக்கும், இப்பிரச்னையை கண்டு கிளர்ந்து எழுந்த குமரி மாவட்ட மதுவிலக்கு போலீசார், ஆயம் அதிகாரிகள், டாஸ்மாக் அதிகாரிகள் ஆகியோர் இணைந்து, அவசரக் கூட்டத்தை கடந்த 11ம் தேதி கூட்டினர்.

அனைத்து துறையும் கைகோர்ப்பு

இதில், பார் உரிமையாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஓட்டல் பார் முதலாளிகள், டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் ஆகியோரை அழைத்து கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, சனிக்கிழமை முதல் முறையாக, டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், மேற்பார்வையாளர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

குழித்துறை மதுவிலக்கு ஆய்வாளர் பால்துரை: குமரி மாவட்டத்தில், போலி மதுபான பாட்டில்களின் விற்பனை அதிகரித்துள்ளது. போதாக்குறைக்கு மிலிட்டரி கேண்டீனில் விநியோகிக்கப்படும், மதுபாட்டில்களும் சட்டவிரோதமாக விற்கப்படுகிறது. பார் திறந்து, அடைக்கும் நேரத்தை, டாஸ்மாக் ஊழியர்கள் சரியாக பின்பற்ற வேண்டும். போலி மதுபான விற்பனை நடப்பது தொடர்பாக, தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு தரப்படும்.

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏ.டி.எஸ்.பி பாலகிருஷ்ணன்: கன்னியாகுமரி மாவட்டத்தில், சில கடைகளில் தவறு நடப்பதாக புகார் வந்துள்ளது. முறைகேடான விற்பனை பற்றி தகவல் தெரிந்தால், 10581 என்ற இலவச எண்ணுக்கு அழைத்து புகார் சொல்லலாம். (இவர் பேசிக்கொண்டிருந்த போதே கூட்டத்தில் இருந்து ஒரு அறிவார்ந்த கேள்வி வந்து விழுந்தது)

பத்து மணிக்கு ஒயின்ஷாப் பூட்டுறாங்க. அதே நேரத்தில் பாரையும் பூட்டுறோம். பத்து மணிக்கு சரக்கு வாங்கிட்டு, உள்ள வர்றவங்க சண்டைக்கு வர்றாங்க, என்ன செய்றதுன்னு கேட்கவே, கூட 15 நிமிஷம் டைம் எடுத்துக்கோங்கோ என்று குத்து மதிப்பாக பஞ்சாயத்தை முடித்தார் ஏ.டி.எஸ்.பி.

என்னவென்று சொல்வது!

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 839 டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி உத்தரவு போட்டுள்ள நிலையில், அவற்றை கிராமப் பகுதிகளுக்குள் கொண்டு போய்க் கொண்டிருக்கிறது டாஸ்மாக் நிர்வாகம். அதற்கே பொதுமக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ள நிலையில், சரக்கு விற்பனை சரிந்து போனதை நினைத்து கவலைப்படும் அரசு இயந்திரங்களை என்னவென்று சொல்வது?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE